பத்தாம் வகுப்பு-கட்டுரை மற்றும் கடிதங்கள்

கட்டுரை மற்றும் கடிதங்கள்

1.   உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசு பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக்  

     குறிப்புகள்  கொண்டு கட்டுரையாக்குக.

(முன்னுரை – இனிய காட்சி – பல்துறை அரங்குகள்  – விளையாட்டு அரங்குகள் – உணவு அரங்குகள் – விளையாட்டு பொருட்கள்)

அரசு பொருட்காட்சிக்குச் சென்றுவந்த நிகழ்வு

                        பொருளடக்கம்
முன்னுரை
இனிய காட்சி
பல்துறை அரங்குகள் 
விளையாட்டு அரங்குகள்
உணவு அரங்குகள்
விளையாட்டு பொருட்கள்
முடிவுரை


முன்னுரை

எங்கள் ஊர் பல்லவ மன்னன் ஆட்சி செய்த மாமல்லபுரம் ஆகும். பல்லவனின் ஆண்டுவிழாவை ஒட்டி ஆண்டுதோரும்  ஒருவாரம் அரசு பொருட்காட்சி நடைபெறும். அவ்வகையில்  நாங்கள் பொருட்காட்சிக்குச் சென்றுவந்த நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இனிய காட்சி                                                                                                                           

      மாமல்லனின் படைப்பாம் அர்ஜுனதபசின் அருகில் திறந்தவெளியில்  பொருட்காட்சி அமைக்கப்பட்டது .  நம் தமிழரிகளின் பண்பாட்டினை விளக்கும் கைவினைப் பொருள்களும் பாரம்பரிய கலைகள் பற்றிய ஓவியங்களும் கண்களுக்கு விருந்தளித்தன.

பல்துறை அரங்குகள்

காட்சிக்கூடங்களில் பல்துறை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.  மண், உலோகம், பிரம்பு, மூங்கில், முதலியவற்றால்  செய்யப்பட்ட பொருள்களைக் காட்சிப்படுத்தும் கூடங்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்தன. 

விளையாட்டு அரங்குகள்

 விளையாட்டு அரங்குகளில் , சிறுவர்கள் விளையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறுவர்களின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனித்தனி அரங்குகள் இருந்தன. அரங்குகளுக்கு அருகிலேயே விளையாட்டுப் பொருள்களும் விற்பனை செய்யப்பட்டன.

உணவு அரங்குகள்

            உணவு அரங்குகளில் நம் நாட்டிலும் நம் மாநிலத்திலுமுள்ள பல்வேறு

கலாச்சாரத்திற்கேற்ற உணவுகள் காட்சிக்காகவும் விற்பனைக்காகவும் வைக்கப்பட்டிருந்தது. அங்குச் சென்று எங்களுக்கு விருப்பமான உணவினை உண்டு மகிழ்ந்தோம்.

முடிவுரை

பொருட்காட்சி, நம் பண்பாட்டினைத் தெரிந்துகொள்வதற்கும் பல்வேறு ஊர்களில் காணப்படும் பொருள்களை ஒரு இடத்தில் காண்பதற்கும் தேவையான பொருள்களை வாங்கிவர ஒரு வாய்ப்பாக அமைந்தது. 

2.  குமரிக்கடல் முனையையும் வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட  தென்னவர்  திருநாட்டிற்குப் புகழ்த்தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில்சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்குச்  பிள்ளைத்தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலா வந்து, அந்தாதி கூறி, கோவை அணிவித்து  சிற்றிலக்கியங்களையெல்லாம் அணியாகப் பூட்டி, அழகு கூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் செந்நாப்புலவர்கள். இக்கருத்தைக் கருவாகக் கொண்டு சான்றோர் வளர்த்த தமிழ் என்னும் தலைப்பில் கட்டுரை வரைக.

சான்றோர் வளர்த்த தமிழ்

                        பொருளடக்கம்
முன்னுரை
பிள்ளைத்தமிழ்
சதகம்
பரணி
கலம்பகம்
உலா
அந்தாதி
முடிவுரை

முன்னுரை                                                                                                                             

அன்னை மொழியே! அழகாய் அமைந்த செந்தமிழே! என்றும் எழில்சேர் கன்னியாய் திகழும் உனக்குப் பேரிலக்கியத்துடன் சிற்றிலக்கியமும் படைத்தோர் பலர்! உமக்குப் பெருமை சேர்க்கும் அச்சிற்றிலக்கியங்களுள் சிலவற்றை இக்கட்டுரையில் காண்போம்!

பிள்ளைத்தமிழ்

            போற்றுவதற்குத் தகுதிவாய்ந்த கடவுளரையோ, மன்னரையோ, மக்களுள் சிலரையோ பாட்டுடைத்தலைவராகக் கொண்டு, அவர்களைக் குழந்தையாகப் பாவித்து அவர்களின் மீது பத்து பருவங்கள் அமைத்து பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும். தமிழில் மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், பாவேந்தர் பிள்ளைத்தமிழ் முதலியன சிறந்த பிள்ளைத்தமிழ் நூல்களாகும்.

சதகம்

            நூறு பாடல்களைக் கொண்ட சிற்றிலக்கியம் சதகம் ஆகும். திருச்சதகம், அறப்பளீசுவர சதகம் முதலிய சதகங்களைத் தமிழுக்குச் சமைத்துள்ளனர்.

பரணி

            போரிலே ஆயிரம் யானைப்படை வீரர்களைக் கொன்றவனுக்குப் பாடுவது பரணி ஆகும். இது தோற்ற நாட்டின் பெயராலோ மன்னனின் பெயராலோ பாடப்படும்.

பரணி இலக்கியங்களுள் கலிங்கத்துப்பரணி காலத்தால் முற்பட்டது.

கலம்பகம்

            கலம் + பகம் = கலம்பகம், (கலம் – பன்னிரண்டு; பகம் – ஆறு) பதினெட்டு உறுப்புகளைக் கொண்டு பாடப்படுவது கலம்பகம் ஆகும். நந்திக்கலம்பகம் காலத்தால் முற்பட்டது.

உலா

            பவனி வரும் (உலா) பாட்டுடைத் தலைவனைப் பற்றியும் எழுவகை மகளிரும் அவன்மீது காதல் கொள்வதையும் பாடுவது உலா ஆகும். உலா பாடுவதில் ஒட்டக்கூத்தர் சிறந்தவர்.

அந்தாதி

            அந்தம் ஆதியாகத் தொடுப்பது அந்தாதி ஆகும். அதாவது, ஒரு பாடலின் ஒரு அடியின் இறுதி அடுத்த அடியின் தொடக்கமாக அமைவது அந்தாதி ஆகும்.

முடிவுரை

            தமிழ்மொழியை அன்னையாகப் பாவித்து, அத்தமிழன்னைக்குப் பிள்ளைத்தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலா வந்து, அந்தாதி கூறி, கோவை அணிவித்து  சிற்றிலக்கியங்களையெல்லாம் அணியாகப் பூட்டி, அழகு கூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் தமிழ்ச்சான்றோர்கள். அவ்வழியில் நாமும் சென்று தமிழ்ப்பயிரைப் பேணி வளர்ப்போம்!

3. விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் (01.07.1961 – 01.02.2003)

                        பொருளடக்கம்
முன்னுரை
பிறப்பும் கல்வியும்
முதல் விண்வெளிப்பயணம்
கொலம்பியா விண்கல நிகழ்வு
முடிவுரை

முன்னுரை

            விண்வெளிக்குப் பயணம் சென்ற இந்திய பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பனா சாவ்லாவின் பெருமையைப் பற்றியும் அவரின் சாதனைகள் பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்!

பிறப்பும் கல்வியும்

            கல்பனா சாவ்லா அவர்கள் இந்தியாவிலுள்ள ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில் 01.07.1961 ஆம் ஆண்டு பனாரஸ்லால் சாவ்லாவுக்கும் சன்யோகிதா தேவிக்கும் மகளாகப் பிறந்தார்.

            தன் ஆரம்பக்கல்வியைத் தன் சொந்த ஊரான கர்னல் அரசு பள்ளில் முடித்த அவர், 1982 ஆம் ஆண்டு சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தி துறையில் இளங்கலைப் பொறியியல் பட்டப் படிப்பை முடித்தார். பின்னர்,1984 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன் பின்னர் 1988 ஆம் ஆண்டு விண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

முதல் விண்வெளிப்பயணம்

            1995 ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் சேர்ந்த அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் கொலம்பியா விண்வெளி   ஊர்தியான எஸ்.டி.எஸ் -87 ல் பயணம் செய்து, 372 மணிநேரம் விண்வெளியில் இருந்து சாதனைப் புரிந்து, பூமிக்குத் திரும்பினார்.

கொலம்பியா விண்கல நிகழ்வு

            16.01.2003 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகக் கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ் -107ல் விண்வெளிக்குப் புறப்பட்டார். 16 நாள்கள் ஆய்வை முடித்து பூமிக்குத் திரும்பும்போது பூமிக்கு மிக அருகில் விண்கலம் வெடித்ததில் உயிரிழந்தார்.

முடிவுரை

            விண்வெளி பயணம் மேற்கொண்ட கல்பனா சாவ்லா அவர்கள் இந்தியாவுக்குப் பெருமையைத் தேடித்தந்ததோடு பெண்கள் இனத்திற்கே ஒரு முன்னோடியாகவும் திகழ்ந்தார். அத்தகைய வீரப்பெண்மணியை நாம் போற்றி மகிழ்வோம்!

4.  பள்ளி ஆண்டு விழா மலருக்காக  நீவீர் நூலகத்தில் படித்த ஒரு கவிதை நூலுக்கு  

    மதிப்புரை  எழுதுக.

நூலின் தலைப்பு

                 மு.மேத்தா எழுதிய கண்ணீர் பூக்கள்

நூலின் மையப்பொருள்

இன்றைய சூழலில் மனிதனின் ஏக்கங்களும் மனதில் ஏற்படும் தாக்கங்களும் நூலின் மையப்பொருள்களாக அமைந்துள்ளன.

மொழிநடை

இலக்கண விதிமுறைகளை அதிகம் பயன்படுத்தாமல் சாதாரண பாமரனும் படித்துப் பொருள் புரிந்துகொள்ளும் வண்ணம் இந்நூல் அமைந்துள்ளது.

வெளிப்படுத்தும் கருத்து

இக்கவிதை நூலில் வாழ்வியலின் நடைமுறை உண்மைகள் அப்படியே படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. போரில்லா உலகம், ஆசையைக் குறைத்தல், அனைவரும் சமம், பெண்மையைப் போற்றுதல்,  அன்பு காட்டுதல் முதலிய பலக் கருத்துகள் இக்கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

நூலின் நயம்

மோனை, எதுகை, இயைபு, முரண், ஆகிய நயங்கள் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது. ”பங்களா தேசத்துப் பாதையில் நின்றொரு  பாடகன் பாடுகின்றேன்.” – என்னும் கவிதை அடி, தொடை நயங்களை ஆசிரியர் அழகாகப் பயன்படுத்தியமைக்கு ஒரு சோற்றுப்பதம்.

நூல் கட்டமைப்பு

இந்நூல் 28 கவிதைகளை உள்ளடக்கிய கவிதைத் தொகுப்பு ஆகும். இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் ஒரு வாழ்வியல் எதார்த்தத்தை எடுத்தியம்புகிறது.

சிறப்புக்கூறு

இக்கவிதைத் தொகுப்பானது முப்பதாவது பதிப்பாகும். இது முப்பது முறை பதிக்கப்பட்டதைவிட வேரொரு சிறப்பு வேண்டுமா?

நூல் ஆசிரியர்

                  ‘கண்ணீர்ப் பூக்கள்’ கவிதை நூலின் ஆசிரியர் மு.மேத்தா ஆவார்.

கடிதங்கள்

1. மாநில அளவில் நடைபெற்ற’ மரம் இயற்கையின் வரம்’ என்னும் தலைப்பிலான கட்டுரைப்   

    போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு  பெற்ற தோழனை வாழ்த்தி  மடல் எழுதுக.

மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் ‘மரம் இயற்கையின் வரம்’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதி முதல் பரிசு பெற்ற நண்பனை வாழ்த்தி மடல்.

                                                                                                                                          குன்னம்,

                                                                                                                                          11.05.2019.

அன்பு நண்பனே!

            முதலில் உமக்கு எம் வாழ்த்துகள்!

  சென்ற வாரம் நடந்த மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் ‘மரம் இயற்கையின் வரம்’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதி முதல் பரிசு பெற்றமமையைக் கண்டு வியந்தேன்.  பாராட்டுகள்!

  பள்ளியில் நடைபெறும் கட்டுரைப் போட்டியிலேயே  பொருள் பொதிந்த உன் கட்டுரையும்,  அதில் உன் மொழிநடையையும் பற்றி நம் ஆசிரியர்கள் வியந்து கூறியதை எண்ணி இப்போதும்  நான் நினைத்துப் பார்த்து மகிழ்கிறேன்.

  உன் கையெழுத்து உன் தலையெழுத்தை மாற்றும் என்று முன்பு நான் நினைத்ததை இந்த ஒரு நிகழ்விலேயே நிரூபித்து விட்டாய்!

  நீ உன் முயற்சிக்குத் தகுந்த  பரிசினை,  இப்போது பெற்றுள்ளதைப் போலவே இன்னும் பல நிலைகளில், பல பரிசுகளைப் பெற நான் மனதார வாழ்த்துகிறேன்.

உன் இக்கட்டுரைப் பணி தொடரட்டும்!

                                                                                            என்றும் அன்புடன்

                                                                                                   ச. நிறைமதி.

உறைமேல் முகவரி

                  பெறுநர்

                                          த. முகிலன் த/பெ தமிழரசன்,

                                          25, காமராசர் தெரு,

                                    விழுப்புரம்

2. நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் “உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ என்ற   

    உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிரியர்க்குக் கடிதம் எழுதுக.

அனுப்புநர்

            10024,

24,  மேட்டு தெரு,

கீழ்மாம்பட்டு.

பெறுநர்

                    ஆசிரியர்,

                    தினமணி அலுவலகம்,

                    சென்னை – 6000005.

ஐயா ,

                    வணக்கம்.

      பொருள்: பொங்கல் இதழில் எம் கட்டுரை வெளியிட வேண்டுதல் – சார்பு.

                                                                    ***********

                    உழவுத் தொழிலின் மேன்மையையும் அவசியத்தையும் வலியுறுத்தி ”உழவுதொழிலுக்கு வந்தனை செய்வோம்”  என்ற கட்டுரையை நான் எழுதியுள்ளேன்.

        அக்கட்டுரையைத்  தங்கள் பொங்கல் மலரில் வெளியிட பணிவுடன் வேண்டுகிறேன்.

                                                                    நன்றி .

இடம்: கீழ்மாம்பட்டு,                                                                                             இப்படிக்கு,

நாள்:   25/11/2019.                                                                         தங்கள் உண்மையுள்ள,                                                                                                                                   10024.

      உறை மேல் முகவரி

                    பெறுநர்:

ஆசிரியர்,

தினமணி அலுவலகம்,

சென்னை – 6000005.

3. உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலையில் நடந்து  

    செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவணம் செய்யும்படி மின்வாரிய   

    அலுவலகத்துக்குக் கடிதம் எழுதுக.

அனுப்புனர்

                 10026,

                 19, காந்திநகர் ,

                 பேரணி, விழுப்புரம் மாவட்டம் .

பெறுநர்

                மின்வாரிய அலுவலர்,

                மின் வாரிய அலுவலகம் ,

                விழுப்புரம் மாவட்டம் .

ஐயா,

                      வணக்கம்.

பொருள்:  மின்விளக்குப் பழுதுபார்க்க ஆவணம் செய்ய வேண்டுதல் – சார்பு.

                                                                        ***********

எங்கள் ஊரில் தெரு மின்விளக்குகள் சில நாட்களாக எரியாமல்  பழுதடைந்துள்ளன. எங்கும் ஒரே இருள் மயமாக உள்ளது. இருள் சூழ்ந்து இருப்பதால் சிறியவர் முதல் பெரியவர் வரை நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். மேலும் சமூக விரோதச் செயல்கள் நடைபெற ஏதுவாக உள்ளது. மேலும், பாம்பு, நாய் முதலியவற்றாலும் அவ்வப்போது பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, பழுதுபட்ட மின்விளக்குகளைச் சரிசெய்து விளக்குகள் எரிய ஆவண செய்யுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இடம்      : பேரணி,                                                                           இப்படிக்கு,                

நாள்        : 09.11.2019.                                                                     தங்கள் உண்மையுள்ள,

                                                                                                     10026.

      உறைமேல் முகவரி

                              பெறுநர்

                                          மின்வாரிய அலுவலர்,

                                          மின் வாரிய அலுவலகம் ,

                                          விழுப்புரம் மாவட்டம்.

4. உங்கள் பள்ளியில் நடைபெறும் நாட்டு நலப்பணித்திட்ட முகாமின் தொடக்க விழாவில்  

    மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்க உரை ஒன்றை உருவாக்கி தருக.

  • அன்பார்ந்த மாணவர்களே! நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழாவில் உமக்கு வாழ்த்துரை வழங்குவதில் பெருமை கொள்கிறேன்.
  • மாணவப் பருவத்திலே உங்களுக்கு நாட்டுப்பற்று சமூக அக்கறை தொண்டுள்ளம் ஆகியவற்றை வளர்ப்பதற்கே நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடத்தப்படுகிறது.
  • உங்கள் பள்ளியில் பயிலும் மற்ற மாணவர்களுக்குக் கிடைக்காத பெரிய வாய்ப்பு இங்கு கூடி இருக்கின்ற நீங்கள் பெற்றுள்ளீர்கள் அதற்காக உங்களை வாழ்த்துகிறேன்.  எத்தனையோ மாணவர்கள் எப்படியெல்லாமோ பொழுதைப் போக்கி கொண்டிருக்க, நீங்கள் பயனுள்ள நற்செயலைப் பாங்குடன் செய்ய வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
  • சமுதாயத்தின் விடிவிளக்குகளாய், சமூக அக்கறை கொண்ட ஆர்வலர்களாய், மனிதநேயம் மிக்கவர்களாய் மாறுவீர்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை.
  • இந்த நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெறும் நாட்கள் முழுவதும் முழு மனதுடன் செயல்பட்டு இச்சமுதாயத்தின் செயல்வீரர்களாய் நிவீர் திகழ வாழ்த்திப், பாராட்டி மகிழ்கிறேன்.   

                                                                                    நன்றி.

5. உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் , விலை கூடுதலாகவும்

    இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம்  

    எழுதுக.

உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் , விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம்.

விடுநர்

              நிறைமதி,

              25, பாரதியார் தெரு,

              குன்னம், விழுப்புரம் மாவட்டம்.

பெறுநர்

              உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

              உணவுப் பாதுகாப்பு ஆணையர் அலுவலகம்,

              விழுப்புரம்.

மதிப்பிற்குரியீர்,        

                          வணக்கம்.

பொருள் :  உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் , விலை

 கூடுதலாகவும் இருந்தது குறித்து புகார் அளித்தல் – சார்பு.

                                         **************

நேற்று நாங்கள் உறவினரைக் காண்பதற்காகத் திண்டிவனம் சென்றிருந்தோம். அங்கு  நாங்கள் xxxxx என்ற பெயர் கொண்ட உணவு விடுதியில் மதிய உணவு உண்டோம். அவ்வுணவு விடுதியில் வழங்கப்பட்ட உணவானது தரமற்றதாகவும் விலைக்கூடுதலாகவும் இருந்தது.

அதைப் பற்றி விடுதி உரிமையாளரிடம் கேட்டபோது சாலையோர உணவு விடுதியில் உணவு இப்படித்தான் இருக்கும் என்று சாதாரணமாகக் கூறினார்.

எனவே தாங்கள், அவ்வுணவு விடுதியைச் சோதனை செய்து, எங்களைப் போன்று பயணம் செய்வோர் பாதிப்படையாத வண்ணம் காக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

                                         நன்றி.                                                                        

இடம் : திண்டிவனம்,                                                                                     இப்படிக்கு,

நாள்   :  05.03.2019.                                                                          தங்கள் உண்மையுள்ள,

                                                                                                     நிறைமதி.

இணைப்பு – உணவுக் கட்டணத்தொகை ரசீது.

உறைமேல் முகவரி

  பெறுநர்:

                          உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

                          உணவுப் பாதுகாப்பு ஆணையர் அலுவலகம்,

                          விழுப்புரம்.

6. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மரம் நடுவிழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினருக்கும்  

    பெற்றோருக்கும் பள்ளியின் ‘ பசுமைப் பாதுகாப்பு படை’ சார்பாக  நன்றியுரை

  • எங்கள் பள்ளியில் பசுமைப் பாதுகாப்பு படையின் சார்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழாவிற்கு வருகைத்தந்திருக்கும் அனைவருக்கும் முதற்கண் அன்புகலந்த வணக்கம்.
  • ”மரம் இயற்கையின் வரம்” என்பதை உணர்ந்து, பல வேலைகளுக்கு மத்தியிலும் இங்கு வந்து மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்த ஊர்ப்பொதுமக்களுக்கு   நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
  • இவ்விழா இனிதே நடைபெற எங்களை வழிநடத்திய தலைமையாசிரியருக்குப் பசுமைப் பாதுகாப்பு படையின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
  • இவ்விழாவினைச் சிறப்பிப்பதற்கு வருகைத் தந்து, சிறப்புரையாற்றிய  பெற்றோர் – ஆசிரியர் கழகத்தினருக்குப் பசுமைப் பாதுகாப்பு படையின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
  • இப்பள்ளியின் இருபால் ஆசிரியப் பெருமக்களுக்கும் , கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ நணபர்களுக்கும், அதை அமைதியாகக் கண்டுகளித்த மாணவ நண்பர்களுக்கும்   பசுமைப் பாதுகாப்பு படையின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைவருக்கும் நன்றி!

7. ’சுற்றுச்சூழலைப் பேணுவதே அறம்’ என்னும் தலைப்பில், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில்      

     பேசுவதற்கான  உரைகுறிப்பு ஒன்றை உருவாக்குக.

(குறிப்பு – சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும்,  ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்)

  • அனைவருக்கும் வணக்கம்.
  • நம்மைச் சுற்றியுள்ள , நாம் வாழும் ஊர், நமக்கு நீர் தரும் ஏரி, குளம், ஆறு முதலிய நீர்நிலைகள், நமக்கு வாழ்வாதரத்தையும் நல்ல காற்றையும் மழையையும் தரும் காடுகள் முதலிய அனைத்துமே சுற்றுச்சூழல்தான்.
  • இந்த சுற்றுபுறம்தான் நம் வாழ்வைத் தீர்மானிக்கக்கூடியது.
  • சுற்றுச்சூழலை மாசுப்படுத்துவது என்பது நம் வாழ்வை மாசுபடுத்துவதற்குச் சமம்.
  • எனவே, நாம் வாழும் வீட்டை எவ்வாறு நாம் தூய்மையாக வைத்துக்கொள்கிறோமோ,  அவ்வாறே இந்த சுற்றுச்சூழலையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாமும், நம் தலைமுறையும் நோயின்றி பாதுகாப்பாக வாழ முடியும்.
  • மேலும், சுற்றுச்சூழல் மாசுபடுத்துவதைத் தடுக்கச் சட்டங்கள் பல இயற்றப்பட்டிருந்தாலும்,  நாம் நினைத்தால் மட்டுமே அதை நடைமுறைப்படுத்த முடியும். எனவே, நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்; நம்மையும் பாதுகாக்கும்.

8.  பள்ளித் திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப்   

     பாராட்டுப் பெற்றதையும்  பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம்    

     எழுதுக.

பள்ளித் திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும்  பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம்

25, பாரதித் தெரு,

                                                                                                                        குன்னம்,

                                                                                                                        11.05.2020.

அன்புள்ள மாமாவுக்கு,

            நான் இங்கு நலம். தங்கள் நலத்தினை அறிய ஆவல்!  தங்களின் பணி எப்போதும் சிறக்க என் வாழ்த்துகள். சென்ற வாரம் ஒருநாள் நான் விளையாட்டுப் பாடவேலையில்  பள்ளி விளையாட்டுத் திடலில் விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது சிறிது நேரம் ஓய்வெடுக்கலாமென்று மரத்தின் நிழலுக்குச் சென்றேன். அங்கு ஒரு பை இருந்தது. அதில் ஏதோ இருப்பதுபோலத் தெரிந்தது. பள்ளி வளாகம் என்பதால் தைரியமாகப் பிரித்துப்பார்த்தேன். அதில் பணம் இருந்தது. உடனே நான் தலைமையாசிரியர் அறைக்குச் சென்று அதை தலைமையாசிரியரிடம் ஒப்படைத்தேன். மறுநாள் வழிபாட்டுக் கூட்டத்தில்  என்னுடன் பயிலும் மாணவனின் பெற்றோர் ஒருவர் தலைமையாசிரியரின் அனுமதியுடன் என்னை வாழ்த்தினார். அவர் கூறும்போதுதான் எனக்குத் தெரிந்தது நான் கொடுத்த பணப்பை  ஒர் உயிரைக் காப்பாற்றுவதற்கானது என்று.

            என்னை,  பள்ளியிலும்  செல்லும் இடங்களிலும் அனைவரும் வாழ்த்தினர். அந்த நிகழ்வை உங்களிடம்  பகிந்துகொள்ளத்தான் இக்கடிதத்தை எழுதியுள்ளேன். உடல் நலத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள். விடுமுறையில் வீட்டிற்கு வருகிறேன்.        

                                                                                                                        இப்படிக்கு,

                                                                                                            தங்கள் அன்புக்கு உரிய,

                                                                                                                        ச. நிறைமதி.

உறைமேல் முகவரி:-

          பெறுநர்

                        கோதிலான்,

                        12, காமராசர் தெரு,

                        விழுப்புரம்.

9. நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு –  நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்  

    பங்கு  – குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் ‘மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்’  

    என்ற  தலைப்பில் மேடை உரை எழுதுக.

  • ’தித்திக்கும் தெள்ளமுதாய் தெள்ளமுதின் மேலான

முத்திக்கனியே என் முத்தமிழே,’ உனக்கு என் முதல் வணக்கம். இங்கு குழுமியிருப்போருக்கு என் பணிவான வணக்கம்.

  • “முப்பது கோடி முகமுடையாள் – உயிர்

மொய்ம்புற ஒன்றுடையாள் – இவள்

செப்புமொழி பதினெட்டுடையாள் – எனில்

சிந்தனை ஒன்றுடையாள்” –  என்ற பாரதியின் பாடலுக்கேற்ப எம் நாடு பலவகைப்பட்ட மதங்களையும் மொழிகளையும் இனங்களையும் கொண்ட நாடு. ஆயினும் சுதந்திர தினம், குடியரசு தினம், மகளிர்தினம், குழந்தைகள் தினம், குடிநீர் தினம், சுற்றுச்சூழல் தினம், தீண்டாமை ஒழிப்பு தினம் முதலிய சமய சார்பற்ற பொதுவான நாள்களை நாம் ஒவ்வொருவரும் சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம்.

  • அவ்வகையில் மாணவர்களாகிய நாம் சாதி, மத பேதங்களையெல்லாம் கடந்து, நம் நாட்டின்  வளர்ச்சிப் பணிகளான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும், வேலைவாய்ப்பிற்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும், கல்வி வளர்ச்சிக்கும், தாய்மொழி பற்றுக்கும்,  சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், விவசாயத்திற்கும் நம்மால் இயன்ற பணிகளைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் நாட்டு விழாக்களைக் கொண்டாட வேண்டும். ஏனெனில் இன்றைய இளைஞர்களே, நாளைய தலைவர்கள்! எனவே, நாம்தான் வருங்கால பாரதத்தை வளர்ந்த பாரதமாக மாற்றக்கூடியவர்கள்.
  • மேலும், ஒவ்வொரு நாட்டு விழாக்களின் போதும் அவ்விழாக்களைக் கொண்டாடுவதற்கு மூலக்காரணமாக அமைந்த தேசத்தலைவர்களின் செயல்திறனையும் அவர்களின் விடுதலைப் போராட்டச் சிந்தனைகளையும்  உழைப்பையும் உயிர்தியாகத்தையும் நினைந்துபார்த்து, அவர்களின் வழித்தோன்றல்களாகிய நாம் நம் நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்குப் பாடுபட வேண்டும்.
  • மாணவப்பருவத்தில் நம் மனதில் பதிவதுதான் வாழ்நாள் முழுதும் நம்முடன் தொடர்ந்து வரும். அத்தகைய மாணவப்பருவத்தில் நாட்டின் முன்னேற்றத்தில் நாம் அக்கறை கொள்ள வேண்டும்.
  • ஆயுதம் செய்வோம்; நல்ல காகிதம் செய்வோம்; ஆலைகள் வைப்போம்; கல்விச் சாலைகள் வைப்போம் என்றும், வானை அளப்போம்; கடல் மீனை அளப்போம்;  சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்றும், உலகத்தொழிலனைத்தும் உவந்து செய்வோம் என்றும் கூறிய, நம் தேசியக் கவியாகிய பாரதியின்  கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் நாட்டின் முன்னேற்றத்தில் நாமும் பாடுபடுவோம்.

நன்றி.

Leave a Comment