இயல் – 4
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ‘உனதருளே பார்ப்பன் அடியேனே ‘ – யாரிடம் யார் கூறியது?
அ) குலசேகராழ்வாரிடம் இறைவன் ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
இ) மருத்துவரிடம் நோயாளி ஈ) நோயாளியிடம் மருத்துவர்
2. தலைப்புக்கும் குறிப்புக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
தலைப்பு : செயற்கை நுண்ணறிவு
குறிப்புகள் : கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன்
பார்வையைத் திருப்புகிறது. திறன்பேசியில் உள்ள வரைபடம்
போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காட்டுகிறது.
அ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
ஆ) குறிப்புகளுக்குத் தொடர்பில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இ) தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
ஈ) குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.
3. பரிபாடல் அடியில் ‘விசும்பும் இசையும்’ என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?
அ) வானத்தையும் பாட்டையும் ஆ) வானத்தையும் புகழையும்
இ) வானத்தையும் பூமியையும் ஈ) வானத்தையும் பேரொலியையும்
4. குலசேகர ஆழ்வார் ‘வித்துவக் கோட்டம்மா’ என்று ஆண் தெய்வத்தை அழைத்துப்
பாடுகிறார். பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார். இத்தொடர்களில்
இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே –
அ) மரபு வழுவமைதி, திணை வழுவமைதி
ஆ) இட வழுவமைதி, மரபு வழுவமைதி
இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி
ஈ) கால வழுவமைதி, இட வழுவமைதி
5. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
அ) துலா ஆ)சீலா இ) குலா ஈ) இலா
6. ’இயல்பான மொழிநடையை உருவாக்குதல்’ என்னும் மென்பொருள்—–.
அ) வாட்சன் ஆ) பெப்பர் இ) வேர்டுஸ்மித் ஈ) இலா
7. ‘மீளாத்துயர்’ இத்தொடரில் உள்ள இலக்கணக் குறிப்பை எழுதுக.
அ) எதிர்மறைப் பெயரெச்சம் ஆ) நான்காம் வேற்றுமைத் தொகை
இ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஈ) பண்புத்தொகை
8. தனிநபர் கணினிகளின் வளர்ச்சி எந்த ஆண்டுகளிலிருந்து தொடங்குகிறது?
அ) 1960களில் ஆ) 1970களில் இ) 1980களில் ஈ) 1890களில்
9. ’வேர்டுஸ்மித்’ என்பதன் பொருள் ——–.
அ) எழுத்தாணி ஆ) எழுத்தாலி இ) எழுத்தாளி ஈ) எழுத்துரு
10. இதழியலில் பயன்படும் மென்பொருள்———–.
அ) உரையாடு மென்பொருள் ஆ) உதவு மென்பொருள் இ) எழுத்தாளி ஈ) எழுத்துரு
11. வேர்டுஸ்மித் ——- குப் பயன்படுகிறது.
அ) கடிதம் ஆ) இயல்பான மொழிநடையை உருவாக்கத்திற் இ) கவிதை ஈ) ஓவியம்
12. ஐ.பி.எம் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுக் கணினி வாட்சன் எந்த ஆண்டு
வடிவமைக்கப்பட்டது?
அ) 2014 ஆ) 2015 இ) 2016 ஈ) 2018
13. ‘இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்’ – என்ற பாடல் அடிகளுக்கு
உரியவர்———–.
அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) கண்ணதாசன் ஈ) வாணிதாசன்
14. மெய்நிகர் உதவியாளர் என்பது ஒரு ———– மென்பொருள்.
அ) உரையாடு ஆ) உதவு இ) எழுத்தாளி ஈ) இயல்பான் மொழிநடையை உருவாக்கும்
15. இலா என்பது ஒரு ———– மென்பொருள்.
அ) உரையாடு ஆ) உதவு இ) எழுத்தாளி ஈ) இயல்பான் மொழிநடையை உருவாக்கும்
16. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் ஒரு வினாடியில் எத்தனை
வாடிக்கையாளர்களிடம் உரையாடும் ?
அ) நூறு ஆ) ஆயிரம் இ) பத்தாயிரம் ஈ) ஒரு லட்சம்
17. ஜப்பானின் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன் ———–.
அ) பெப்பர் ஆ) பேப்பர் இ) சாப்ட்வேர் ஈ) ஹாட்வேர்
18. சீன பேரரசர் குப்லாய்கானின் ஆணையின்கீழ் கட்டப்பட்ட கோவில் ——- கோவில்.
அ) சிவன் ஆ) திருமால் இ) விநாயகர் ஈ) முருகன்
19. சீனாவில் காணப்படும் துறைமுகம் ————-.-
அ) முசிறி ஆ) கொற்கை இ) சூவன்சௌ ஈ) தொண்டி
20. சீன பேரரசர் குப்லாய்கானின் ஆணையின்கீழ் கட்டப்பட்ட சிவன் கோவில் ————-
காலத்தது.
அ) சேரர் ஆ) சோழர் இ) பாண்டியர் ஈ) பல்லவர்
21. குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி இடம்பெற்றுள்ள நூல் ———–.
அ) நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் ஆ) பன்னிருத் திருமுறை
இ) மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் ஈ) மீனாட்சியம்மைக் குறம்.
22. நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்தில் பெருமாள் திருமொழி ————ல் உள்ளது.
அ) முதலாயிரம் ஆ) இரண்டாயிரம் இ) மூன்றாயிரம் ஈ) நான்காயிரம்
23. நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்தில் பெருமாள் திருமொழி ———– திருமுறையாக
உள்ளது.
அ) இரண்டாம் ஆ) மூன்றாம் இ) நான்காம் ஈ) ஐந்தாம்
24. பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ———.
அ) 150 ஆ) 105 இ) 106 ஈ) 107
25. குலசேகரரின் காலம் ———- நூற்றாண்டு.
அ) எட்டாம் ஆ) ஒன்பதாம் இ) பத்தாம் ஈ) பன்னிரண்டாம்
26. பரிபாடல் ——— நூல்களுள் ஒன்றாகும்.
அ) எட்டுத்தொகை ஆ) பத்துப்பாட்டு
இ) சங்க மருவிய இலக்கியம் ஈ) ஐம்பெருங்காப்பியம்
27. பரிபாடலுக்கான அடையாளமாகக் கூறப்படுவது——.
அ) நல்ல ஆ) ஒத்த இ) ஓங்கு ஈ) கற்றறிந்தார் ஏத்தும்
28. சங்க இலக்கியங்களில் பண்ணொடு பாடப்பட்ட நூல் ———-.
அ) நற்றிணை ஆ) குறுந்தொகை இ) பதிற்றுப்பத்து ஈ) பரிபாடல்
29. பரிபாடலில் உள்ள எழுபது பாடல்களில் தற்போது கிடைத்துள்ள பாடல்களின்
எண்ணிக்கை———.
அ) 20 ஆ) 21 இ) 22 ஈ) 24
30. தமிழில் உயர்திணைக்குரிய பால்களின் எண்ணிகை———–.
அ) 2 ஆ) 3 இ) 5 ஈ) 7
31. தமிழில் அஃறிணைக்குரிய பால்களின் எண்ணிகை———–.
அ) 2 ஆ) 3 இ) 5 ஈ) 7
32. தமிழில் திணை, பால், இடம் முறையே —— வரிசை ஆகும்.
அ) 3,2,5 ஆ) 3,5,2 இ) 5,2,3 ஈ) 2, 5, 3
33.இலா என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருளை உருவாக்கியது ———— வங்கி
ஆகும்.
அ) பாரத ஸ்டேட் வங்கி ஆ) இந்தியன் வங்கி
இ) இந்தியன் ஓவர் சீஸ் வங்கி ஈ) சென்ட்ரல் வங்கி
34. வித்துவக்கோடு என்னும் ஊர் ———- மாநிலத்தில் உள்ளது.
அ) தமிழ்நாடு ஆ) ஆந்திரம் இ) கேரளா ஈ) கர்நாடகா
35. வித்துவக்கோடு என்னும் ஊர் கேரளா மாநிலத்தில் ——– மாவட்டத்தில் உள்ளது.
அ) கோழிக்கோடு ஆ) கர்னூல் இ) மாண்டியா ஈ) பாலக்காடு
36. பரிபாடலில் விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல என்னும் அடி உள்ள பாடலை இயற்றியவர்
அ) கீரந்தையார் ஆ) திருவள்ளுவர் இ) கபிலர் ஈ) குலசேகராழ்வார்
37. ELA – என்பதன் விரிவாக்கம்.
அ) Electric Live Assistant ஆ) Electronic Live Assistant
இ) Eduction Live Assistant ஈ) Election Live Assistant
1. உயர்திணை என்று யாரை அழைப்பர்?
அ) விலங்குகளை ஆ) பறவைகளை இ) மரங்களை ஈ) மக்களை
2. திணையின் உட்பிரிவு ——– ஆகும் .
அ) பால் ஆ) எண் இ) இடம் ஈ) காலம்
3. தமிழ் இலக்கணம் கூறும் ‘பால்’ என்பதன் பொருள் பகுப்பு அல்லது பிரிவு ஆகும். இக்கூற்றில்,
அ) பகுப்பு என்பது சரி, பிரிவு என்பது தவறு
ஆ) பிரிவு என்பது சரி, பகுப்பு என்பது தவறு
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
4. ஐம்பாலில் அஃறிணைக்கு உரிய பால்கள் எவை?
அ) ஆண்பால், பெண்பால் ஆ) ஆண்பால், பெண்பால், பலர்பால்
இ) ஒன்றன்பால், பலவின்பால் ஈ) பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
5. ஐம்பாலில் உயர்திணைக்கு உரிய பால்கள் எவை?
அ) ஆண்பால், பெண்பால் ஆ) ஆண்பால், பெண்பால், பலர்பால்
இ) ஒன்றன்பால், பலவின்பால் ஈ) பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
6. ’ஆடவர்’ என்னும் சொல் எந்த பாலைக் குறிக்கும்?
அ) ஆண்பால் ஆ) பெண்பால்
இ) பலர்பால் ஈ) ஒன்றன்பால்
7. ’அண்ணன்’ என்னும் சொல் எந்த பாலைக் குறிக்கும்?
அ) ஆண்பால் ஆ) பெண்பால்
இ) பலர்பால் ஈ) ஒன்றன்பால்
8. ’யானை, புறா, மலை ’ முதலிய சொற்கள் எந்த பாலைக் குறிக்கும்?
அ) ஆண்பால் ஆ) பெண்பால்
இ) பலர்பால் ஈ) ஒன்றன்பால்
9. ’வந்தேன்’ என்னும் சொல் ஒரு ———— சொல்லாகும்.
அ) தன்மைப் பெயர் ஆ) தன்மை வினை
இ) படர்க்கைப் பெயர் ஈ) படர்க்கை வினை
10. இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் ———- ஆகும்.
அ) வழுநிலை ஆ) வழாநிலை
இ) வழுவமைதி ஈ) கால வழு
11. இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் ———- ஆகும்.
அ) வழுநிலை ஆ) வழாநிலை
இ) வழுவமைதி ஈ) கால வழு
12. இலக்கண முறைப்படி பிழை உடையது. எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்பட்டது ——— ஆகும்.
அ) வழுநிலை ஆ) வழாநிலை
இ) வழுவமைதி ஈ) கால வழு
13. செழியன் வந்தது என்பது ஒரு ——— வழு ஆகும்.
அ) திணை வழு ஆ) பால் வழு
இ) இட வழு ஈ) கால வழு
14. ”கத்தும் குயிலோசை – சற்றே வந்து காதில் படவேணும்” என்னும் பாரதியின் அடிகள் ——- க்குச் சான்று ஆகும்.
அ) வழுநிலை ஆ) வழாநிலை
இ) வழுவமைதி ஈ) கால வழு
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
- செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று
உள்முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்
1. இப்பாடலின் ஆசிரியர்?
அ) நக்கீரர் ஆ) கீரந்தையார்
இ) முடத்தாமைக் கண்ணியார் ஈ) முடியரசன்
2. இப்பாடல் இடம்பெற்ற நூல்?
அ) பரிபாடல் ஆ) குறிஞ்சிப்பாட்டு
இ) திருமுருகாற்றுப்படை ஈ) கூத்தராற்றுப்படை
3. இலக்கணக்குறிப்புத் தருக – செந்தீ
அ) பண்புத்தொகை ஆ) வினைத்தொகை
இ) உவமைத்தொகை ஈ) உம்மைத்தொகை
4. பொருள் தருக – பீடு
அ) பாம்பு ஆ) கொம்பு
இ) சிறப்பு ஈ) நூல்
5. பிரித்து எழுதுக- செந்தீ
அ) செந்+தீ ஆ) சிவந்த + தீ இ) சிவப்பு +தீ ஈ)செம்மை+தீ
(ஊழ் ஊழ் – அடுக்குத்தொடர்; கிளர்ந்த, சுடரிய – பெயரெச்சம்; செல்ல, தோன்றி, மூழ்கி – வினையெச்சம்; தலைஇய- சொல்லிசை அளபெடை; இருநிலத்து – உரிச்சொற்றொடர்)
- வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா!நீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே!.
1. இப்பாடலின் ஆசிரியர்?
அ) நக்கீரர் ஆ) குலசேகராழ்வார்
இ) முடத்தாமைக் கண்ணியார் ஈ) முடியரசன்
2. இப்பாடல் இடம்பெற்ற நூல்?
அ) பெருமாள் திருமொழி ஆ) குறிஞ்சிப்பாட்டு
இ) திருமுருகாற்றுப்படை ஈ) கூத்தராற்றுப்படை
3. மாளாத காதல் – வண்ணமிட்ட சொல்லுக்கான இலக்கணக்குறிப்பு
அ) பெயரெச்சம் ஆ) எதிர்மறைப் பெயரெச்சம்
இ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஈ) வினையெச்சம்
(அறுத்து – வினையெச்சம்; மீளா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்)
குறுவினாக்கள்
1. வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு
அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக.
- செயற்கை நுண்ணறிவால் இயங்கும் தானியங்கிக் கதவுகள்.
- செயற்கை நுண்ணறிவால் இயங்கும் மின்சாதன பொருள்கள் (மின் விளக்குகள் முதலியன)
2. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு
ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன் – இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?
- இத்தொடர், கோடை விடுமுறையில் ‘செல்வேன்’ என அமைதல் வேண்டும்.
- அவ்வாறு அமையாததால் கால வழுவாயிற்று. எனினும் உறுதிப் பொருள் கருதி கால வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
3. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
- மருத்துவர், தன்னைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது தம்மீது கொண்ட அன்பின் காரணமாகவே என நோயாளிக் கருதுகிறார்.
- அந்த அன்பும், மருத்துவத்தின் மீதான நம்பிக்கையும் அவர் நோயைக் குணமாக்குகிறது.
4. உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்
வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.
- நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற ஐந்தும், உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல்களாகப் பரிபாடல் குறிப்பிடுகிறது.
5. “சீசர் எப்போதும் என் சொல் பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக்
கத்துவானே தவிர கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப்
பற்றிப் பெருமையாகக் கூறினார் – இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.
- சீசர் எப்போதும் என் சொல் பேச்சைக் கேட்கும்.
- புதியவர்களைப் பார்த்துக் குரைக்குமே தவிர கடிக்காது.
கூடுதல் வினாக்கள்
13. ‘வேர்டுஸ்மித்’ என்றால் என்ன?
- இயல்பான மொழிநடையை உருவாக்கும் மென்பொருளுக்கு ‘வேர்டுஸ்மித்’ என்று பெயர்.
- இது இதழியலுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு மென்பொருள் ஆகும்.
- இது தகவல்களைக் கொடுத்ததுமே அழகானக் கட்டுரையைச் சில நொடிகளிலேயே உருவாக்கிவிடும்.
14. செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?
- செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு மென்பொருளையோ அல்லது கணினி செயல்திட்ட வரைவையோ குறிக்கும்.
- அது தானாகக் கற்றுக்கொள்ளக்கூடியது.
- அக்கற்றலின் மூலம் சூழல்களைப் புரிந்துகொண்டு, தானே முடிவெடுக்கும் தன்மையினை உடையது.
15. செயற்கை நுண்ணறிவுத் திறனுக்குச் சில சான்றுகள் தருக.
- வணிக வளாகங்களில் நாம் சென்றவுடன் கதவு தானே திறத்தல்.
- அறையில் மூலையில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கருவி அசைவு நிகழும் பக்கம் திரும்புதல்.
- போக்குவரத்து நெரிசலைக் கூறி, மாற்றுத்திசையினைத் திறன்பேசி வாயிலாகக் கூறுதல்.
16. ‘மெய்நிகர் உதவியாளர்’ என்பது எது?
- ‘மெய்நிகர் உதவியாளர்’ என்பது, திறன்பேசிகளில் இயங்கும் ஒரு உதவு மென்பொருள்.
- இது கண்ணுக்குப் புலப்படாமல், மனிதனைப் போல நம்முடன் உரையாடி சில உதவிகள் செய்கிறது.
17. இலா(ELA) மென்பொருள் பற்றி எழுதுக.
- இலா(ELA) என்பது ஒருவகை உரையாடு மென்பொருள்.
- இது ஒரு விநாடிக்குப் பத்தாயிரம் வாடிக்கையாளர்களுடன் உரையாடும்.
- வங்கிக்கு வரும் வாடிக்கையாளருக்குச் சேவைகளை இணையம் மூலம் அளிக்கிறது.
18. ‘பெப்பர்’ என்னும் ரோபோ குறித்து எழுதுக.
- ஜப்பான் சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனே பெப்பர்.
- வீட்டுக்கு, வணிகத்துக்கு, படிப்புக்கு என்று மூன்றுவகை ரோபோக்கள் கிடைக்கின்றன.
- செயற்கை நுண்ணறிவு வாட்சன் குறித்து எழுதுக.
- 2016 ஆம் ஆண்டு ஐ.பி.எம் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
- சில நிமிடங்களிலேயே இரண்டு கோடித்தரவுகளை அலசி. நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.
- சீனாவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் வாட்சன், அவர்களின் வட்டார வழக்குச் சொற்களையும் புரிந்துகொண்டு அவர்களுக்குச் சேவை செய்கிறது.
19. குலசேகர ஆழ்வார் அன்னையாக உருவகித்துப் பாடுவது யாரை?
- குலசேகர ஆழ்வார் அன்னையாக உருவகித்துப் பாடுவது
- வித்துவக்கோட்டு இறைவனான உய்யவந்த பெருமாளை.
- குலசேகர ஆழ்வார் குறிப்பு வரைக.
- பெயர்: குலசேகர ஆழ்வார்
- ஊர்: கேரளமாநிலத்தில் உள்ள வித்துவக்கோடு
- காலம் : எட்டாம் நூற்றாண்டு
- இயற்றியது: 105 பாசுரங்கள் கொண்ட ஐந்தாம் திருமொழி (நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்துள்)
20.பரிபாடல் குறிப்பு வரைக.
- பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
- இது “ஓங்கு பரிபாடல்” என்று அழைக்கப்படும்.
- சங்க நூல்களுள் பண்ணொடு பாடப்பட்ட நூல் இதுவாகும்.
- உரையாசிரியர்கள் இதில் எழுபது பாடல்கள் உள்ளதாகக் கூறியுள்ளனர். இருப்பினும் இன்று 24 பாடல்களே கிடைத்துள்ளன.
- சங்க இலக்கியங்களின் மூலம் நாம் எவற்றை அறியலாம்?
- ஈராயியம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, சமூக உறவு அரிவாற்றல்,
- இயற்கையைப் புரிந்துகொள்ளும் திறன், போன்றவற்றைச் சங்க இலக்கியங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.
- பரிபாடலில் குறிப்பிட்டுள்ள ஊழிகளைக் கூறுக.
- வெற்றுவெளியில் அண்டத்தோற்றத்துக்குக் காரணமான கரு பேரொலியுடன் தோன்றியது.
- பின்னர், காற்று முதலான பூதங்களின் அணுக்களுடன் வளர்கின்ற வானம் என்னும் முதல் பூதத்தின் ஊழிக்காலம் தோன்றியது.
- பின்னர், அந்த அணுக்களின் ஆற்றல் கிளர்ந்து பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக்காலம் கடந்து சென்றது.
- பின்னர், நெருப்புபோலப் புவி உருவாகி விளங்கிய ஊழிக்காலம் தொடர்ந்தது.
- பின்னர், பூமி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது.
- பின்னர், உயிர்கள் வளரும்படியான சூழல் உருவாகியது.
- வழுவமைதி என்றால் என்ன?
- இலக்கண முறையின்றி பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்.
- இவ்வழுவை ஏதேனும் ஒரு காரணம் கருதி ஏற்றுக் கொள்வது வழுவமைதி.
- வழுவமைதி எத்தனை வகைப்படும் அவை யாவை?
- வழுவமைதி ஐந்து வகைப்படும்.
- அவை, திணை, பால், இடம், காலம், மரபு என்பனவாகும்.
திணை – மாட்டை “ என் அம்மை வந்தாள்” என்று அழைத்தல்.
பால் – “வாடா இராசா” என்று தன் மகளை அழைத்தல்.
இடம் – மாறன் என்பான் தன்னைப்பற்றிப் பிறரிடம் கூறும்போது, “இந்த மாறன் ஒருநாளும் பொய் கூறமாட்டான்” எனத் தன்மையினைப் படர்க்கையில் கூறுதல்.
காலம் – ”குடியரசு தலைவர் நாளை தமிழகம் வருகிறார்” என்று கூறுதல்
மரபு – ”கத்தும் குயிலோசை – சற்றே வந்து
காதில் படவேணும் “ – பாரதியார்.
- திணை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- திணை இரண்டு வகைப்படும்.
- அவை, உயர்திணை, அஃறிணை
- ஐம்பாலினைக் கூறுக.
- உயர்திணை – ஆண்பால், பெண்பால், பலர்பால்
- அஃறிணை – ஒன்றன்பால், பலவின்பால்
- மூவிடத்தினைக் கூறுக.
- தன்மை, முன்னிலை, படர்க்கை
- மூவிடத்தினை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
இடம் | பெயர்/வினை | எடுத்துக்காட்டு |
தன்மை | தன்மைப் பெயர் | நான், யான், நாம், யாம்… |
தன்மை வினை | வந்தேன், வந்தோம் | |
முன்னிலை | முன்னிலைப்பெயர் | நீ, நீர், நீவிர், நீங்கள் |
முன்னிலை வினை | நடந்தாய், வந்தீர், சென்றீர்கள்.. | |
படர்க்கை | படர்க்கைப்பெயர் | அவன், அவள், அவர், அது, அவை |
படர்க்கை வினை | வந்தான், வந்தாள், வந்தனர், வந்தது,வந்தன |
- வழு என்றால் என்ன?
- இலக்கண முறையின்றி பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்.
- செழியன் வந்தது.
- வழாநிலை என்றால் என்ன?
- இலக்கண முறையுடன் பிழையின்றி பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும்.
- அவன் வந்தான்
- வழு எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- வழுவினை ஏழு வகையாக வகைப்படுத்துவர்.
- அவை, திணை, பால் , இடம், காலம், வினா, விடை, மரபு
- திணை – செழியன் வந்தது
- பால் – கண்ணகி உண்டான்
- இடம் – நேற்று வருவான்
- வினா – ஒரு விரலைக் காட்டிச் ’சிறியதோ? பெரியதோ?’ என்று கேட்டல்.
- விடை – ‘முகிலன் எங்கே இருக்கிறார்?’ என்ற வினாவிற்குக் கண்ணாடி, பைக்குள் இருக்கிறது என்று விடையளித்தல்.
- மரபு- நாய் கத்தியது என்று கூறல்.
சிறுவினாக்கள்
1. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது
குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.
- வாகனங்களை இயக்குவதற்கும் நிறுத்துவதற்கும் தானியங்கி இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- அந்த வழியில் போக்குவரத்து நெரிசல் அதிகம். இதுவே சுருக்கமான வழி என்று நமது திறன்பேசியில் உள்ள வழிகாட்டி வரைபடம் காட்டுகிறது.
- நமது திறன் பேசியோ, கணினியோ நாம் சொல்லச் சொல்லத் தன் அகண்ட தரவுகளில் உள்ள கோடிக்கணக்கான சொற்களுடன் ஒப்பிட்டுச் சரியான சொல்லைக் கண்டுபிடிக்கிறது.
- விடுதிகளில், வங்கிகளில் அலுவலகங்களில் தற்போது மனிதர் அளிக்கும் சேவையை ரோபோக்கள் அளிக்கின்றன.
- மனிதனால் முடியும் செயல்களையும் அவன் கடினம் என்று நினைக்கும் செயல்களையும் கூட செய்து விடுகின்றன.
- எனவே, இக்கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனிதனை மேம்படுத்துவதாகவே அமைகின்றன.
2. மனிதர்களின் மூளையைப் போன்றது, செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினியின்
மென்பொருள். மனிதனைப் போலவே பேச , எழுத, சிந்திக்க இத்தொழில் நுட்பம் மேம்படுத்தப்படுகிறது. இதனால் மனித குலத்துக்கு ஏற்படுகிற நன்மைகளைப் பற்றி அறிவியல் இதழ் ஒன்றுக்கு ‘எதிர்காலத் தொழில்நுட்பம்’ என்ற தலைப்பில் எழுதுக.
‘எதிர்காலத் தொழில்நுட்பம்’
- எதிர்காலத் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவைக் கொண்டே செயல்படுத்தப்படும்.
- அறையின் மூலையில் நிறுவப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கருவி அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புவதும்,
- ‘அந்த வழியில் போக்குவரத்து நெரிசல் அதிகம், இதுவே சுருக்கமான வழி’ என்று நமது திறன்பேசியில் உள்ள வழிகாட்டி வரைபடம் காட்டுவதும் செயற்கை நுண்ணறிவாலேயே இன்றே நிகழ்கின்றன. இது மேலும் அனைத்துத் துறையிலும் விரிவுபடுத்தப்படும்.
- செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திரம் மனிதர்களுடன் சதுரங்கம் முதலான விளையாட்டுகளை விளையாடும்; கண் அறுவை மருத்துவம் செய்யும்; சமைக்கும்.
- எதிர்காலத்தில் ‘ரோபோ’விடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக அலுவலகம் செல்லும் பெற்றோர்களை நாம் பார்க்கப் போகிறோம்.
3. “மாளாத காதல் நோயாளன் போல்” என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை
விளக்குக.
உவமை – ”மாளாத காதல் நோயாளன் போல் “
செய்தி
- உடலில் ஏற்பட்ட புண்ணை, மருத்துவர் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என நோயாளி நினைத்து அம்மருத்துவரை நேசிப்பது போல,
- வித்துவக்கோட்டு இறைவா, நீ எனக்கு நீங்காத துன்பத்தைத் தந்தாலும் அடியவனாகிய நான், உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கிறேன் என ஆழ்வார் கருதுவதாக இவ்வுவமைச் சுட்டுகிறது.
4. நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத் தோப்பில்
குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது; தந்தை என்னிடம், “இலச்சுமி கூப்பிடுகிறாள், போய்ப் பார்” என்றார். “இதோ சென்று விட்டேன்” என்றவாறே அங்குச் சென்றேன். துள்ளிய குட்டியைத் தடவிக் கொடுத்து, “என்னடா விளையாட வேண்டுமா?” என்று கேட்டு அவனை அவிழ்த்து விட்டேன். என் தங்கை அங்கே வந்தாள். அவளிடம், “நீயும் இவனும் விளையாடுங்கள்” என்று கூறினேன். அவிழ்த்து விடப்பட்ட இலச்சுமித் தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள். – இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.
- வாழைத் தோப்பில் (வாழைத் தோட்டத்தில்) – மரபு வழுவமைதி
- குட்டியுடன் (கன்றுடன்) – மரபு வழுவமைதி
- இலச்சுமி கூப்பிடுகிறாள் (பசு கத்துகிறது) – திணை வழுவமைதி
- இதோ சென்று விட்டேன் (இதோ செல்கிறேன்) – கால வழுவமைதி
- துள்ளிய குட்டியை (துள்ளிய கன்றினை) – மரபு வழவமைதி
- அவனை (கன்றை) – திணை வழுவமைதி
- நீயும் இவனும் (நீயும் அதுவும்) – திணை வழுவமைதி
- நீரைக் குடித்தாள் (நீரைக் குடித்தது) – திணை வழுவமைதி
உரைப்பத்தி வினா-விடை
பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக்காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபொது நெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து மழைப் பொழிந்த ஊழிக் காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாகிய ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக (வெள்ளத்தில் மூழ்குதல்) நடந்த இந்தப பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.
அ. பத்தியில் உள்ள அடுக்குத் தொடர்களை எடுத்து எழுதுக.
மீண்டும் மீண்டும்
ஆ. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?
தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது.
இ. பெய்த மழை – இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.
பெய்மழை
ஈ. இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?
நெருப்புப் பந்தை நீரில் குளிரச் செய்தல்.
உ. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை ?
பஞ்ச பூதங்கள்
நெடுவினாக்கள்
1. ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும்
மென்பொருள் அக்கறைகொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்றுவிடுமா?
இக்கருத்துகளை ஒட்டிச் ’செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள்’ பற்றி ஒரு
கட்டுரை எழுதுக.
முன்னுரை
இவ்வுலகை இதுவரை மென்பொருள் ஆண்டுகொண்டிருக்கிறது. இனிமேல் செயற்கை நுண்ணறிவுதான் ஆளப்போகிறது. சமூக ஊடகங்களின் வழியாகவும் மின்னனு சந்தைகளின் மூலமாகவும் செயற்கை நுண்ணறிவு சிறுகசிறுக நம்மிடம் வரப்போகிறது. அவ்வகையில் செயற்கை நுண்ணறிவின் எதிர்காலச் செயல்பாடுகள் பற்றி விரிவாகக் காண்போம்!
குழந்தையைத் தூக்க உதவும்
மனிதர்களுக்கு உணவு, உடை எப்படி முக்கியமோ? அதைப்போலவே செயற்கை நுண்ணறிவின் தேவையும் முக்கியமாகிவிட்டது. வேலைக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளவும் குழந்தைகளுக்குப் பசி எடுக்கும் நேரம் அறிந்து குழந்தைகளுக்குப் பாலும் உணவும் கொடுக்கவும் செயற்கை நுண்ணறிவு நிறைந்த ரோபோக்களின் தேவை அதிகரித்துவிட்டது.
வீட்டுப்பொருள்களைக் கையாள்வதற்கு உதவும்
மனிதர்கள் தங்கள் வாழ்க்கைக்குப் பொருளீட்ட வேகமாகச் சுழன்றுகொண்டு இருக்கிறார்கள். கீழே விழுந்த பொருளை எடுக்கவும், மேலே இருக்கும் பொருளைக் கீழே இறக்கவும்கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அப்பொருளின் முக்கியத்துவம் தெரியும் . இத்தகைய சூழலில் அவர்களுக்குத் தேவையான பொருளை எடுத்துக்கொடுக்கவும் எடுத்தப்பொருளைப் பாதுகாக்கவும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் முக்கிய பங்காற்றப்போகிறது. ஒவ்வொரு வீட்டிலும் குடும்ப உறுப்பினர்கள் எப்படி முக்கியமோ அதைப் போலவே ரோபோக்களும் முக்கியத்துவம் பெற்றுவிடும்.
வணிகத்தோடு நின்றுவிடாது
குழந்தைகளுடன் விளையாடுவது, முதியோர்களுக்கு உதவி செய்வது, வீட்டில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்வது முதலிய பல வேலைகளை நமக்கு பதிலாக ரோபோவே எதிர்காலத்தில் செய்யும். எனவே, செயற்கை நுண்ணறிவு என்பது வெறும் வணிகத்தோடு மட்டும் நின்றுவிடாமல் நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே மாறிவிடும் என்பதில் ஐயமில்லை.
முடிவுரை
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எதிர்காலத்தில் உலகில் ஒவ்வொரு துறையிலும் அளவிடுதற்கரிய முன்னேற்றத்தைத் தரும் என்பதே திண்ணம்.
2. நம் முன்னோர் அறிவியல் கருத்துகளை இயற்கையுடன் இணைத்துக் கூறுவதாகத்
தொடங்குகின்ற பின்வரும் சொற்பொழிவைத் தொடர்ந்து நிறைவு செய்க .
- பேரன்பிற்குரிய அவையோர் அனைவருக்கும் வணக்கம்! இன்று இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுடன் அறிவியலை நான்காம் தமிழாகக் கூறுகின்றனர். ஆதிகாலந்தொட்டு இயங்கிவரும் தமிழ் மொழியில் அறிவியல் என்பது தமிழர் வாழ்வியலோடு கலந்து கரைந்து வந்துள்ளதை இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். அண்டத்தை அளந்தும், புவியின் தோற்றத்தை ஊகித்தும் கூறும் அறிவியல் செய்திகள் இலக்கியங்களில் உள்ளன.
- சங்க இலக்கியமான பரிபாடலில் ஐம்பெரும் பூதங்கள் எவ்வாறு தோன்றின என்பது விரிவாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பேசப்பட்டுள்ளது. இச்செய்தி பிற சமய நூல்களின் கூற்றுகளோடும் வளர்ந்துள்ள அறிவியல் ஆய்வுகளின் முடிவுகளோடும் பெரிதும் பொருந்தி வருகின்றன.
- அதாவது ஒன்றுக்கொன்று மாறிவரும் இயல்புடைய திங்களும் ஞாயிறும் அறிந்து, விண்ணுலகு வெறும் பாழாகிய பின்னர், அதுவும் கெட்டு ஒன்றுமில்லாமல் சிதைந்து ஒடுங்கிச் சில கழியும் அவ்வூழிகளின் பின்னர் அந்த தோற்றத்தின் பேரொலி ஊழி கழிந்தது.
- தொடர்ந்து வானம் தோன்றி முதல் பூத ஊழியும் அவ்வானத்தினின்று தோன்றிய காற்று ஊழியும் அந்தக் காற்றினின்று தோன்றி ஒளிவீசிய தீ பூதத்தின் ஊழியும் அத்தீயினின்று பனியும் மழையுமாய் தோன்றிய நீர்ப் பூதத்தின் ஊழியும் கழிந்த பின்னர் நீரினுள் மூழ்கி மூழ்கி நெடுங்காலம் கழிந்த பின்னே, நிலமாகிய பூதம் அவ்வெள்ளத்தின் ஊடே பீடுபெற்று எண்ணிறந்த காலம் கழித்து பின்னர் இந்நிலத்தின் உயிர்கள் தோன்றின என்று பரிபாடலில் பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உலகும் உயிரினங்களும் உருவானதாக சுட்டிக் காட்டியுள்ளது.
3. ’அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம்’ என்னும் தலைப்பில்
கற்பனைக் கதை ஒன்று எழுதுக.
எங்கள் பள்ளியில் தகவல் பலகை உள்ளது. அதில் ஒவ்வொரு நாளும் செயதித்தாளில் வந்த முக்கியச் செய்திகளும் விளையாட்டுப்போட்டிகள், கதை, கவிதை, கட்டுரை முதலிய போட்டிகளுக்கான அறிவிப்புகளும் இடம்பெறும். அவ்வறிவிப்புகளைக் கண்டதும் , உடனே நான் அனைத்துப் போட்டிகளிலும் கலந்துகொள்வேன். அவ்வாறே ஒருநாள், ’விண்வெளி விந்தைகள்’ என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டி நடைபெற இருக்கிறது என்றும், போட்டியில் வெற்றி பெறும் மாணவர் விண்வெளி வீரர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளியில் பயணம் செய்யலாம் என்றும் அறிவித்திருந்தனர்.
அன்றுமுதல் இரவுபகல் பாராது பல நூலகங்களுக்குச் சென்று பல நூல்களை எடுத்துப் படித்து எழுதினேன். மேலும் புரியாத கருத்துகளை வகுப்பாசிரியரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு எழுதியனுப்பினேன்.
போட்டியில் முதல் மாணவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதம் எனக்குக் வந்தது. என் மனமகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான் மட்டுமல்ல; என் பள்ளியும் பெற்றோரும்கூட மிகவும் மகிழ்ந்தனர்.
ஒருவாரம் கழித்து ”நான்தான் ஸ்டீபன் ஹாக்கிங் பேசுகிறேன். நாம் விண்வெளிப்பயணம் மேற்கொள்ளலாமா? “ என்று ஸ்டீபன் ஹாக்கிங் கேட்டார். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதுதான் என் விருப்பமும்கூட என்று கூறி, என் வருகையை உறுதிசெய்தேன். உடனே பயணம் செய்யும் நாள், நேரம் முதலிய எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் எனக்குக் கூறினார்.
குறிப்பிட்ட நாளில் விண்வெளிக்குச் செல்லும் நிலையத்திலிருந்து புறப்பட்டோம். விண்வெளியில் சென்றபோது புதியதோர் அதிசய அனுபவம் எனக்கு கிடைத்தது. விண்வெளி ஆய்வு மையத்தில் இருவரும் இறங்கினோம். அங்கு அவர் கருந்துளைப் பற்றி விரிவாகக் எனக்குக் கூறினார். அவரிடம் நான் “நீங்கள் விண்வெளி வீரராக வர உந்துதல் எங்கு? எவ்வாறு? யாரால் ஏற்பட்டது?” எனக் கேட்டேன். அவர் கூறிய விடை என்னை மெய்மறக்கச் செய்தது.
பிறகு, “நாமிருவரும் பூமிக்குத் திரும்பிச் செல்லலாமா?” என்று கேட்டார். போகலாம் என்றேன். விண்வெளியிலிருந்து பூமிக்கு வந்து, என்னை கீழே இறக்கிவிட்டப்பின், “என்னைப் போலவே நீயும் தடைக்கற்களைப் படிக்கற்களாகக் கொண்டு சாதனை படைக்க வேண்டும். அதற்காக உன்னை வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.
“டேய் பாரி! சூரியன் உதித்து ஒருமணிநேரம் ஆகிறது. இன்னும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே? எழுந்திரு!” என்று அம்மா கூறிய குரல் கேட்டது. விழித்துப்பார்த்தேன். பிறகுதான் தெரிந்தது…. கண்டது கனவென்று…
மொழிப்பயிற்சி
1. வல்லின ஒற்றை இட்டும் நீக்கியும் எழுதுக. (மொ.ஆ)
1. காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது கேட்குமா?
காகத்திற்குக் காது உண்டா? அதற்குக் காது கேட்குமா?
2. எல்லா பறவைகளுக்கும் காது உண்டு. செவி துளைகள் இறகுகளால் மூடி இருக்கும்.
மற்றப்படி பாலூட்டிகளில் உள்ளதுபோல் புறசெவிமடல் இருக்காது. காகத்திற்கு காது
உண்டு. காதுக் கேட்கும்.
எல்லாப் பறவைகளுக்கும் காது உண்டு. செவித் துளைகள் இறகுகளால் மூடி இருக்கும். மற்ற படி பாலூட்டிகளில் உள்ளதுபோல் புறச்செவிமடல் இருக்காது. காகத்திற்குக் காது உண்டு. காது கேட்கும்.
3. பறவைகளுக்கு பார்த்தல், கேட்டல் உணர்வு நன்றாக வளர்ச்சிப் பெற்று இருக்கும்.
சுவைத்தல் உணர்வு குறைவாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றே கூறலாம்.
பறவைகளுக்குப் பார்த்தல், கேட்ட ல் உணர்வு நன்றாக வளர்ச்சிப் பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வு குறைவாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றே கூறலாம்.
2. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க. (மொ.ஆ)
(இயற்கை – செயற்கை – பாதைத் தெரியாத இயற்கைக் காடுகளில் பயணிக்கச் செயற்கைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.)
- கொடு – கோடு – அளவுகோள் கொடுத்தால் கோடு வரையவேன்.
- கொள் – கோள் – கோள்களை அறிந்து கொள்.
- சிறு – சீறு – சிறு பாம்பு, சீறுவதைப் பார்.
- தான் – தாம் – கண்ணன், தான் செய்ததாகத் தாமே ஒப்புக்கொண்டான்.
- விதி – வீதி – வீதிதோறும் நூலகம் அமைத்தால், நாட்டின் தலைவிதி மாறிவிடும்.
3. மொழிபெயர்க்க. (மொ.ஆ)
Malar : Devi, switch off the lights when you leave the room.
Devi : Yeah. We have to save electricity.
Malar : Our nation spends a lot of electricity for lighting up our streets in the night.
Devi : Who knows? In future our country may launch artificial moons to light our
night time sky!
Malar : I have read some other countries are going to launch these types of illumination
satellites near future.
Devi : Superb news! If we launch artificial moons, they can assist in disaster relief by
beaming light on areas that lost power!
மலர் : தேவி, நீ அறையை விட்டு வெளியே செல்லும்முன் விளக்கை அணைத்துவிட்டுச்
செல்
தேவி : ஆம். நாம் மின்சாரத்தைச் சேமிக்கவேண்டும்.
மலர் : இரவில் நம் வீதிகளை ஒளிரச் செய்வதற்காக, நாடு நிறைய மின்சாரத்தைச்
செலவிடுகிறது.
தேவி : யாருக்குத் தெரியும். எதிர்காலத்தில் வீதிக்கு வெளிச்சம் தர செயற்கை
நிலவையும் நட்சத்திரங்களையும் உருவாக்கலாம்.
மலர் : சில நாடுகள், செயற்கை நிலவையும் நட்சத்திரங்களையும் உருவாக்கப்
போவதாக நான் படித்திருக்கிறேன்.
தேவி : மகிழ்ச்சியான செய்தி. நாமும் இது போல செயற்கை நிலவை உருவாக்கினால்
மின்தடையால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கலாம்.
4. குறிப்பைப் பயன்படுத்தி விடைதருக. (குறிப்பு – எதிர்மறையான சொற்கள்) (மொ.வி)
மீளாத் துயர் – மீண்ட இன்பம்
கொடுத்துச் சிவந்த – கொடாது சிவக்காத
மறைத்துக் காட்டு – வெளிப்படுத்தி மறை
அருகில் அமர்க – தூரத்தில் நிற்க.
பெரியவரின் அமைதி- சிறியவரின் ஆர்ப்பாட்டம் (அமர்க்களம்)
புயலுக்குப் பின் – தென்றலுக்கு முன்
5. கலைச்சொல் (மொ.வி)
Nanotechnology – மீநுண் தொழில்நுட்பம்
Space Technology – விண்வெளித் தொழில்நுட்பம்
Biotechnology – உயிரித் தொழில்நுட்பம்
Cosmic rays – விண்வெளிக் கதிர்கள்
Ultraviolet rays – புற ஊதாக் கதிர்கள்
Infrared rays – அகச்சிவப்புக் கதிர்கள்
6. அகராதியைக் காண்க. (மொ.வி)
அவிர்தல் – ஒளிர்தல், விரிதல்
அழல் – நெருப்பு, வெப்பம்
உவா – நிறைந்த, கடல், முழுநிலவு
கங்குல் – இரவு, இருள்
கனலி – நெருப்பு, சூரியன்
7. தொடரைப் படித்து விடையைக் கண்டறிக. (மொ.வி)
(சோறு, கற்றல், கரு, பூவில், எழுத்து)
1. நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன் கற்றல்
2. விதைக்குத் தேவை எரு எனில், கதைக்குத் தேவைகரு
3. கல் சிலை ஆகுமெனில், நெல் சோறு ஆகும்.
4. குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து எழுத்து
5. மீன் இருப்பது நீரில்; தேன் இருப்பது பூவில்
8. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக. (மொ.வி)

மனிதனை இயக்கும் திறன்பேசி
முன்பு,
மூடநம்பிக்கையையும் சடங்குகளையும்
முதுகில் சுமந்து இயங்கினாய்…
இன்று திறன்பேசியால் இயக்கப்படுகிறாய்…
எப்போது இயங்குவாய் உன் அறிவைக்கொண்டு?
எந்திரங்களை அடக்கி ஆண்டவன்
இன்று, எந்திரமாய் இயங்குகிறான்.
மாட்டிற்குப் பூட்டிய மூக்கனாங்கயிறு
இன்று,
மனிதனுக்குப் பூட்டிவிட்டது திறன்பேசி.
9. தொலைக்காட்சி நிகழ்வுகளையே பார்த்துக்கொண்டிருக்கும் தம்பி.
திறன்பேசியிலேயே விளையாடிக்கொண்டிருக்கும் தங்கை.
காணொலி விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும் தோழன்.
எப்போதும் சமூக ஊடகங்களில் இயங்கியபடி இருக்கும் தோழி.
– இவர்கள் எந்நேரமும் நடப்புலகில் இருக்காமல் கற்பனை உலகில் மிதப்பவர்களாக
இருக்கிறார்கள். இவர்களை நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்பட வைக்க
நீங்கள் செய்யும் முயற்சிகளைப் பட்டியல் இடுக. (நி.அ.த)
1. குழு மனப்பான்மையை வளர்க்கும் விளையாட்டுகளை விளையாடச்
செய்வேன்.
2. மனத்திற்கு இதமான பாடல்களைக் கேட்கச் செய்வேன்
3. உறவினர்கள், நண்பர்களுடன் கலந்து உறவாடச் செய்வேன்.
4. புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவேன்.
கற்பவை கற்றபின்
- கீழ்க்காணும் தொடரில் வழுவமைதி வகைகளை இனங்கண்டு எழுதுக.
அ) அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்.
விடை: கால வழுவமைதி
ஆ) ”இந்த கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதை அனைவரும் ஏற்பர்” என்று கூறினான்.
விடை: இட வழுவமைதி
இ) சிறியவயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்.
விடை: கால வழுவமைதி
ஈ) செல்வன் இளவேலன் இந்தச் சிறுவயதிலேயே விளையாட்டுத்துறையில் சாதனைப் புரிந்திருக்கிறார்.
விடை: பால் வழுவமைதி
- அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக.
அ) தந்தை, “மகனே! நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா?” என்று சொன்னார். (ஆண்பால் பெயர்களைப் பெண்பாலாக மாற்றித் தொடரை எழுதுக.)
விடை: தாய், “மகளே! நாளை உன்னுடைய தோழி அழகியை அழைத்து வா?” என்று சொன்னார்.
ஆ) அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது. அக்கா புறப்படும்போது அம்மா வழியனுப்பியது. (வழுவை வழாநிலையாக மாற்றுக)
விடை: அக்கா நேற்று வீட்டிற்கு வந்தாள். அக்கா புறப்படும்போது, அம்மா வழியனுப்பினாள்.
இ) “இதோ முடித்துவிடுவேன்” என்று செயலை முடிக்கும்முன்பே கூறினார். (வழாநிலையை வழுவமைதியாக மாற்றுக)
விடை: (தொடரே வழுவமைதியாகத்தான் உள்ளது. அடைப்புக்குறிக்குள் உள்ள வினா தவறு)
ஈ)அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை. (படர்க்கையை முன்னிலையாக, முன்னிலையைத் தன்மையாக, தன்மையைப் படர்க்கையாக மாற்றுக)
விடை: நீ என்னிடமும் அவனிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை.
உ) குழந்தை அழுகிறான், பார். (வழுவை வழாநிலையாக மாற்றுக)
விடை: குழந்தை அழுகிறது, பார்.