ராஜராஜ சோழன் பிறந்த ஊர் எது? இப்போது எப்படி இருக்கிறது?

சோழ சாம்ரஜ்ஜியத்தின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்ற மன்னர்களில் ராஜராஜ சோழன் மிக முக்கியமானவர்.

அவருடைய பிறப்பும், பதவி ஏற்பும், இறப்பும் இன்றளவிலும் பேசு பொருளாகவே இருந்து வருகிறது.

அவரது தாய், அவரது பூர்வீக ஊர், ஆகிய விஷயங்களைப் பற்றிய முழு தகவல்களை அறிந்துகொள்ள, அக்காலத்தில் மலையமானாடு என்று அழைக்கப்பட்ட நடுநாட்டின் தலைநகரான திருக்கோவிலூருக்கு பயணித்தோம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் இறங்கி தென்பெண்ணை ஆற்றை நோக்கி நடந்தோம். மிகப் பரந்த மணல் பரப்பை கொண்ட தென்பெண்ணை ஆற்றின் கரை அருகில் கபிலர் குன்றை தாண்டி வீரட்டானேஸ்வரர் கோவிலை அடைந்தோம். அங்கு தற்போது கோவிலை புனரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.

அகநானூற்றுப் பாடலில் துஞ்சா முழுவிற் கோவல் என்றும் புறநானூற்றில் முரண்மிகு கோவலூர் என்றும் குறிப்பிட்ட இந்தப் பகுதி கோவில் கல்வெட்டில் படிக்கும் பொழுது திருக்கோவிலூர் என்றே பொறிக்கப்பட்டுள்ளது. அழகிய கோவில்கள் நிறைந்த இந்த ஊர் வரலாற்றில் அதி முக்கியத்துவம் வாய்ந்தது என்று வரலாற்று ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திய வரலாற்றில் சோழர்கள் வம்சம் நீண்ட காலம் புகழ்பெற்று இருந்ததற்கும் தற்பொழுது பேசப்பட்டு வருவதற்கும் மிக முக்கிய காரணமே இந்த திருக்கோவிலூர் தான். மலையமான்கள் ஆண்ட இந்த பகுதியில் திருக்கோவிலூரை ஆண்ட மலையமானின் மகளாகப் பிறந்த வானவன் மாதேவி தான், தஞ்சை பெருவுடையார் கோயில் எனும் அதிசயத்தை இன்றளவிலும் தலை நிமிர்ந்து பார்க்கும் படி செய்த ராஜ ராஜ சோழனின் தாயார்.

திருக்கோவலுர் இளவரசியை மணந்த சுந்தர சோழன்

திருக்கோவலூரைப் பற்றி விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ் கூறும் போது, கடந்த காலங்களில் திருக்கோவிலூர் பகுதி மலையமானாடு என்று அழைக்கப்பட்டது, என்றார்.

“கி.பி. 912 முதல் கி.பி. 949 தக்கோலப் போர் நடக்கும் வரை சோழர்கள் மலையமானாட்டை ஆண்டு வந்தனர். கிபி 949 தக்கோலப் போரில் மூன்றாம் கிருஷ்ண தேவனால் முதல் பராந்தகனின் முதல் மகன் ராஜாதித்தன் கொல்லப்பட்டான். இதனால் சோழர்களின் ஆட்சி மலையமானாட்டில் சிறிது காலம் இல்லாமல் போயிற்று என்ற போதிலும் கி.பி. 965 -ஆம் ஆண்டுக்கு பிறகு சோழர்களுடைய ஆட்சி திருக்கோவிலூர் பகுதியில் நிரந்தரம் ஆகிவிட்டது,” என்றார்.

மேலும் பேசிய அவர், சுந்தர சோழன் திருக்கோவிலூர் மலையமானின் மகளை மணந்தவன். இவருக்கு தேவிஅம்மன், வானவன்மாதேவி என்ற இரண்டு மனைவிகள் உண்டு என திருக்கோவிலூர் கல்வெட்டு கூறுகிறது. இதில் வானவன் மாதேவி திருக்கோவிலூரை ஆண்ட மலையமானின் மகள் என்பதை தெளிவுபடுத்துகிறது,” என்றார்.

“மேலும் வானவன்மாதேவி கணவன் சுந்தர சோழன் மீது மிகுந்த அன்பு கொண்டவள் அதனால்தான் இந்த மன்னன் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலமாகவும் அறியலாம். மேலும் திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோயில் கல்வெட்டிலும் இது தெளிவாக பொறிக்கப்பட்டுள்ளது,” என்றார்.

மேலும் பேசிய அவர், சுந்தர சோழனுக்கும் வானவன் மாதேவிக்கும் பிறந்தவர்களே ஆதித்த கரிகாலன், அருண்மொழி தேவன் எனும் ராஜராஜ சோழன் என்ற இரண்டு மகன்களும், குந்தவை எனும் பெண்ணும் ஆவார்கள் . தொடர்ந்து கல்வெட்டு பாடலையும் தெளிவாக படித்துக் காட்டினார்.

ஆதாரமான கல்வெட்டு

தொடர்ந்து, தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் வெங்கடேசன் ராஜராஜ சோழன் பிறந்த ஊர் திருக்கோவிலூர் என்பதற்கு ஆதாரமாக இருக்கும் கல்வெட்டை முழுவதுமாக படித்து அதை விளக்கிக் கூறினார்

“திருக்கோவிலூர் மலையமான் வம்சத்தில் பிறந்த வானவன் மாதேவிக்கும் சுந்தர சோழனுக்கும் திருமணம் நடக்கிறது. அவர்களுக்குப் பிறந்த குழந்தைதான் ராஜராஜ சோழன். இது பற்றி திருக்கோவிலூர் கோவிலில் உள்ள கல்வெட்டில், இந்தக் குழந்தை இந்திரனுக்கு ஒப்பானவன். மான் வயிற்றில் பிறந்த புலியானவன்,” என்றும் கூறப்பட்டுள்ளது என்றார்.

“இந்நிலையில் காஞ்சிபுரத்தில் மாளிகையில் இருக்கும் பொழுது சுந்தர சோழன் இறக்கின்றான்.

“தன் கணவன் இறந்த செய்தியறிந்து உடன்கட்டை ஏற வானவன் மாதேவி தயாராகிறார். வீரட்டானேஸ்வரர் கோவில் அருகில் தென்பெண்ணை ஆற்றில் உள்ள கபிலக்கல்லில் உடன்கட்டை ஏறுகிறார். இதை திருக்கோவிலூர் கீழையூர் கோவில் கல்வெட்டு தெளிவாக கூறுகிறது. இதையே திருவாலங்காடு செப்பேடுகளும் கூறுகிறது என்று அந்தப் பாடலைப் படித்தும் காண்பித்தார்.

‘திருக்கோவிலூரின் தொப்புள் கொடி உறவு தான் ராஜராஜன்’

திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலின் தலைமை குருக்கள் சுந்தரமூர்த்தி கல்வெட்டு இருக்கும் இடத்தை காண்பித்து அதைப்பற்றி எடுத்துக் கூறினார்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கல்வெட்டை ஆய்வாளர் நாகசாமி கண்டுபிடித்தார், என்று கூறிய சுந்தரமூர்த்தி, மேலும் தொடர்ந்தார்.

“தொடர்ந்து 10 நாட்கள் இங்கு தங்கி இந்த கல்வெட்டு முழுக்கவும் படித்து ஆவணப்படுத்தினார்கள். இந்தக் கல்வெட்டில் இருந்து தான் ராஜராஜசோழன் இங்கே பிறந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பல வருடங்களாக ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்து இந்த கல்வெட்டு மற்றும் கோவில் கட்டமைப்புகளையும் ஆர்வமுடன் பார்த்து வியந்து வருகின்றார்கள். இது எங்களுக்கு பெருமையாக உள்ளது,” என்று கூறினர்.

மேலும், “மலையமானாட்டின் தொப்புள்கொடி உறவாகத்தான் தஞ்சாவூரை நாங்கள் பார்க்கின்றோம்,” என்று கூறி முடித்தார்.

சோழ வரலாற்றின் நான்கு காலகட்டங்கள்

சோழர்களின் வரலாற்றை வரலாற்று ஆசிரியர்கள் நான்கு காலகட்டங்களாகப் பிரித்துள்ளனர்.

ஆரம்பகால சோழ வம்சம் என கருதப்படுபவர்கள் சங்ககால சோழர்கள் என அழைக்கப்படுகிறார்கள். அவர்களைப் பற்றின தெளிவான ஆதாரப்பூர்வமான தகவல்கள் ஆவணப்படுத்தப்படவில்லை.

சங்ககாலத்திற்கு பின்பு 600 ஆண்டுகளாக சோழர்கள் என்ன ஆனார்கள், எங்கு சென்றார்கள் என்ற விவரம் இல்லை. இது சோழ வரலாற்றின் இருண்ட பகுதியாகவும் இரண்டாவது பாகமாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றார்கள்.

கி.பி. 846ஆம் ஆண்டுக்கு பிறகுதான் சோழ வம்சம் நிகழ்த்திய சாதனைகளை வரலாற்றுப் பக்கங்கள் தனித்தன்மையுடன் சுமந்து நிற்கின்றது. 846ஆம் ஆண்டு சோழ வம்சத்தின் மறுபிறப்பாகும். மன்னர் விஜயாலயன் காலத்திலிருந்து தொடங்கும் சோழர்களின் காலம் பொற்காலம் என்று கருதப்படிகிறது. இது அவர்களின் மூன்றாம் பாகமாக கருதப்படுகிறது.

அதன் பிறகு நான்காவதாகவும் இறுதியானதாகவும் சுட்டிக்காட்டப்படும் காலம். பதினொன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய குலோத்துங்க சோழனின் சாளுக்கிய சோழ வம்ச காலமாகும். கி.பி. 1279ஆம் ஆண்டு மூன்றாம் ராஜேந்திர சோழ மன்னனுக்கு பின் சோழ வம்சத்தின் ஆளுமை முடிவுக்கு வந்தது.

பிற்கால சோழர்களில் ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் மிக முக்கியமானவர்கள். இதில் சோழ நாட்டுப்பகுதியை செழுமையான, வலிமையான நாடாக உருவாக்கியதில் ராஜராஜ சோழனுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. ராஜராஜன் தனது ராணுவத்தில் 30-க்கும் மேற்பட்ட படைப்பிரிவுகளை வைத்திருந்ததை தஞ்சை கோவில் கல்வெட்டு மூலம் அறியலாம்.

Leave a Comment