பத்தாம் வகுப்பு தமிழ் வினா-விடைத் தொகுப்பு இயல் – 2

பத்தாம் வகுப்பு தமிழ்     வினா-விடைத் தொகுப்பு       இயல் – 2

உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                    

1’வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்  ஆயுள் பெருக்கம் உண்டாம்’ – இப்பாடல்

          அடிகளுக்கு உரியவர்———-.

அ) இளங்கோவடிகள்             ஆ) கம்பர்              இ) ஓளவையார்  ஈ) திருமூலர்

2.  திருமூலர் இயற்றிய  நூல் ————-.

) திருமந்திரம்           ஆ) திருவாசகம்       இ) திருப்பாவை  ஈ) சிலப்பதிக்காரம்

3.  மூச்சிப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர் –

          அ) இளங்கோவடிகள்          ஆ) கம்பர்         இ) ஓளவையார்     ஈ) திருமூலர்

4.  கிழக்கிலிருந்து வீசும் காற்று ————.

) கொண்டல்                      ஆ) வாடை            இ) தென்றல்         ஈ) கோடை

5.  மேற்கிலிருந்து வீசும் காற்று ————.

          அ) கொண்டல்              ஆ) வாடை            இ) தென்றல்                   ஈ) கோடை

6. வடக்கிலிருந்து  வீசும் காற்று ————.

அ) கொண்டல்              ஆ) வாடை         இ) தென்றல்         ஈ) கோடை

7. தெற்கிலிருந்து வீசும் காற்று ————.

) கொண்டல்             ஆ) வாடை             இ) தென்றல்        ஈ) கோடை

8. ’வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்’ – இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் —-.

          அ)  புறநானூறு       ஆ) தென்றல் விடு தூது       இ) சிலப்பதிகாரம்     ஈ) நற்றிணை

9.  ’நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பில்  செந்தமிழின் பின்னுதித்த

          தென்றலே’ – இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் ———-.

          அபுறநானூறு      ஆ) தென்றல் விடு தூது       இ) சிலப்பதிகாரம்      ஈ) நற்றிணை

10. ’வளி மிகின் வலி இல்லை’ என்று கூறியவர்——-.

          அ) இளங்கோவடிகள்        ஆ) கம்பர்           இ) ஓளவையார்     ஈ) ஐயூர் முடவனார்

11. ’வளி மிகின் வலி இல்லை’ இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் ———.

) புறநானூறு                         ஆ) தென்றல் விடு தூது   இ) சிலப்பதிகாரம்     ஈ) நற்றிணை

12. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலம் ——-

) வடகிழக்கு பருவக்காலம்                    ஆ) தென்கிழக்கு பருவக்காலம்        

இ) வடமேற்கு பருவக்காலம்                     ஈ) தென்மேற்கு பருவக்காலம்                 

13. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் ——-

) வடகிழக்கு  பருவக்காலம்                 ஆ) தென்கிழக்கு பருவக்காலம்                       

இ) வடமேற்கு பருவக்காலம்                     ஈ) தென்மேற்கு பருவக்காலம்  

14. ஒரு மனிதன் ஒரு மணித்துளிக்கு வெளியிடும் கார்பன் டை ஆக்சைடின் அளவு—

          அ)  10 முதல் 18 வரை                                ஆ) 11 முதல் 16 வரை               

இ) 12 முதல் 18 வரை                                        ஈ) 11 முதல் 18 வரை

15. உலக காற்று நாள் ——–         

          அ) ஜூன் 15               ஆ) ஜூன் 12                 இ) ஜுலை 15          ஈ) ஜுலை 12

16. ’நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா’ யார்?

அ) இளங்கோவடிகள்             ஆ) கம்பர்    இ) பாரதியார்       ஈ) ஐயூர் முடவனார்

17. சிந்துக்குத் தந்தை யார்?

அ) இளங்கோவடிகள்             ஆ) கம்பர்    இ) ஓளவையார்     ஈ) பாரதியார்

18. பாட்டுக்கொரு புலவன் யார்?

அ) இளங்கோவடிகள்                     ஆ) கம்பர்     இ) ஓளவையார்     ஈ) பாரதியார்

19. புதிய ஆத்திசூடியை இயற்றியவர் யார்?

அ) நக்கீரர்                           ஆ) கம்பர்     இ) ஓளவையார்     ஈ) பாரதியார்

20.         முல்லைப்பாட்டை இயற்றியவர் யார்?

அ) இளங்கோவடிகள்   ஆ) நப்பூதனார்       இ) ஓளவையார்             ஈ) பாரதியார்

21 பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் ————-

) முல்லைப்பாட்டு                                    ஆ) மதுரைக்காஞ்சி

இ) நெடுநல்வாடை                                               ஈ) திருமுருகாற்றுப்படை

22.முல்லைப்பாட்டு ————- அடிகளைக் கொண்டது

          ) 103                          ஆ) 105                 இ) 15                    ஈ) 400

23.காலம் காட்டும் இடைநிலைகள் தொக்கி நிற்கும் பெயரெச்சம் ————–.

          அ) வேற்றுமைத்தொகை                                        ஆ) வினைத்தொகை

இ) உம்மைத்தொகை                                   ஈ) பண்புத்தொகை

24.காலங்கரந்த பெயரெச்சம் ———-

          அ) வேற்றுமைத்தொகை                                        ஆ) வினைத்தொகை

இ) உம்மைத்தொகை                                   ஈ) பண்புத்தொகை

25.”உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்

          உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்” – பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள

          நயங்கள் யாவை?

          அ)  உருவகம், எதுகை                                 ஆ) மோனை, எதுகை          

இ) முரண், இயைபு                                       ஈ) உவமை, எதுகை

26.செய்தி 1 –   ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15ஐ உலகக்காற்று நாளாகக் கொண்டாடி

                                      வருகிறோம்.

          செய்தி 2 –   காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாம்

                             இடத்தில் உள்ளது எனக்குப் பெருமையே.     

          செய்தி 3 –   காற்றின் ஆற்றலைக் கொண்டு கடல்கடந்து வாணிகம் செய்து அதில்

                             வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்.

          அ) செய்தி 1 மட்டும் சரி                                 ஆ) செய்தி 1,2 ஆகியன சரி

இ) செய்தி 3 மட்டும் சரி                                ஈ) செய்தி 1,3 ஆகியன சரி

27.பாடு இமிழ் பனிக்கடல் பருகி” என்னும் முல்லைப்பாட்டு உணர்த்தும் அறிவியல்

       செய்தி ——-.

          அ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல்         ஆ) கடல் நீர் குளிர்ச்சியடைதல்

இ) கடல் நீர் ஒலித்தல்                                   ஈ) கடல் நீர் கொந்தளித்தல்

28.’பெரிய மீசை’ சிரித்தார் – வண்ணச்சொல்லுக்கான தொகையின் வகை——

          அ)  வேற்றுமைத்தொகை                             ஆ) அன்மொழித்தொகை

இ) உம்மைத்தொகை                                   ஈ) பண்புத்தொகை

29. தொல்காப்பியம் உலகம் ——– ஆல் ஆனது என்கிறார்.

அ) ஐம்பொறிகளால்                                      ஆ) ஐம்பூதங்களால் 

இ)  உலோகங்களால்                                    ஈ)  வேதிப்பொருளால்

30. ஹிப்பாலஸ் என்பவர் ஒரு ——— மாலுமி.

அ) ரஷ்ய               ஆ) சீன                 இ) அமெரிக்க       ஈ) கிரேக்க

31. தற்போது காற்று மாசுபாட்டைக் குறைக்கும்  விதமாக குளிர்ப்பதனத்தில் ————

 பயன்படுத்தப்படுவது.

அ) ஹைட்ரோ கார்பன்                              ஆ) குளோரோ புளோரோ கார்பன்         

இ) கந்தக டை ஆக்சைடு                                       ஈ) நைட்ரஜன் டை ஆட்சைடு

32. ஓசோன் படலத்தின்  சிதைவால் ஏற்படும் விளைவு —–.

அ) புற ஊதா கதிர்களின் நுழைவு           ஆ) பூமியில் ஏலியஸ்களின் நுழைவு   

இ) விமான விபத்து                                       ஈ) அமில மழை பொழிதல்

33. கந்தக டை ஆக்சைடும் நைட்ரஜன் டை ஆட்சைடும் நீரில் கலப்பதால் ஏற்படும் விளைவு

—-.

அ) புற ஊதா கதிர்களின் நுழைவு              ஆ) பூமியில் ஏலியஸ்களின் நுழைவு

இ) விமான விபத்து                                      ஈ) அமில மழை பொழிதல்

34. வேற்றுமை உருபுகள் மறைந்து வருவது ———– தொடர் ஆகும்.

அ) தொகைநிலைத்தொடர்                       ஆ) தொகாநிலைத்தொடர்

இ) விளித்தொடர்                                         ஈ) வினையெச்சத்தொடர்

35. தொகைநிலைத்தொடர் ———– வகைப்படும்.

      அ) ஆறு               ஆ) எட்டு               இ) ஒன்பது           ஈ) பத்து

36.  மதுரை சென்       றார் – இத்தொடரில் உள்ள தொகை

     அ) வேற்றுமைத் தொகை                                   ஆ) வினைத்தொகை

இ) பண்புத்தொகை                                                ஈ) அன்மொழித்தொகை

37. ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து

மறைந்து வருவது ——— தொகை ஆகும்.

அ) உருபும் பயனும் உடன்தொக்க தொகை                 ஆ) வினைத்தொகை

இ) பண்புத்தொகை                                                ஈ) அன்மொழித்தொகை

38. வீசுதென்றல், கொல்களிறு  – இச்சொற்களில் இடம்பெற்றுள்ள தொகை ——

தொகை.

அ) வேற்றுமைத் தொகை                                      ஆ) வினைத்தொகை  

இ) பண்புத்தொகை                                               ஈ) அன்மொழித்தொகை

39. செங்காந்தல், வட்டத்தொட்டி, இன்மொழி – இச்சொற்களில் இடம்பெற்றுள்ள தொகை –

—– தொகை.

அ) வேற்றுமைத் தொகை                                      ஆ) வினைத்தொகை    

இ) பண்புத்தொகை                                            ஈ) அன்மொழித்தொகை

40. சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் ‘ஆகிய’ என்னும் பண்பு

உருபு தொக்கி வருவது———- தொகை ஆகும்.

அ) உருபும் பயனும் உடன்தொக்க தொகை   ஆ) வினைத்தொகை

இ) பண்புத்தொகை                                      ஈ) இரு பெயரொட்டுப் பண்புத்தொகை

41. மார்கழித் திங்கள், சாரைப்பாம்பு இச்சொற்களில் இடம்பெற்றுள்ள தொகை –

—– தொகை.

அ) உருபும் பயனும் உடன்தொக்க தொகை   ஆ) வினைத்தொகை

இ) பண்புத்தொகை                                      ஈ) இரு பெயரொட்டுப் பண்புத்தொகை

42. மலர்க்கை – இச்சொல்லில் இடம்பெற்றுள்ள தொகை —– தொகை.

 அ) வேற்றுமைத் தொகை                            ஆ) வினைத்தொகை    

இ) பண்புத்தொகை                                       ஈ) உவமைத்தொகை

43. மலர்க்கை – இச்சொல்லில் வரும் ‘கை’ என்பது ———-.

அ) உவமை                                                          ஆ) உவமேயம்

இ) உவம உருபு                                           ஈ) பொதுத்தன்மை

44. மலர்க்கை – இச்சொல்லில் வரும் ‘மலர்’ என்பது ———-.

அ) உவமை                                                         ஆ) உவமேயம்

இ) உவம உருபு                                           ஈ) பொதுத்தன்மை

45. இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் ‘உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து

வருவது ———- ஆகும்.

அ) வேற்றுமைத் தொகை                             ஆ) வினைத்தொகை    

இ) பண்புத்தொகை                                       ஈ) உம்மைத்தொகை

46. அண்ணன் தம்பி, தாய்சேய் – இச்சொற்களில் இடம்பெற்றுள்ள தொகை –————

அ) வேற்றுமைத் தொகை                             ஆ) வினைத்தொகை    

இ) உவமைத்தொகை                                  ஈ) உம்மைத்தொகை

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடைளிக்க.

  1. ”நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு

—————————————————-

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்

உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்

நடுங்கு சுவல் அசைந்த கையள், “கைய

கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர

இன்னே வருகுவர், தாயர்”

1. இப்பாடலின் ஆசிரியர்?

அ) நக்கீரர்                                ஆ) நப்பூதனார்    

இ) முடத்தாமைக் கண்ணியார்   ஈ) முடியரசன்

2. இப்பாடல் இடம்பெற்ற நூல்?

அ) முல்லைப்பாட்டு                ஆ) குறிஞ்சிப்பாட்டு 

இ) திருமுருகாற்றுப்படை                   ஈ) கூத்தராற்றுப்படை

3. இலக்கணக்குறிப்புத் தருக – உறுதுயர்

அ) பண்புத்தொகை                           ஆ) வினைத்தொகை 

இ) உவமைத்தொகை              ஈ) உம்மைத்தொகை

4. பொருள் தருக – தாம்பு

அ) பாம்பு                                  ஆ) கொம்பு 

இ) கயிறு                                ஈ) நூல்

5. பிரித்து எழுதுக – பெரும்பெயல்

அ) பெரும்+பெயல்                             ஆ) பெரு+பெயல்

இ) பெருமை+பெயல்                        ஈ) பேரு+பெயல்

(அசைந்த, பொறித்த, நிமிர்ந்த, எழுந்த,  பொழிந்த, கொண்ட, தொடுத்த,  – பெயரெச்சம்; பருகி, கொண்டு, ஆர்ப்ப, நோக்கி – வினையெச்சம்; உறுதுயர், தடக்கை- உரிச்சொற்றொடர்; வளைஇ – சொல்லிசை அளபெடை; மாஅல் – செய்யுளிசை அளபெடை; பாடுஇமிழ், – வினைத்தொகை; பெரும்பெயல், புன்மாலை, அருங்கடி, மூதூர், பெருமுது, கொடுங்கோ, நன்மொழி – பண்புத்தொகை; கைதொழுது – மூன்றாம் வேற்றுமைத்தொகை; கேட்டனம் – தன்மைப்பன்மை வினைமுற்று)

குறுவினாக்கள்

1. நமக்கு உயிர் காற்று

        காற்றுக்கு வரம் மரம்

        மரங்களை வெட்டி எறியாமல்

        நட்டு வளர்ப்போம்  – இத்தொடர்களைப் போலவே   உலக காற்று நாள்  

        விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத்தொடர்கள் எழுதுக.

  • மாசடைந்த காற்று  உயிரைக் கொல்லும் என்பது உணர்க!
  • காற்று  மாசைக் குறைக்க மரங்களை நட்டு வளர்க்க!

2.         வசன கவிதை குறிப்பு தருக.

  • உரைநடையிலும் கவிதையிலும் இணைத்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது. 
  • ஆங்கிலத்தில் இதை prose poetry என்றழைப்பர்.
  • இந்த  வடிவம் தமிழில் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

3. தண்ணீர் குடி,  தயிர்க்குடம் ஆகிய தொகைச் சொற்களை விரித்து எழுதுக ;  

     தொடரில் அமைக்க.

  • தண்ணீர் குடி – தண்ணீரைக்குடி  – இரண்டாம் வேற்றுமைத்தொகை
  • நோயற்ற வாழ்வு வாழ  மிகுதியான தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
  • தயிர்க்குடம்  –  தயிரை உடைய குடம் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை
  • என் வீட்டில் தயிரை உடைய குடத்தைப் பார்த்தேன்.

4. பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத்  தாமதமாகும் போது தம்பிக்கு நீங்கள்    

       கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.

  • தம்பி அழாமல் இரு!
  • அம்மா அருகில் கடைக்குத்தான் சென்றுள்ளார்கள்.
  • அம்மா விரைவாக வந்துவிடுவார்கள்.
  • நான் உன்னோடு விளையாட வருகிறேன். நாம் இருவரும் சேர்ந்து விளையாடலாம்.

5. மாஅல் பொருளும் இலக்கணக்குறிப்பும் தருக.

  • மாஅல்  என்பதன் பொருள் திருமால் ஆகும்.
  • அதாவது,  (ஓரடியால் உலகத்தை அளப்பதற்குப் பெருவடிவம்  கொண்ட திருமால்)
  • மாஅல் என்பதன் இலக்கணக்குறிப்பு  இசைநிறை அளபெடை அல்லது செய்யுளிசை அளபெடை ஆகும்.

கூடுதல் வினாக்கள்

  1. காற்றுக்கு வழங்கும் வேறுப்பெயர்கள் யாவை?

வளி, தென்றல், புயல், சூறாவளி, பூங்காற்று, கடல்காற்று, பனிக்காற்று, வாடைக்காற்று முதலியன.

  • காற்றுக்கு நான்கு திசையிலும் வழங்கும் பெயர்கள் எவை?

கிழக்கு – கொண்டல்

மேற்கு – வெப்பக்காற்று, கோடைக்காற்று

வடக்கு – வாடைக்காற்று

தெற்கு – தென்றல் காற்று

  • ஹிப்பாலஸ் பருவக்காற்று என்றால் என்ன?

கிரேக்க மாலுமி ஹிப்பாலஸ், நடுக்கடல் வழியாக நேராகவும் விரைவாகவும் முசிறித் துறைமுகத்திற்குச் செல்வதற்கான வழியினைக் கண்டுபிடித்தார்.  அதனால் பயனடைந்த கிரேக்கர்களும் யவனர்களும்  அவர்பெயரையே அக்காற்றுக்கு வைத்தனர். அதுவே ஹிப்பாலஸ் பருவக்காற்று என்றழைக்கப்படுகிறது.

  • தென்மேற்கு மற்றும்  வடகிழக்குப் பருவக்காலங்கள் பற்றி கூறுக.
  • இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலும் வீசும் காற்று தென்மேற்குப் பருவக்காற்றாகும்.
  • இந்தியாவில் அதிக மழைப்பொழிவைத் தரக்கூடியது இக்காற்றுதான்.
  • இந்தியாவில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் வீசும் காற்று வடகிழக்குப் பருவக்காற்று ஆகும்.
  • இதனால் தமிழகம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களே பயன்பெறும். இருப்பினும் தமிழகத்திற்கு மழையைத் தரக்கூடியது இக்காற்றே ஆகும்.
  • காற்றாலை மின் உற்பத்தி பற்றிக் கூறுக.
  • பருவக்காற்றினைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பதே காற்றாலை மின் உற்பத்தி ஆகும்.
  • உலகக் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா ஐந்தாம் இடத்தில் உள்ளது.
  • இந்தியாவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.
  • காற்று மாசுபாடு என்றால் என்ன?
  • குப்பைகள், நெகிழிப்பைகள், மெது உருளை போன்றவற்றை எரிப்பது, குளிர்சாதனப்பெட்டி, குளிரூட்டும் அறை முதலியவற்றை மிகுதியாக எரிப்பது, மிகுதியாகப் பட்டாசுகளை வெடிப்பது, புகை வடிக்கட்டி இல்லாமல் தொழிற்சாலைகளை இயக்குவது  முதலிய காரணங்களினால் காற்று மாசுபாடு அடைகிறது.
  • இதனால், கண் எரிச்சல், தலைவலி, தொண்டைக்கட்டு, காய்ச்சல், நுரையீரல் புற்றுநோய், இளைப்பு நோய் முதலிய நோய்கள் ஏற்படும்.
  • ஓசோன் படலம் பாதிப்படைகிறது.
  • பாரதியார் குறிப்பு வரைக.

பெயர் – பாரதியார்

பெற்றோர் – சின்னசாமி, இலக்குமி அம்மையார்

சிறப்பு

  • ’நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா’, ‘சிந்துக்குத் தந்தை’ , ‘பாட்டுக்கொரு புலவன்’ என்றெல்லாம் போற்றப்பட்டவர்.
  • கவிஞர், கட்டுரையாளர்,
  • கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய இலக்கியங்களைப் படைத்தவர்
  • இந்தியா, சுதேசமித்திரன் முதலிய இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியவர்
  • புதுக்கவிதை வடிவம் உருவாகக் காரணம் என்ன?
  • உணர்ச்சி பொங்கக் கவிதை படைக்கும் இடங்களில் யாப்பு, தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் வசனகவிதை வடிவத்தை கையாண்டார். அதுவே புதுக்கவிதை வடிவம் உருவாகக் காரணமாயிற்று.
  • விரிச்சி கேட்டல் என்றால் என்ன?
  • ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ? என ஐயம் கொண்ட பெண்கள், மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் ஊர்ப்பக்கத்தில் போய், தெய்வத்தைத் தொழுது நின்று அயலால் பேசும் சொற்களைக் கூர்ந்து கேட்பர்.
  • அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் நன்மையில் முடியும் என்றும், தீய மொழியைக் கூறின் தீதாய் முடியும் என்றும் கருதுவர். இதுவே விரிச்சிக் கேட்டல் ஆகும்.
  • முல்லைப் பாட்டு குறிப்பு வரைக.
  • முல்லைப்பாட்டு பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
  • பத்துப்பாட்டில் குறைந்த அடிகளைக் கொண்ட நூல் இது.
  • இது 103 அடிகளைக் கொண்டது.
  • இது ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது.
  • முல்லை நிலத்தைப் பற்றி பாடப்பட்டது.
  • இதன் ஆசிரியர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார்.
  • சொற்றொடர் அல்லது தொடர் என்றால் என்ன?
  • சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது “சொற்றொடர்” எனப்படும்.
  • சான்று : நீர் பருகினான்.
  1. தொகைநிலைத் தொடர் என்றால் என்ன?
  2. பெயர்ச்சொல்லோடு பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் சேரும் தொடரின் இடையில் உருபுகள் ஏதேனும்  மறைந்து  வருவது தொகைநிலைத் தொடர் எனப்படும்.
  3. இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்கள் ஒருசொல்போல நிற்கும்.
  4. கரும்பு தின்றான் – கரும்பைத் தின்றான் – ஐ என்னும் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது.
  5. தொகாநிலைத் தொடர் என்றால் என்ன?
  6. உருபுகள் மறையாமல் வரும் தொடர் தொகாநிலைத் தொடர் ஆகும்.
  7. கரும்பைத் தின்றான் – இதில் உருபு மறையாமல் வெளிப்படையாக வந்துள்ளது.
  8. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?அவை யாவை?
  9. தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும். அவை, வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை,  உவமைதொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை
  10. வேற்றுமைத்தொகை என்றால் என்ன?
  11. இரண்டு சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபுகளுள் ஏதேனும் ஒன்று மறைந்து வந்து பொருள்தருவது வேற்றுமைத்தொகை எனப்படும்.
  12. மதுரை சென்றார்
  13. உருபும் பயனும் உடன்தொக்க தொகை என்றால் என்ன?
  14. ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் ஆகிய இரண்டும் மறைந்து வருவது உருபும் பயனும் உடன்தொக்க தொகை எனப்படும்.
  15. தேர்ப்பாகன்
  16. வினைத்தொகை என்றால் என்ன?
  17. காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க, வினைப்பகுதியைத் தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் நடப்பது வினைத்தொகை எனப்படும்.
  18. அதாவது காலம் கரந்த பெயரெச்சமே வினைத்தொகை ஆகும்.
  19. கொல்களிறு
  20.  பண்புத்தொகை என்றால் என்ன?
  21. வண்ணம், வடிவம், அளவு, சுவை முதலியவற்றை உணர்த்தும் பண்புப்பெயருக்கும் அது தழுவிநிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் ’மை’ என்னும் பண்பு விகுதியும் ’ஆகிய’ என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.
  22. செந்தமிழ்
  23.  இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்றால் என்ன?
  24. ஒரு தொடரில் சிறப்பு பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில்  ’ஆகிய’ என்னும் பண்பு உருபு தொக்கி வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகை  எனப்படும்.
  25. சாரைப்பாம்பு
  26.  உவமைத்தொகை என்றால் என்ன?
  27. உவமைக்கும் பொருளுக்கும் இடையில் உவம உருபு மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.
  28. மதிமுகம்
  29.  உம்மைத்தொகை என்றால்  என்ன?
  30. இருசொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் ‘உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத்தொகை எனப்படும்.
  31. தாய்சேய்
  32. அன்மொழித்தொகை என்றால் என்ன?
  33. வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள் அவை அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித்தொகை ஆகும்.
  34. சிவப்புச் சட்டை பேசினார்.

சிறுவினாக்கள்

1. உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான், இலக்கியத்தில் நான்,

முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்… .. முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு நீர் தன்னைப் பற்றி பேசினால் கற்பனையில் தலைப்புகளை எழுதுக.

  • உயிரிங்களின் உணவு நான் – (தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு உணவாக அமைவதால்)
  • இயற்கை அமைப்பிற்கு அடிப்படை நான் (நிலத் தோற்றம்)
  • ஆற்றலாக நான் (நீர் மின்சாரம் )
  • என் இருப்பிடத்தைக் கொண்டு எனக்கு பல பெயர்கள் ( கடல், ஆறு, ஏரி, குளம், கேணி, குட்டை முதலியன)
  • என் நகர்வைக் கொண்டு எனக்குப் பல பெயர்கள் ( அருவி, நதி, ஆறு)
  • இலக்கியங்களில்  ஆதார அமைப்பாக நான் ( மக்கள் வாழ்வைத் தீர்மானிக்கக்கூடியது)
  • நானின்றி வேளாண்மையில்லை

2. சோலைக்(பூங்கா)காற்றும் மின்விசிறி காற்றும் பேசுவது போல் ஒரு உரையாடல்    

          அமைக்க.

சோலைக்காற்று  : வணக்கம் மின்விசிறிக் காற்றே, நலமாக உள்ளாயா?

மின்விசிறிக்காற்று : வணக்கம் சோலைக்காற்றே, நலமாக உள்ளேன். ஆனால்,    

                          இன்பமாக இல்லை. நீயோ எங்கும் சுற்றித்திரிகிறாய் ; நானோ

            அடைபட்டுக்கிடக்கிறேன். அவ்வாறு இருக்கையில் எப்படி           

            இன்பமாக இருப்பது?

சோலைக்காற்று : நானும்தான்  இன்பமாக இல்லை நண்பா!.  ஏனெனில் மனிதன்

என்னை அன்றாடம் மாசுபடுத்திக் கொண்டிருக்கிறான். நான் தாவரங்களிலும் அவற்றிலுள்ள பூக்களிலும் தவழ்ந்து அவைகளுக்கும் உயிரினங்களுக்கும் இன்பத்தை வழங்கி வந்தேன். தற்போது மாசடைந்துகொண்டிருக்கும் நான் அவைகளுக்குத் துன்பத்தைத்  தான் தருகின்றேன். நான் இயற்கையின் கட்டுப்பாட்டில் இயங்குவது மட்டும்தான் இப்போதைக்கு ஆறுதலான ஒன்று.

மின்விசிறி காற்று        : எனக்கு அந்த ஆறுதலும் இல்லை. நான் செயற்கையின்

கட்டுப்பாட்டில் இயங்குவதால் மனிதர்களுக்கு மட்டுமே    

இன்பத்தை வழங்குகிறேன். 

சோலைக்காற்று : சரி நண்பா, எப்படியிருந்தாலும் நம் பணியினை நாம்தானே

                                செய்யவேண்டும். புறப்படலாம் வா!

மின்விசிறி காற்று        : சரி நண்பா, மீண்டும் சந்திக்கலாம் ! நன்றி!

3. தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும்வழியில் ஆடுமாடுகளுக்குத்

        தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்கடிகாரத்தில் மணி

        பார்த்தாள். இப்பத்தியில் அமைந்துள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு,

        விவரித்து எழுதுக.

மல்லிகைப்பூ                       –   இருபெயரொட்டுப் பண்புத்தொகை.

பூங்கொடி                   –   இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும்   

                                               உடன்தொக்கத்தொகை.

ஆடுமாடுகளுக்குத்               –   உம்மைத்தொகை

தண்ணீர்த் தொட்டியில் –   இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும்   

                                               உடன்தொக்கத்தொகை.

குடிநீர்                       –   வினைத்தொகை

குடிநீர் நிரப்பினாள்               –   இரண்டாம் வேற்றுமைத்தொகை

சுவர்கடிகாரத்தில்         –   ஏழாம் வேற்றுமைத்தொகை

மணி பார்த்தாள்            –   இரண்டாம் வேற்றுமைத்தொகை

4.         மழை நின்றவுடன் புலப்படும் காட்சியை வருணித்து எழுதுக.

             (குறிப்பு: இலையில் சொட்டும் நீர்- உடலில் ஓடும் மெல்லிய குளிர் – தேங்கிய   

      குட்டையில் ‘சளப் தபப்’ என்று குதிக்கும் குழந்தைகள் – ஓடும் நீரில் காகிதக்கப்பல்.)

  • பூமியை மகிழ்வித்த மழை, நின்றபிறகும் இலையிலிருந்து சொட்டும் நீரின் அழகுகோ புனைகின்ற ஓவியம்!
  •  நம் உடலில் ஓடும் மெல்லிய குளிர், மலைத்தொடர்களில்  மேகக்கூட்டங்களில் தவழ்ந்த நிகழ்வை நினைவுபடுத்தும்  நாட்குறிப்பு!
  • தேங்கிய குட்டையில் ‘சளப் தபப்’ என்று குதிக்கும் குழந்தைகள் அந்தந்த வயது செயல்பாட்டிற்கான அடையாளம்!
  • ஓடும் நீரில் குழந்தைகள் விடும் காகிதக்கப்பல் , அறிவியல் சிந்தனையின் தொடக்கம்!
  • மொத்தத்தில் மழைக்காலம் நம்மை மகிழ்விக்கும் காலம்!

உரைப்பத்தி  வினா- விடை

புறநானூற்றிலும் சிலப்பதிகாரத்திலும் தமிழகத்தின் வடக்கெல்லை வேங்கட மலையாகவும்     தெற்கெல்லை          குமரிமுனையாகவும் கூறப்படுவதனைப் படித்தபோது எனது நெஞ்சம் இறும்பூது  எய்தியது. மலையும் கடலும் ஒரு நாட்டின் இயற்கை எல்லைகளாக அமைவதென்பது  அந்த         நாட்டின் தவப்பயனாகும்.

       அ)  தமிழகத்தின்  எல்லையைக் கூறும் இலக்கியங்கள் எவை?

              புறநானூறு

       ஆ) தமிழகத்தின் தெற்கெல்லை எது?

              குமரிமுனை

       இ)  ஒரு நாட்டின் தவப்பயன்  யாது?

              மலையும் கடலும் ஒரு நாட்டின் இயற்கை எல்லைகளாக    

              அமைவதென்பது  அந்த நாட்டின் தவப்பயனாகும்.

நெடுவினாக்கள்

 1. முல்லைப் பாட்டில்  உள்ள  கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.

கார்கால மழை

கார்காலம் தொடங்கிவிட்டது.  கடல் நீரை முகந்துகொண்டு மழைமேகமானது  திருமாலின் நிறம் கொண்டு, மாவலி மன்னன்முன் விண்ணுக்கும் மண்ணுக்குமாகப்  பேருருவம் கொண்டதுபோல் வளமாய் எழுந்து, மலையைச் சூழ்ந்து, பெருமழை பொழிந்தது. 

நற்சொல் கேட்டு நிற்றல்

மாலைப் பொழுதில் தலைவனைப் பிரிந்த தலைவியின் துயரத்தைப் போக்கக்  கருதிய முதுப்பெண்கள், ஊரின் புறத்தே சென்று முல்லைப் பூவுடன் நெல்லையும்  சேர்த்து தூவி,  தெய்வத்தைத்  தொழுதனர்.  தலைவிக்காக நற்சொல் கேட்டு  நின்றனர்.

இன்னே வருகுவர் தாயர்

அப்போது  யாரோ ஒரு  ஆயமகள்,  சிறுதாம்பு கயிற்றால் கட்டப்பட்ட,  பசியால் வாடிய கன்றின்  வருத்தத்தைப் போக்க நினைத்து அதனிடம் , ”மிகுதியாகப் புல்லை மேய்ந்த  உன் தாய்,  வளைந்த கத்தியை கையில் உடைய இடையர்  ஓட்டி வர,  இப்போது வந்துவிடுவாள். வருந்தாதே! ” என்று கூறினாள்.

தலைவியை ஆற்றுப்படுத்துதல்

அதனை நற்சொல் எனக் கொண்ட முதுப்பெண்கள் தலைவியிடம் சென்று,  நற்சொல்லைக் கேட்டோம்.  அதனால் தலைவர் திரும்பி வருவது உறுதி.  எனவே,  உன் துயரத்தை  விட்டுவிடுவாயாக என்று ஆற்றுப்படுத்தினாள். 

2.         மலர்ந்தும் மலராத பாதிமலர் போல்

                வளரும் விழி வண்ணமே – வந்து

விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

                விளைந்த கலை அன்னமே

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

                நடந்த இளந் தென்றலே – வளர்

பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு

பொலிந்த  தமிழ் மன்றமே.    – கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி  உரைசெய்க.

  • அனைவருக்கும் வணக்கம். கவியரசு கண்ணதாசனின் படைப்புகள் அனைத்தும் தத்துவம் என்றே கூறலாம். அவ்வகையில் மலர்ந்தும் மலராத எனத் தொடங்கும் இப்பாடல் நயமிக்கது.
  • இப்பாடலில், இனிய தென்றல் காற்றானது மணமிக்க மலர்களில் உள்ள வாசனை உட்கொண்டு உலா வருவதோடு,    
  • நதியில் விளையாடி அதன் குளிர்ச்சியைப் பெற்று பூங்கொடியில் தலைசீவி அதன் மலரில் உள்ளத் தேனை நுகர்ந்து  பல மலை முகடுகளில் நடந்து வரும் என்று தென்றல் காற்றின் பெருமையைக் கண்ணதாசன் அழகுறப் பாடுகிறார். 
  • மேலும் இப்பாடலில், தன் தங்கையை அண்ணன் மலர்ந்து மலராத பாதி மலராகவும், விடிந்தும் விடியாத காலைப் பொழுதாகவும்,  விளைந்த கலை அன்னமாகவும் நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலாகவும், பொதிகை மலையில் தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமாகவும் காண்பதாகப் பாடுகிறார்.
  • இப்பாடல் அண்ணன் தங்கையின்  உண்மையான அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும்  இனிய பாடலாக அமைந்துள்ளது. 
  • பாசத்தின் வெளிப்பாடு கவிதையாகப் பிறந்துள்ளது.
  • மேலும், எதுகை, மோனை, இயைபு, முரண், அணி முதலிய பல்வேறு நயங்களும் தோன்றும்படி திரைப்படப் பாடல் இயற்றுவது சாலச்சிறந்தது.

3. புயலிலே ஒரு தோணி

                  பொருளடக்கம்
முன்னுரைகதை மாந்தர்கள்கடற்கூத்துஓய்ந்தது கடற்கூத்துபிணாங்குத் துறைமுகம்முடிவுரை

முன்னுரை

    ப.சிங்காரம் அவர்கள்  புலம்பெயர்ந்து செல்லும் மக்களின் துன்பத்தினை  விளக்கும் விதமாகத் தன் சொந்த அனுபவத்தையும் கற்பனையையும் கலந்து எழுதிய ‘புயலிலே ஒரு தோணி’ என்ற கதையினைப் பற்றி விரிவாகக் காண்போம்.

கதைமாந்தர்கள்

  • ஆசிரியர்
  • பாண்டியன்
  • கப்பித்தான் (தலைமை மாலுமி)
  • பயணியர்

கடற்கூத்து

வெயில் மறையத்தொடங்கியதும் புழுங்கியது. பாண்டியன் கடலலைகளையும் மேகத்தையும் பார்த்துக்கொண்டிருந்தான்.  திடீரென்று வானம் பகலிலேயே இருண்டது. என்ன நடக்கிறது என்று சிந்திக்கும் முன்னரே மழை கொட்டோ கொட்டென்று  கொட்டத்தொடங்கியது. கப்பித்தானுடன் பேசிக்கொண்டிருந்த மாலுமிகள் வேகமாக ஓடிச்சென்று கப்பலில் கட்டப்பட்டிருந்த கயிற்றை இறுக்கினார்கள். சூறாவளியும் மழையும் காற்றும் அதிகமாயின.  அவை கப்பலையும் அதிலிருந்த பொருள்களையும் உலுக்கியதுடன் பயணிகளையும் பயமுறுத்தின. கப்பல் கட்டுப்பாட்டையிழந்தாற்போல் தத்தளித்து, தாவிக்குதித்தது. கப்பலிலிருந்த மூட்டைகளும் சிப்பங்களும் கடலில் விழுந்தன. கரையில் உள்நாட்டுப் போரிலிருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காகப் பயணித்த பயணிகள் கடலிலேயே உயிர் போய்விடுமோ என்று அஞ்சி  நடுங்கினர்.

ஓய்ந்தது கடற்கூத்து

    திடீரென்று காற்றும் மழையும்  நின்றது. கப்பலிலிருந்த நீரை மாலுமிகள் இறைத்து  ஊற்றினார்கள். கடற்கூத்து எவ்வளவு நேரம் நீடித்தது என்று தெரியவில்லை. தொடங்கிய போதும், முடிந்த போதும் யாரும் கடிகாரத்தைப் பார்க்கவில்லை. கடற்கூத்தின்போது மாலுமிகளால் தூக்கியெறியப்பட்ட பெட்டிகளும் மூட்டைகளும் பின்தொடர்ந்து மிதந்து வந்தன. பாண்டியன் தலைமை மாலுமியிடம் நிலவரத்தைக் கேட்டான். தலைமை மாலுமி சீனமும் மலாயியும் கலந்த மொழியில் இனிமேல் பயமில்லை என்று கூறினார். இரண்டு நாள்களில் கரையைப் பார்க்கலாம் என்றார். மறுநாள் காலையில் சூரியன் உதித்தான். அவுலியா மீன்கள் கூட்டம் கூட்டமாக பின்தொடர்ந்து வந்தன.

பிணாங்குத் துறைமுகம்

    அடுத்த நாள் கப்பல்  பிணாங்குத் துறைமுகத்தை அடைந்தது. கப்பல் கரையின் அருகில் சென்று நின்றது. சுமத்ரா பயணிகள் கப்பலிலுருந்து இறங்கிப்போய் அனுமதிச் சீட்டை நீட்டினர். “தமிரே(தமிழரோ)” என்று ஜப்பானிய அதிகாரி கேட்டார். தமிழர்கள்தாம் என்று தலைவணங்கித் தெரிவித்தனர்.  அவர், சீட்டில் முத்திரை வைத்துத் திருப்பிக் கொடுத்தார்.

முடிவுரை

    புலம்பெயர்ந்து செல்லும் மக்கள் கடலில் செல்லும்போது எதிர்பாராத விதமாய் அடையும் துன்பங்கள் பற்றி புயலிலே ஒரு தோணி கதையில்  விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

மொழிப்பயிற்சி

1. சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க. (மொ.ஆ)

  • இன்சொல்         –  பண்புத்தொகை   – இன்சொல் கேட்டு மகிழ்ந்தேன்
  • எழுகதிர்            –  வினைத்தொகை – எழுகதிர் செந்நிறத்தில் இருந்தது
  • கீரி பாம்பு            –  உம்மைத்தொகை – கீரி பாம்பு சண்டையிடுவதைக் கண்டேன்
  • பூங்குழல் வந்தாள் – அன்மொழித்தொகை – பூங்குழல் வந்தாள்
  • மலை வாழ்வார் –  வேற்றுமைத்தொகை

                     மலை வாழ்வார் இயற்கை உணவை உண்டு வாழ்வார்.

  • முத்துப்பல்          –  உவமைத்தொகை

                           நிறைமதி முத்துப்பல் தெரிய அழகாய் சிரித்தாள்.

2. பாரதியின் வசன நடை –  சிட்டுக்குருவி            (மொ.ஆ)                                                                                              

சிறுதானியம் போன்ற மூக்கு ; சின்ன கண்கள் ; சின்ன தலை;  வெள்ளை கழுத்து; அழகிய  மங்கல் வெண்மை நிறமுடைய பட்டுப்போர்த்த  வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப்போர்த்த முதுகு;  சிறிய தோகை;  துளித்துளி கால்கள்;  இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே  பிடித்துவிடலாம்.  இவ்விதமான உடலைச்  சுமந்துகொண்டு, என் வீட்டில் இரண்டு உயிர்கள் வாழ்கின்றன. அவற்றில் ஒன்று ஆண் ; மற்றொன்று பெண்.  இதுபோன்று உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றைப் பற்றி வசனநடையில் எழுதுக.

                                                          மயில்

அழகிய தோற்றம்; பார்க்க சலிக்காத தோற்றம்; பார்க்கப்பார்க்க வியப்பூட்டும்;  அதன் அழகில் அனைவரும் மயங்குவர்; நீண்ட ஒலி எழுப்பும்;  வண்ணமயமான தோகையை விரித்தாடும்; பச்சை, நீலம், மஞ்சள், கருநீலம் கலந்த ஒரு அழகிய இயற்கை ஓவியம் போல காட்சியளிக்கும்.  நம் நெஞ்சங்களுக்கும் ,மகிழ்வளிக்கும்  மயிலின் அழகே அழகு!

3.         மொழிபெயக்க (மொ.ஆ)

The golden sun gets up early in the morning and stars it bright rays to fade away the dark.  The milky clouds start their bantering wandering. The colourful birds start twitting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows  everywhere and makes everything pleasant.

இயற்கையுடன் விடியல்

பொன்னிற சூரியன் அதிகாலையில் தோன்றிய பிரகாசமான கதிர்களைக் கொண்டு உலகை இருளைப் போக்குகிறது.  மேகங்கள் அளையத் தொடங்குகின்றன. வண்ணமயமான பறவைகள் தங்கள் காலை இசையால் மகிழ்ச்சி அடைகின்றன . அழகிய பட்டாம்பூச்சிகள் மலர்களைச் சுற்றி நடனம் ஆடுகின்றன.  மலர்களின் வாசனை, தென்றல் காற்றை நிரப்புகிறது. காற்று எல்லா இடங்களிலும் வீசி மகிழ்ச்சியூட்டுகிறது.

4.         செய்திகளைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள் (மொ.ஆ)

  • பூ உண்டு. ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் காண்பதற்கு அரியனவாய் இருக்கும் மலர்கள் : ஆல மலர்; பலா மலர்.
  • மலர் உண்டு; பெயரும் உண்டு . ஆனால், இதுதான் அதுவென்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள் : சுள்ளி மலர், பாங்கர் மலர்.
  • அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்: அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா.
  • பயன்பாடு, நாற்றம், மக்களது விருப்பில் இடம்பெறாமை, பொதுவில் ஒதுக்கப்படாமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன: நெருஞ்சி, எருக்கு, பூளை, குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை.
  • இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும். மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒருவகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்.    
  • மலர் உண்டு ; பெயரும் உண்டு – இரண்டு தொடர்களையும் ஒரு தொடராக்குக.

மலரும் பெயரும் உண்டு.

  • அரும்பாகி மொட்டாகிப் பூவாகி… என்பதை ஒத்து அமைந்துள்ள தொடரைக் கண்டறிக.

அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்: அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா.

  • நீங்கள் அறிந்த இரு பூக்களின் பெயர்களையும் பயன்களையும் எழுதுக.

ஆவாரம் பூ                 – இது நீரிழிவு நோயினைக் குணப்படுத்தும்.

முருங்கைப் பூ   – இது இரும்பு சத்து மிகுந்த பூ.

  • அரிய மலர் – இலக்கணக்குறிப்பு தருக.       

பெயரெச்சம்

  • தொடரில் பொருந்தாப் பொருள்தரும் மயங்கொலி எழுத்துகளைத் திருத்துக.

(இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மறத்தின் மீதேறி அவற்றைப் பரித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மனத்தை ஏற்றும்.)

இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும்.

5. அகராதியைக் கண்டு பொருள் எழுதுக. (மொ.வி)

அகன்சுடர்        –        உயர்ந்த தீபம்

கட்புள்              –        விழித்திருக்கும் பறவை

திருவில்           –        வானவில்

ஆர்கலி            –        கடல், மழை, பறவை

கொடுவாய்        –        ஆயுதங்களில் வளைந்த வாய்,  ஒரு வகை மீன்

  • காட்சியைக் கண்டு கவினுற எழுதுக. (மொ.வி)

உயிர்வளி

தனி மனித ஒழுக்கமின்மையாலும்  சுயநலத்தாலும்,

காற்றை மாசுப்படுத்தி,

போதாத குறைக்கு

நெகிழி பொருள்களால் மரத்தையும் அழித்து,

அறிவியலின் வேகத்தால் 

இயற்கையாய் இருந்ததையெல்லாம் தொலைத்து,

சொற்பக் காற்றுக்காகத்  தொப்பையைப் போலவே

செயற்கை காற்றுருளையை எப்போதும் சுமக்கிறான்.

7. சொல்லைக் கண்டுபிடித்து புதிரை விடுவிக்க. (மொ.வி)

        (காடு, புதுமை, விண்மீன், காற்று, நறுமணம்)

1. முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்; நீக்காவிட்டாலும் வாசனை   

    தரும்.  நறுமணம்

2. பழமைக்கு எதிரானது – எழுதுகோலில் பயன்படும். புதுமை

3. இருக்கும்போது உருவமில்லை – இல்லாமல் உயிரினம் இல்லை. காற்று

4. நாலெழுத்தில் கண் சிமிட்டும் – கடையிரண்டில் நீந்திச் செல்லும். விண்மீன்

5. ஓரெழுத்தில் சோலை – இரண்டெழுத்தில் வனம். காடு

8.         நயமிகுத் தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்புகளை எடுத்து எழுதுக. (மொ.வி)

        (வனத்தின் நடனம், மிதக்கும் வாசம், காற்றின் பாடல், மொட்டின் வருகை, உயிர்ப்பின்

        ஏக்கம், நீரின் சிலிர்ப்பு)

  1. கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது. வானம் இருண்டது. வாடைக்காற்று வீசியது.  – காற்றின் பாடல்
  2. புவி சிலிர்த்து, மண்ணிலிருந்து சின்னஞ்சிறு மொட்டு முகிழ்த்தது; அச்செடி வரவேற்கும் விதமாகப் பக்கத்துச் செடிகள் தலையாட்டி மகிழ்கின்றன.  மொட்டின் வருகை
  3. சோலைக்குள் சத்தமில்லாமல் வீசியது தென்றல்; பூக்கள் அதன் வருகையை உணர்ந்து நறுமணத்துடன் வரவேற்கின்றன. பூ வாசம் கலந்த தென்றலில் வண்டுகள் மிதந்து சென்று மலர்களில் அமர்கின்றன. மிதக்கும் வாசம்.
  4. இரவின் இருளமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள். வறண்ட வானத்தின் இருண்ட புழுக்கம்; மழைக்கு ஏங்கும் புவி வெப்பப் பெருமூச்சு விடும்; கசகசத்த உயிரினங்கள். உயிர்ப்பின் ஏக்கம்.
  5. நின்றுவிட்ட மழை தரும் குளிர்; சொட்டுச்சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் விழும் மழைநீர்ப்பட்டுச் சிலிர்க்கும் உயிரினம்.  நீரின் சிலிர்ப்பு
  6. குயில்களின் கூவலிசை. புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும். இலைகளின் அசைவுகள், சூறைக்காற்றின் ஆலோலம். வானத்தின் நடனம்

9. கலைச்சொற்கள் தருக (நி.அ.த)

Storm                          –        புயல்

Land breeze                 –        நிலக்காற்று

Tornado                       –        சூறாவளி

Sea breeze                  –        கடற்காற்று

Tempest                      –        பெருங்காற்று

Whirl wind                    –        சுழல் காற்று

10. புயலின் பொது செயல்படுத்த வேண்டிய முக்கிய செயல்கள் (நி.அ.த)

  • புயலின் பொது வெளியில் செல்வதைத் தவிர்ப்போம்.
    • தொலைபேசி, தொலைக்காட்சி முதலிய மின்சாதனப்  பொருள்களைத் தொடுவதைத் தவிர்ப்போம்.
    • மாடியில் இருப்பதைத் தவிர்த்துத் தளப் பகுதியில் குடும்பத்துடன் தங்குவோம்.
    • காற்றடிப்பது நின்றாலும் வானொலியில் மறு அறிவிப்பு வரும்வரை வீட்டைவிட்டு வெளியில் வரமாட்டோம்.
    • மெழுகுவர்த்தி, தீப்பெட்டி முதலிய அவசிய பொருள்களையும் உணவு பொருள்களையும் முன்கூட்டியே வாங்கிவைப்போம்.

11. வண்ணமிட்ட தொகைநிலைத் தொடர்களை வகைப்படுத்துக. (கற்பவை கற்றப்பின்)

1.   அன்புச்செல்வன் திறன்பேசியின் தொடுதிரையில் படித்துக்கொண்டிருந்தார்.

அன்புச்செல்வன் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை

தொடுதிரை – வினைத்தொகை

  • அனைவருக்கும் மோர்ப்பானையைத் திறந்து மோர் கொடுக்கவும்.

மோர்ப்பானை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை

மோர் கொடுக்கவும் – இரண்டாம் வேற்றுமைத் தொகை

  • வெண்டைக்காய்ப் பொரியல் மோர்க்குழம்புக்குப் பொருத்தமாக இருக்கும்.

வெண்டைக்காய்ப் – இருபெயரொட்டுப்பண்புத் தொகை

மோர்க்குழம்புக்கு –  மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை

  • தங்கமீன்கள் தண்ணீர்த்தொட்டியில் விளையாடுகின்றன.

தங்கமீன்கள்          – உவமைத்தொகை

தண்ணீர்த்தொட்டி  – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை (தொடரின் பொருள் அடிப்படையில்)

 மனப்பாடம்

முல்லைப்பாட்டு    (இயல் – 2)

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்

உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்

நடுங்கு சுவல் அசைத்த கையள், “கைய

கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர

இன்னே வருகுவர், தாயர் “என்போள்

நன்னர் நன்மொழி கேட்டனம்.

                                          –   நப்பூதனார்.

Leave a Comment