இயல் – 6
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. சமூகப் பண்பாட்டுத் தளத்தின் கருத்துக் கருவூலமாக விளங்குவது ————-
அ) கரகாட்டம் ஆ) நிகழ்கலை
இ) ஒயிலாட்டம் ஈ)மயிலாட்டம்
2. மரபார்ந்த கலை————.
அ) காவடியாட்டம் ஆ) தேவராட்டம்
இ) ஒயிலாட்டம் ஈ) கரகாட்டம்
3. ” நீரற வறியாக் கரகத்து ” என்ற பாடலடி இடம்பெறும் நூல்————-.
அ) அகநானூறு ஆ) புறநானூறு இ) பரிபாடல் ஈ) நற்றிணை
4. தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி—————.
அ) தேவதுந்துபி ஆ) நையாண்டி இ) நாதசுரம் ஈ) பறை
5. பொய்க்கால் குதிரை ஆட்டம் கேரளாவில்—– என்று அழைக்கப்படுகிறது.
அ) குதிரைக்களி ஆ) புரவி ஆட்டம் இ) கச்சி கொடி ஈ) கும்பாட்டம்
6. “நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள் ” என்றவர்————.
அ) ம. பொ. சி ஆ) ந .முத்துசாமி இ) திரு.வி. க ஈ) உமா மகேஸ்வரி
7. ‘இராச சோழன் தெரு ‘ ————— உள்ளது.
அ) சிங்கப்பூரில் ஆ) கோலாலம்பூரில் இ) மதுரையில் ஈ) இலங்கையில்
8. ‘கற்பாவை ‘ கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்
அ) உமா மகேஸ்வரி ஆ) ம.பொ.சிவஞானம் இ) ந.முத்துசாமி ஈ) குமரகுருபரர்
9. தொல்காப்பியம் குறிப்பிடும் இசைக்கருவி———————
அ) ஜால்ரா ஆ) பறை இ) உறுமி ஈ) தவில்
10. சூழி என்பது——————
அ) தலையில் அணிவது ஆ) நெற்றியில் அணிவது
இ) காலில் அணிவது ஈ) இடையில் அணிவது
11. சிற்றிலக்கிய எண்ணிக்கை ———.
அ) 86 ஆ) 51 இ) 96 ஈ) 91
12. செங்கீரைப் பருவம்——————- முதல்————– வரை
அ) 3 மாதம் 4 மாதம் வரை ஆ) 5 மாதம் 6 மாதம் வரை
இ) 7 மாதம் 8 மாதம் வரை ஈ) 1 மாதம் 2 மாதம் வரை
13. பிள்ளைத்தமிழ் வகை——————
அ) 10 ஆ) 7 இ) 2 ஈ) 3
14. “பைம்பொன்சும்பிய தொந்தி யொடுஞ் சிறு பண்டி சரிந்தாட” இவ்வடியில்
பண்டி என்பதன் பொருள்——————-
அ) தலை ஆ) கால் இ) வயிறு ஈ) கண்
15. கம்பராமாயணம் ——————காண்டம் உடையது.
அ) 7 ஆ) 6 இ) 5 ஈ) 8
16. மலர்கள் தரையில் நழுவும் எப்போது ?
அ) அள்ளி முகர்ந்தால் ஆ) தளரப் பிணைத்தால்
இ) இறுக்கி முடிச்சிட்டால் ஈ) காம்பு முறிந்தால்
17. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன ?
அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
இ) அரசன் கொடுங்கோல் ஆட்சிப்புரிவதால்
ஈ) அங்கு வறுமை இல்லாததால்
18. ——————-உடைய மனமே மலரைத் தொடுக்கும்.
அ) நுண்மை ஆ) திண்மை இ) வன்மை ஈ)கடமை
19. குளிர்காலத்தைப் பொழுதாக கொண்ட நிலங்கள்
அ) முல்லை , குறிஞ்சி , மருதம் நிலங்கள்
ஆ) குறிஞ்சி , பாலை , நெய்தல் நிலங்கள்
இ) குறிஞ்சி , மருதம் , நெய்தல் நிலங்கள்
ஈ) மருதம் , நெய்தல் , பாலை நிலங்கள்.
20. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின்
செயப்பாட்டு வினைத்தொடர் எது ?
அ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்
ஆ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
இ) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
ஈ) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்.
21. கரகாட்டத்தை கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர்.
இத்தொடருக்கான வினை எது ?
அ) கரகாட்டம் என்றால் என்ன ?
ஆ) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?
இ) கரகாட்டத்தின் வேறு வேறு வடிவங்கள் யாவை ?
ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை ?
22. கவிதையில் ———————ஐ கருப்பொருள் பின்னணியில் அமைத்து பாடுவது
நம் மரபு.
அ) இறைச்சி ஆ) உரிப்பொருள் இ) உள்ளுறை ஈ) முதற்பொருள்
23. ஒரு நாளின் ஆறு கூறுகள்——————-
அ) சிறுபொழுது ஆ) பெறும் பொழுது
இ) நிலமும் பொழுதும் ஈ) அ, இ மட்டும்
24. ஐப்பசி , கார்த்திகை என்பது————— காலம்
அ) குளிர்காலம் ஆ) இளவேனில் இ) முதுவேனில் ஈ) கார்காலம்
25. முல்லை நில பறை ————
அ) மீன்கோட்பறை ஆ)ஏறுகோட்பறை இ) தொண்டகம் ஈ) துடி
26. கும்பாட்டம் என்று அழைக்கப்படும் ஆட்டம் ——.
அ) காவடியாட்டம் ஆ) தேவராட்டம்
இ) ஒயிலாட்டம் ஈ) கரகாட்டம்
27. சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய ஆட்டங்கள் ——- வகையாகும்.
அ) எட்டு ஆ) பதினொரு இ) பத்து ஈ) பன்னிரண்டு
28. மாதவி ஆடிய ஆடல்களில் ஒன்று ——– ஆகும்.
அ) காவடியாட்டம் ஆ) தேவராட்டம்
இ) ஒயிலாட்டம் ஈ) குடக்கூத்து
29. குடக்கூத்து ———- ஆட்டத்துக்கு அடிப்படை.
அ) காவடியாட்டம் ஆ) தேவராட்டம்
இ) ஒயிலாட்டம் ஈ) கரகாட்டம்
30. மயிலாட்டத்தின் போது இசைக்கப்படும் இசைக்கருவி—.
அ) ஜால்ரா ஆ) பறை இ) உறுமி ஈ) நையாண்டி மேளம்
31. கரகாட்டத்தின் துணையாட்டமாக ஆடப்படும் ஆட்டம்—-.
அ) காவடியாட்டம் ஆ) மயிலாட்டம்
இ) ஒயிலாட்டம் ஈ) தேவராட்டம்
32. கா என்பதன் பொருள் ————–.
அ) பாரம் தாங்கும் கோல் ஆ) காட்சி
இ) நீண்ட கோல் ஈ) வளைந்த கோல்
33. ஒரே நிறத்துணியைக் தலையில் முண்டாசு போல அணிந்து கொண்டு ஆடும் ஆட்டம்-
அ) காவடியாட்டம் ஆ) மயிலாட்டம்
இ) ஒயிலாட்டம் ஈ) தேவராட்டம்
34. இரு வரிசையில் நின்று ஆண்கள் மட்டுமே ஆடக்கூடிய ஆட்டம்——-.
அ) காவடியாட்டம் ஆ) மயிலாட்டம்
இ) ஒயிலாட்டம் ஈ) தேவராட்டம்
35. தேவதுந்துபியின் வேறுப்பெயர் ———–.
அ) ஜால்ரா ஆ) பறை இ) உறுமி ஈ) நையாண்டி மேளம்
36. 8 முதல் 13 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்ற மரபை உடைய ஆட்டம்-
அ) காவடியாட்டம் ஆ) மயிலாட்டம்
இ) ஒயிலாட்டம் ஈ) தேவராட்டம்
37. போலச்செய்தல் என்ற பண்புகளைப் பின்பற்றி ஆடப்படும் ஆட்டம்—
அ) காவடியாட்டம் ஆ) மயிலாட்டம்
இ) பொய்க்கால் குதிரையாட்டம் ஈ) தேவராட்டம்
38. புரவியாட்டம், புரவிநாட்டியம் என்ற பெயர்களால் அழைக்கப்படும் ஆட்டம் –
அ) காவடியாட்டம் ஆ) மயிலாட்டம்
இ) பொய்க்கால் குதிரையாட்டம் ஈ) தேவராட்டம்
39. மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படும் ஆட்டம்—
அ) காவடியாட்டம் ஆ) மயிலாட்டம்
இ) பொய்க்கால் குதிரையாட்டம் ஈ) தேவராட்டம்
40. அரசன், அரசியின் வேடமணிந்து ஆடப்படும் ஆட்டம்—
அ) காவடியாட்டம் ஆ) மயிலாட்டம்
இ) பொய்க்கால் குதிரையாட்டம் ஈ) தேவராட்டம்
41. தப்பு என்ற இசைக்கருவிக்கான வேறுப்பெயர் ———.
அ) ஜால்ரா ஆ) பறை இ) உறுமி ஈ) நையாண்டி மேளம்
42. “தகக தகதகக தந்தத்த தந்ததக என்று தாளம் பதலை திமிலைதுடி தம்பட்டமும் பெருக”
என்ற அருணகிரிநாதர் பாடிய அடிகளை உடைய நூல் —
அ) திருப்புகழ் ஆ) திருப்பல்லாண்டு இ) திருப்பாவை ஈ) திருவெம்பாவை
43. கலைஞாயிறு என்று அழைக்கப்படுபவர்————.
அ) ம. பொ. சி ஆ) ந .முத்துசாமி இ) திரு.வி. க ஈ) உமா மகேஸ்வரி
44. அர்சுன தபசு எதற்காக நிகழ்த்தப்படுகிறது?
அ) மழைவேண்டி ஆ) இறைவனை வழிபடுவதற்காக
இ) மன்னனை புகழ்பதற்காக ஈ) போர் வெற்றிக்காக
45. மலேசியாவின் கோலாலம்பூரில் ———- என்ற பெயரில் தெரு உள்ளது.
அ) இராஜேந்திர சோழன் தெரு ஆ) இராச சோழன் தெரு
இ) பல்லவன் தெரு இ) பாண்டியன் தெரு
46. நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது, கற்பாவை உள்ளிட்ட கவிதைத்
தொகுதிகளைப் படைத்தவர் ———–.
அ) உமா மகேஷ்வரி ஆ) செய்குத்தம்பி பாவலர் இ) மணவை முஸ்தபா இ) சுரதா
47. செம்பொன்னடிச் சிறுகிங்கிண்யோடு எனத்தொடங்கும் பாடல் முத்துக்குமாரசுவாமி
பிள்ளைத்தமிழின் ——- பருவத்தின் ———— ஆம் பாடல்.
அ) தாள், எட்டாம் ஆ) காப்பு, எட்டு இ) செங்கீரை, எட்டு ஈ) அம்புலி, எட்டு
48. பிள்ளைத்தமிழ் ஒரு ——– இலக்கிய வகை.
அ) சங்க இலக்கியம் ஆ) சங்க மருவிய இலக்கியம்
இ) காப்பிய இலக்கியம் ஈ) சிற்றிலக்கியம்
49. பிள்ளைத் தமிழின் மொத்தப்பருவங்கள் ———–.
அ) 63 ஆ) 64 இ) 18 ஈ) 10
50. இரு பாலுக்கும் பொதுவான பருங்கள் ———.
அ) 3 ஆ) 10 இ) 7 ஈ) 8
51. கம்பர் தாம் இயற்றிய நூலூக்குத் தாமே இட்டப் பெயர்——–.
அ) இராம சரிதம் ஆ) இராமாவதாரம்
இ) இராம வரலாறு ஈ) இராமாயணம்
52. கம்பர் பிறந்த ஊர்——-.
அ) திருவாதவூர் ஆ) திருவாமூர் இ) திருவழுந்தூர் ஈ) திருவெண்ணெய் நல்லூர்
53. கம்பரை ஆதரித்த வள்ளல் ———- ஆவார்.
அ) வள்ளல் சீதக்காதி ஆ) சடையப்ப வள்ளல் இ) பாரி ஈ) காரி
54. அகப்பொருள், அகப்பொருளுக்குரிய பொருள், அன்பின் ஐந்திணை முறையே—,—,—.
வகைப்படும்.
அ) 7,3,5 ஆ) 3,5,7 இ) 5,3,7 ஈ) 7,5,3
55. நிலம், பொழுது முறையே —,— வகைப்படும்.
அ) 2,5 ஆ) 5,2 இ) 5,6 ஈ) 2,6
56. சிறுபொழுதும் பெரும்பொழுதும் முறையே—–,—– வகைப்படும்.
அ) 2,5 ஆ) 5,2 இ) 5,6 ஈ) 6,6
57. எல், பாடு என்பதன் பொருள்கள் முறையே——–,———-.
அ) ஞாயிறு, மறைதல் ஆ) ஞாயிறு, தோன்றுதல்
இ) மறைதல், நிலவு ஈ) நிலவு, தோன்றுதல்
58. ஆறு பெரும்பொழுதும் உடைய நிலங்கள் —–, —–.
அ) குறிஞ்சி, முலை ஆ) முல்லை, மருதம் இ) மருதம், நெய்தல் ஈ) நெய்தல், பாலை
59. சிறுபொழுதும் பெரும்பொழுதும் முறையே—–,—–.
அ) ஒரு நாளின் ஆறு பகுதிகள், ஒரு மாதத்தின் ஆறு பகுதிகள்
ஆ) ஒரு நாளின் ஆறு பகுதிகள், ஒரு வருடத்தின் ஆறு பகுதிகள்
இ) ஒரு வருடத்தின் ஆறு பகுதிகள், ஒரு நாளின் ஆறு பகுதிகள்
ஈ) ஒரு வருடத்தின் ஆறு பகுதிகள், ஒரு மாதத்தின் ஆறு பகுதிகள்
60. முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ் என்ற நூலின் பாட்டுடைத்தலைவன் ——-.
அ) திருமால் ஆ) சிவன் இ) விநாயகன் ஈ) முருகன்
17. சுரமும் சுரம் சார்ந்த பகுதியும் எந்நிலத்திற்கு உரியது?
அ) குறிஞ்சி ஆ) முல்லை
இ) நெய்தல் ஈ) பாலை
18. முல்லை நிலத்திற்கு உரிய இடம் எது?
அ) மலை ஆ) காடு
இ) வயல் ஈ) கடல்
19. இளவேனில் காலத்திற்கு உரிய தமிழ்மாதங்கள் ——-, ——- ஆகும் .
அ) சித்திரை, வைகாசி ஆ) ஆணி, ஆடி
இ) ஆவணி, புரட்டாசி ஈ) ஐப்பசி, கார்த்திகை
20. கார் காலத்திற்கு உரிய தமிழ்மாதங்கள் ——-, ——- ஆகும் .
அ) சித்திரை, வைகாசி ஆ) ஆணி, ஆடி
இ) ஆவணி, புரட்டாசி ஈ) ஐப்பசி, கார்த்திகை
21.வைகறைக்கு உரிய காலம் ——-, முதல் —– வரை ஆகும்.
அ) காலை 6, காலை 10 ஆ) காலை 10, 2 மணி
இ) இரவு 10, இரவு 2 ஈ) இரவு2, காலை 6
22. முல்லைக்குரிய சிறுபொழுது ——— ஆகும்.
அ) கார்காலம் ஆ) யாமம்
இ) மாலை ஈ) வைகறை
23. குறிஞ்சிக்கு உரிய பெரும்பொழுது ——— ஆகும்.
அ) கார்காலம், முன்பனி ஆ) இளவேனில், முதுவேனில், பின்பனி
இ) கார்காலம் ஈ) குளிர்காலம், முன்பனிக் காலம்
24. ’சிறுகுடி’ என்பது எந்நிலத்திற்கு உரிய ஊர் ஆகும்?
அ) குறிஞ்சி ஆ) முல்லை
இ) நெய்தல் ஈ) பாலை
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
1. உறங்குகின்ற கும்பகன்ன ! உங்கள் மாய வாழ்வெலாம்
இறங்குகின்றது ! இன்று காண்; எழுந்திராய் ! எழுந்திராய் !
கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே,
உறங்குவாய் , உறங்குவாய் ! இனிக் கிடந்து உறங்குவாய் !
- இப்பாடலின் ஆசிரியர் யார்?
அ) கம்பர் ஆ)இளங்கோவடிகள்
இ) கண்ணதாசன் ஈ) அதிவீரராம பாண்டியர்
- இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?
அ) காசிக்காண்டம் ஆ) கொய்யாக்கனி
இ) சிலப்பதிகாரம் ஈ) கம்பராமாயணம்
- இப்பாடலில் இடம்பெற்றுள்ள சீர் மோனை சொற்களை குறிப்பிடுக.
அ) உறங்குகின்ற – உங்கள் ஆ) உறங்குகின்ற – இறங்குகின்றது
இ) உறங்குகின்ற – உறங்குவாய் ஈ) உறங்குவாய் – கிடந்து
- இப்பாடலில் இடம்பெற்றுள்ள அடியெதுகை சொற்களை எழுதுக .
அ) உறங்குகின்ற – உங்கள் ஆ) உறங்குகின்ற – கும்பக்கன்ன
இ) உறங்குகின்ற – உறங்குவாய் ஈ) உறங்குவாய் – கிடந்து
- ‘ மாய’ என்பதன் பொருள் தருக .
அ) திறமையான ஆ)பொய்யான
இ) உண்மையான ஈ) நிறைவான
2. வண்மையில்லை யோர்வறுமை யின்மையால்
திண்மையில்லை நேர்செறுந ரின்மையால்
உண்மையில்லை பொய்யுரை யிலாமையால்
வெண்மையில்லை பல்கேள்வி மேவலால்
- இப்பாடலின் ஆசிரியர் யார்?
அ) கம்பர் ஆ)இளங்கோவடிகள்
இ)கண்ணதாசன் ஈ) அதிவீரராம பாண்டியர்
- இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?
அ)காசிக்காண்டம் ஆ)கொய்யாக்கனி
இ)சிலப்பதிகாரம் ஈ) கம்பராமாயணம்
- ” வண்மை ” என்பதன் பொருள் தருக.
அ) கொடை ஆ)வலிமை இ) வாய்ப்பு ஈ) திறமை
- ” திண்மை ” என்பதன் பொருள் தருக. வலிமை
அ) கொடை ஆ)வலிமை
இ) வாய்ப்பு ஈ) திறமை
தாதுகு சோலை தோறுஞ் சண்பகக் காடுதோறும்
போதவிழ் பொய்கை தோறும் புதுமணற் றடங்க டோறும்
மாதவி வேலிப் பூக வனம்தொறும் வயல்க டோறும்
ஓதிய வுடம்பு தோறு முயிரென வுலாய தன்றே
- இப்பாடலின் ஆசிரியர் யார்?
அ) கம்பர் ஆ)இளங்கோவடிகள்
இ) கண்ணதாசன் ஈ) அதிவீரராம பாண்டியர்
- இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?
அ)காசிக்காண்டம் ஆ)கொய்யாக்கனி
இ)சிலப்பதிகாரம் ஈ) கம்பராமாயணம்
3. தாது – பொருள் தருக.
அ)சோலை ஆ)காடு
இ)மகரந்தம் ஈ) மலர்
4. போதவிழ் – பிரித்து எழுதுக.
அ) போது + அவிழ் ஆ) போ+தவிழ் இ) போது + தவிழ் ஈ) போத +விழ்
5. மாதவி வேலி – பொருள் தருக.
அ) குருகத்தி வேலி ஆ) கமுக வேலி இ) பாக்கு வேலி ஈ) பூக வேலி
6. பூகவனம் – பொருள் தருக.
அ) குருகத்தி வனம் ஆ) கமுக வனம் இ) மாதவி வனம் ஈ) சோலை
தண்டலை மயில்களாட தாமரை விளக்கந் தாங்க,
கொண்டல்கள் முழவினேங்க குவளைகண் விழித்து நோக்க,
தெண்டிரை யெழினி காட்ட தேம்பிழி மகரயாழின்
வண்டுகளி னிதுபாட மருதம்வீற்றி ருக்கும்மாதோ
- இப்பாடலின் ஆசிரியர் யார்?
அ) கம்பர் ஆ)இளங்கோவடிகள்
இ) கண்ணதாசன் ஈ) அதிவீரராம பாண்டியர்
- இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?
அ)காசிக்காண்டம் ஆ)கொய்யாக்கனி
இ)சிலப்பதிகாரம் ஈ) கம்பராமாயணம்
3. கொண்டல் – பொருள் தருக.
அ) மேகம் ஆ) தாமரை இ) மயில் ஈ) மலர்
4. தண்டலை – பொருள் தருக.
அ) குளிந்த சோலை ஆ) தாமரை தடாகம் இ) வண்ண மயில் ஈ) பூத்த மலர்
5. தெண்டிரை – பிரித்து எழுதுக.
அ) தெண் + திரை ஆ) தெள்+திரை இ) தெல் + திரை ஈ) தெண் +டிரை
வெய்யோன் ஒளி தன் மேனியில் விரி சோதியில் மறையப்
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்;
மையோ? மரகதமோ? மறிகடலோ? மழைமுகிலோ?
ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான்.
- இப்பாடலின் ஆசிரியர் யார்?
அ) கம்பர் ஆ)இளங்கோவடிகள்
இ) கண்ணதாசன் ஈ) அதிவீரராம பாண்டியர்
- இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?
அ)காசிக்காண்டம் ஆ)கொய்யாக்கனி
இ)சிலப்பதிகாரம் ஈ) கம்பராமாயணம்
3. வெய்யோன் – பொருள் தருக.
அ) பகலவன் ஆ) நிலவு இ) குகன் ஈ) மலர்
4. இடையாளொடும் இளையானொடும் – இலக்கணக்குறிப்பு தருக.
அ)எண்ணும்மை ஆ)வினைமுற்று இ)பெயரெச்சம் ஈ) பண்புத்தொகை
5. முகில் – பொருள் தருக
அ) மேகம் ஆ) தாமரை இ) மயில் ஈ) மல
3. செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத்
திருவரை யரைஞா ணரைமணி யொடுமொளி திகழரை வடமாடப்
பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்
பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச்சுட்டி பதிந்தாடக்
கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்
கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட
வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை
ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை
- இப்பாடலின் ஆசிரியர் யார்?
அ) குமரகுருபரர் ஆ)இளங்கோவடிகள்
இ) கண்ணதாசன் ஈ) அதிவீரராம பாண்டியர்
2. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?
அ)காசிக்காண்டம் ஆ)கொய்யாக்கனி
இ)சிலப்பதிகாரம் ஈ) முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ்
3. குண்டலமும் குழைக்காதும் – இலக்கணக்குறிப்பு தருக.
அ) எண்ணும்மை ஆ) உம்மைத்தொகை இ) முற்றும்மை ஈ) முற்றெச்சம்
4. ஆடுக – இலக்கணக்குறிப்பு தருக.
அ) எண்ணும்மை ஆ) உம்மைத்தொகை
இ) வியங்கோள் வினைமுற்று ஈ) முற்றெச்சம்
குறுவினாக்கள்
1. “கரப்பிடும்பை இல்லார்” – இத்தொடரிலன் பொருள் கூறுக.
- தன்னிடம் உள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுக்கும் நல்லாரைக் காணின்,
வறுமை விலகும்.
2. வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எண்ணி
நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?
- தன்னை நாடி வருபவரை எள்ளி நகையாடினால் வருபவரின் உள்ளம் வாடும். எனவே, எள்ளி நகையாடாமல் கொடுக்க வேண்டும்.
- அப்போது , இரப்பவர் உள்ளம் மகிழும்.
3. கூரான ஆயுதம் எது என்று செந்நாப் போதகர் கூருகிறார்? ஏன் என்பதை
விளக்குக.
- பொருட்செல்வம்.
- பகைவரின் பகைமையை வெல்லும் கூர்மையான ஆயுதம் பொருட்செல்வம்.
4. உறங்குகின்ற கும்பகர்ண எழுந்திராய் ! எழுந்திராய் !
காலதூதர் கையிலே உறங்குவாய் ! உறங்குவாய் !
கும்பகர்ணனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்க
சொல்லுகிறார்கள் ?
- ”உம்முடைய பொய்யான வாழ்வு இன்று முதல் இறங்க தொடங்கிவிட்டது .
எனவே, கால தூதர் கையில் சென்று உறங்கு” என்று சொல்லுகிறார்கள்.
5. நேற்று நான் பார்த்த அர்ச்சுணன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனைகளையும் சிறந்த
நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிந்தேன் என்று சேகர் என்னிடம்
கூறினான். இக்கூற்றை அயற்கூற்றாக எழுதுக.
- முந்நாள் தான்பார்த்த அர்ச்சுனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனைகளையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்ததாகச் சேகர்
என்னிடம் கூறினான்.
6. சாந்தமான தொரு பிரபஞ்சத்தைச்
சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள் – இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை எழுதுக.
- மலர்தான் இங்கு உலகம் .
- மலராகிய உலகத்தைத் தண்டுகள் தாங்குவதே உள்ளழகு.
7. “தஞ்சம் எளியர் பகைக்கு” – இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்பாடுகளையும்
எழுதுக.
சீர் அசை வாய்பாடு
தஞ்/சம் நேர்+நேர் தேமா
எளி/யர் நிரை+நேர் புளிமா
பகைக்/கு நிரை+நேர் (நிறைபு) பிறப்பு
8. கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக?
(அ) உழவர்கள் மலையில் உழுதனர்.
விடை : உழவர்கள் வயலில் உழுதனர்.
(ஆ) முல்லை பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
விடை : தாழை , நெய்தல் பூவைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
9. காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழை கால மாலையில் சூடாக உண்ண
சுவை மிகுந்து இருக்கும் – இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள் ,
கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.
முதற்பொருள்
நிலம் – முல்லை (காடு)
பொழுது – பெரும்பொழுது – மழைகாலம் (கார்காலம்)
சிறுபொழுது – மாலை
கருப்பொருள்
உணவு – வரகு
கூடுதல் வினாக்கள்
18. அன்பின் ஐந்திணைகளை எழுதுக ?
குறிஞ்சி , முல்லை மருதம் , நெய்தல் , பாலை.
19. முதற்பொருள் என்பன யாவை?
நிலம் மற்றும் பொழுது.
20. கருப்பொருள் என்றால் என்ன ?
ஒரு நிலத்தின் தெய்வம், மக்கள் , விலங்கு , பூ , நீர் போன்றவை .
21. ஐவகைத்திணைகளின் சிறு பொழுதுகளை எழுதுக?
திணை சிறுபொழுது
குறிஞ்சி , – யாமம்
முல்லை – மாலை
மருதம் – வைகறை
நெய்தல் – எற்பாடு
பாலை – நண்பகல்
கூடுதல் வினாக்கள் (திருக்குறள்)
- அமைச்சர் எத்தகையவர்?
- தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செயலைச் செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து அரிய செயலைச் செய்பவர்.
- மனவலிமை, குடிகளைக் காத்தல், ஆட்சிமுறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவர்.
- அமைச்சருக்குத் தேவையான ஐந்து சிறப்பான பண்புகள் யாவை?
மனவலிமை, குடிகளைக் காத்தல், ஆட்சிமுறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல், விடாமுயற்சி
- நுட்பமான சூழ்சிகளையும் வெல்லக்கூடியவர் எத்தகையவர்?
இயற்கையான நுண்ணறிவும் நூலறிவும் உடையவர்.
- பொருளினது சிறப்பு யாது?
ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வது.
- திறனறிந்து தீதின்றி வந்த பொருள் எவற்றை அளிக்கும்?
அறத்தையும் இன்பத்தையும் அளிக்கும்.
- எவ்வழியில் வந்த பொருளை நீக்கிவிட வேண்டும்?
இரக்கமும் அன்பும் இல்லாமல் தீய வழியில் பிறரிடமிருந்து ஈட்டிய பொருளை நீக்கிவிட வேண்டும்.
- குன்றேறி யானைப்போரைக் கண்டதைப் போன்றது எது?
தன் கையில் செல்வம் இருக்கும் போது ஒரு செயலைச் செய்வது. (அல்லது)
தன் கையில் உள்ள செல்வத்தைக் கொண்டு செயலைச் செய்வது.
- எப்போது செயலைச் செய்தால் செயல் சிறப்பாக முடியும்?
தன் கையில் செல்வம் இருக்கும் போது ஒரு செயலைச் செய்தால் அச்செயல் சிறப்பாக முடியும்.
- பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதம் எது? (அல்லது) செறுநர் செருக்கறுக்கும் ஆயுதம் எது?
பொருட்செல்வம்
- பகைவரின் அழுத கண்ணீருள் மறைந்திருப்பது எது?
வஞ்சகம்
- பகைவரின் தொழுத கையுள் மறைந்திருப்பது எது?
கொலைக்கருவி
- பகைவரின் வலிமையை எதிர்கொள்ள இயலாதவர் எத்தகையவர்?
- சுற்றத்தாரிடம் அன்பு இல்லாதவர்
- பொருந்திய துணை இல்லாதவர்
- வலிமை இல்லாதவர்
- பகைவரிடம் எளிதில் தஞ்சம் புகுபவர் எத்தகையவர்?
- மனதில் துணிவு இல்லாதவர்
- அறிய வேண்டியதை அறியாதவர்
- பொருந்தும் பண்பு இல்லாதவர்
- பிறருக்குக் கொடுத்து உதவாதவர்
- யாரின் குடி சிறந்து (உயர்ந்து) விளங்கும்?
விடாமுயற்சி , சிறந்த அறிவாற்றல் இவ்விரண்டையும் பின்பற்றுபவரின் குடி
- யாரைச் சுற்றுமாச் சுற்றும் உலகு?
குற்றம் இல்லாமல் தன் குடிப்பெருமையை உயரச்செய்து வாழ்பவரை
- உலகத்தார் யாரை உறவாகப் போற்றுவர்?
குற்றம் இல்லாமல் தன் குடிப்பெருமையை உயரச்செய்து வாழ்பவரை
உலகத்தார் உறவாகக் கொண்டு போற்றுவர்.
- ஒருவருக்கு வறுமையைப் போன்று துன்பம் தரக்கூடியது எது?
வறுமை
- இன்மையின் இன்னாதது எது?
ஒருவருக்கு வறுமையைப் போன்று துன்பம் தரக்கூடியது வறுமையே.
- வறுமையின் கொடுமை எப்போது முழுதும் கெடும்?
தம்மிடம் உள்ள பொருளை மறைத்து வைக்காத நல்லாரைக் காணின் வறுமையின் கொடுமை முழுதும் கெடும்.
- யாரைக் கண்டால் இரப்பவரின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும்?
இகழ்ந்து ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால் இரப்பவரின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
- கயவருக்கும் மக்களுக்கும் உள்ள ஒப்புமையாக வள்ளுவர் கூறுவது யாது?
தோற்றத்தால் இருவரும் ஒத்திருப்பர். (தோற்ற ஒப்புமை)
- எத்தன்மையில் கயவர்கள், தேவர்களுக்கு நிகரானவர்கள்?
தாம் நினைத்த காரியத்தை (செயலை) முடிப்பதில்
- கரும்பு போல் கொல்லப் பயன்படுபவர் யார்?
கயவர்
- சொல்லப் பயன்படுபவர் யார்?
சான்றோர்
- சான்றோரின் சிறப்பு என்ன?
ஒருவர் தம் குறையைச் சொல்வதைக் கேட்டவுடனே உதவிச்செய்வர் சான்றோர்.
—
சிறுவினாக்கள்
1. படங்கள் வெளிப்படுத்தும் நிகழ்த்துக்கலை குறித்து இரண்டு
வினாக்களையும் அவற்றுக்கான விடைகளையும் எழுதுக.
- மயிலாட்டம் என்றால் என்ன?
- மயில் வடிவ கூட்டுக்குள் ஒருவர் தன் உருவத்தை மறைத்துக்கொண்டு , நையாண்டி மேளத்திற்கேற்ப ஆடும் ஆட்டமே மயிலாட்டம் ஆகும்.
- காலில் சலங்கை கட்டி மயில்போல் ஆடுவர்.
2. கரகாட்டம் என்றால் என்ன?
- தலையில் பித்தளைச் செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்து தாளத்திற்கேற்ப ஆடுவது கரகாட்டம் ஆகும்.
- நவீன கவிதையில் வெளிப்படும் நுண்மை உள்ளம், பூத்தொடுக்கும் நாட்டுப்புறப்
பாடலில் வெளிப்படுகிறது. ஒப்பிட்டு எழுதுக.
- நவீன கவிதையில் – பூவின் மென்மை, அழகு, நளினத்தன்மை பாடப்பட்டுள்ளது.
- நாட்டுப்புற பாடலில் – மென்மையான மலரைத் தங்கத் துரட்டியில் எடுப்பதாகப் பாடப்பட்டுள்ளது.
- ஒப்பீடு:
இரு பாடல்களிலும் பூக்களைக் கையாலும் நுட்பம் விளக்கப்பட்டுள்ளது.
3. ’கடற்கரையில் உப்புக்காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப்பகுதியில் மலைப்பயிர்களும்
நிலப்பகுதியில் உழவுத்தொழிலும் நடைபெறுகின்றன.’ – காலப்போக்கில் பல
மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும் பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள்
இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியும் எழுதுக.
- கடலும் கடல்சார்ந்த பகுதியுமாகிய நெய்தல் நிலத்தில் இன்றும் உப்பு விளைவிக்கும் தொழில் நடைபெறுகிறது. ஆனால், அது தனிநபர் தொழிலாக அல்லாமல் இயந்திரங்களின் உதவியோடு இயங்கும் மிகப்பெரிய வணிக நிறுவனங்களின் தொழிலாக மாறியிருக்கிறது.
- நெய்தல் நிலத்தின் மற்றும்மொரு தொழிலாகிய மீன் பிடித்தலும் பல்வகைப்பட்ட தொழில் நுட்பங்களின் உதவியோடு பன்மடங்காய் அதிகரித்து, ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.
- மலையும் மலைசார்ந்த பகுதியுமாகிய குறிஞ்சி நிலத்தில் கிழங்கு, தினை முதலியவற்றிற்கு மாற்றாக இன்று தேயிலை, காப்பி, மிளகு, ஏலம் முதலிய பணப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
- வயலும் வயல் சார்ந்த பகுதியுமாகிய மருத நிலத்தில் இன்று நெற்பயிர், கரும்பு முதலிய பயிர்களும், தானிய வகைகளும் , காய்கறிகளும், கீரைகளும் பயிரிடப்படுகிறது.
4. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை
ஆடிய நயத்தை விளக்குக.
- திருவடியில் கிண்கிணிகளோடு சிலம்பும் ஆடட்டும்!
- இடையில் அரைஞாண் மணியோடு அரைவடங்கள் ஆடட்டும்!
- பசும்பொன் என ஒளிரும் தொந்தியில் சிறுவயிறு சரிந்தாடட்டும்!
- நெற்றியில் பொட்டுடன் சுட்டியும் பதிந்தாடட்டும்!
- காதில் குழையுடன் குண்டலங்களும் அசைந்தாடட்டும்!
- கொண்டையும் சுற்றப்பட்ட ஒளிர்முத்துதோடு ஆடட்டும்!
5. வள்ளுவம் சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக்
குறள்வழி விளக்குக.
- நாம் எந்த ஒரு செயலைச் செய்ய முற்பட்டாலும் அச்செயலுக்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், அதன் தன்மை, அதைச் செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து செய்யவேண்டும்.
- மனவலிமை, மனிதக்குலத்தைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரே சிறந்தோர் ஆவார்.
- இயற்கையான நுண்ணறிவும் நூலறிவும் உடையோர்க்கு முன், எந்த நுட்பமான சூழ்ச்சிகளும் நிற்காது.
- ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல்வழியாக அறிந்திருப்பினும், உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும்.
6. பலரிடம் உதவி பெற்றுக் கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர், அவருக்கு உதவிய
நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை. அவருக்கு
உணர்த்தும் நோக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை?
- சுற்றத்தாரிடம் ஒருவர் அன்பு இல்லாமலும் பொருந்திய துணை இல்லாமலும், வலிமையில்லாமலும் இருந்தால் அவர் பகைவரின் வலிமையை எதிர்கொள்ள முடியாது.
- மனதில் துணிவு இல்லாதவராகவும் அறிய வேண்டியவற்றை அறியாதவராகவும் பொருந்தும் நற்பண்பு இல்லாதவராகவும் பிறருக்குக் கொடுத்து உதவாதவராகவும் இருந்தால் உறவினர் அவரை விட்டு விலகுவர். ஆதலால் எளிதில் பகைவருக்கு ஆட்படுவர்.
- உறவினரை இழக்கும் ஒருவர், வழிகாட்டுவதற்கும் உதவுவதற்கும் ஆள் இல்லாதவராய் மாறுவதால் பகைவரிடத்தில் எளிதில் தஞ்சம் புகுவர் என்று இவ்விரு குறள்களிலும் கூறப்படுகிறது.
உரைப்பத்தி வினா-விடை
பாவை குறித்த செய்திகள் சங்ககாலம் முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையான தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. திருக்குறளில் மரப்பாவையைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவாசகத்திலும் பட்டினத்தார் பாடலிலும் தோற்பாவைக் கூத்து பற்றிய செய்திகளைக் காண முடிகிறது. ஊர் ஊராகச் சென்று நிகழ்த்துகிற கூட்டுக்குடும்பக் கலையாகத் தோற்பாவைக் கூத்து விளங்குகிறது. தோற்பாவைக் கூத்து கையுறைப் பாவைக் கூத்து, பொம்மலாட்டம் என்பனவாகவும் மாற்றம் பெற்றுள்ளது.
அ) மரப்பாவையைப் பற்றி குறிப்பிடும் நூல்?
திருக்குறள்
ஆ) பாவை குறித்த செய்திகள் அடங்கிய இலக்கிய காலம்?
சங்ககாலம்
இ) தோற்பாவைக் கூத்தின் மாற்று வடிவங்கள் எவை?
கையுறைப்பாவைக் கூத்து, பொம்மலாட்டம்
ஈ) தோற்பாவைக் கூத்து பற்றி குறிப்பிடும் நூல்கள் எவை?
திருவாசகம், பட்டினத்தார் பாடல்
உ) இவ்வுரைப் பத்திக்கு பொருத்தமான தலைப்பு தருக.
பாவைக்கூத்து
அ. ‘தப்பு’ என்ற தோற்கருவியை இசைத்துக்கொண்டே அதன் இசைக்கு ஏற்ப ஆடுகின்ற நிகழ்கலையே தப்பாட்டமாகும். ஆண்கள் மட்டுமே ஆடிவந்த இந்த ஆட்டம் தற்போது பெண்களாலும் ஆடப்படுகின்றது. இவ்வாட்டம் தப்பாட்டம், தப்பட்டை, தப்பு என்றும் அழைக்கப்படுகின்றது. தப்பு என்பது வட்ட வடிவமாக அமைந்துள்ள அகன்ற தோற்கருவி. கோவில் திருவிழா, திருமணம், இறப்பு, விழிப்புணர்வு முகாம், விளம்பர நிகழ்ச்சி ஆகியவற்றில் தப்பாட்டம் ஆடப்படுகின்றது. ‘தப்தப்’ என்று ஒலிப்பதால் அந்த ஒலியின் அடியாகத் ‘தப்பு’ எனப்பெயர் பெற்றதெனக் கூறப்படுகிறது.
அ) தப்ஆட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?
தப்பாட்டம், தப்பட்டை, தப்பு
ஆ) தப்பாட்ட நிகழ்வை எழுதுக.
‘தப்பு’ என்ற தோற்கருவியை இசைத்துக்கொண்டே அதன் இசைக்கு ஏற்ப ஆடுகின்ற நிகழ்கலையே தப்பாட்டமாகும்.
இ) ‘தப்பு’ பெயர்காரணம் தருக.
‘தப்தப்’ என்று ஒலிப்பதால் அந்த ஒலியின் அடியாகத் ‘தப்பு
எனப்பெயர் பெயர் வந்தது.
ஈ) ‘தப்பு’வின் வடிவம்?
வட்ட வடிவம்
உ) இவ்வுரைப் பத்திக்கு பொருத்தமான தலைப்பு தருக.
தப்பு
நெடுவினாக்கள்
1. சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் உரை எழுதுக.
- அன்பும் பண்பும் நிறைந்த ஆன்றோர், சான்றோர் அனைவருக்கும் வணக்கம்.
- கவிதைகள் மூலம் பெறும் இன்பங்கள் எத்தனையோ! அதில் ஒன்று சந்த இன்பம்.
- ”ஓசை தரும் இன்பம் உவமையில்லா இன்பமடா” – என்று பாரதி கூறுவதைக் கம்பனின் கவிதைகளில் காணமுடிகிறது.
- “ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாரோ?” எனத் தொடங்கும் பாடலில், கம்பனின் சந்த இன்பத்தினைக் சிறப்பாகக் காண முடியும். அதுப்போலவே,
- “உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வெல்லாம் இறங்குகின்றது!” – எனத்தொடங்கும் பாடலில், உலக்கையால் மாறிமாறி இடிக்கும் ஒத்த ஓசையில் அமைந்த சந்தம், இடிக்கும் காட்சியைக் கண்முன் காட்டுகிறது.
- ”தாதுகுசோலை தோறும்” எனத் தொடங்கும் பாடலில், ஆற்றை இயற்கையின் தோற்றமாகக் காட்டாமல் ஓர் ஓவியமாகக் காட்டுகிறார்.
- “தண்டலை மயில்களாட” எனத் தொடங்கும் பாடலில், இயற்கை கொலுவிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வின் தோற்றமாகவே கம்பன் காட்டுகிறார்.
- “வண்மையில்லை” எனத் தொடங்கும் பாடலில், ஒன்றன் இருப்பால் இன்னொன்று அடையாளப்படுத்தப்படும் கம்பனின் உத்தி போற்றத்தக்கது.
- “வெய்யோன் ஒளி எனத் தொடங்கும் பாடலில் , இராமனின் மாநிற மேனியை மை, மரகதம், கார்மேகம், நீலக்கடல் என்றெல்லாம் புகழ்ந்து இறுதியில் என்னவென்று புகழ முடியாமல் “ஐயோ” எனப் புகழ்ந்து வியக்கிறான் கம்பன்.
2. நிகழ்கலை வடிவங்கள் – அவை நிகழும் இடங்கள் அவற்றின் ஒப்பனைகள் –
சிறப்பும் பழமையும் – இத்தகைய மக்கள் கலைகள் அருகிவருவதற்கான காரணங்கள் – அவற்றை வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன – இவை குறித்து நாளிதழ் ஒன்றில் தலையங்கம் எழுதுக.
நிகழ்கலை வடிவங்கள்
சிற்றூர்களில் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்பவை நிகழ்கலைகள். இவை சமுதாய நிகழ்வின் ஆவணங்களாகவும் செய்திகளைத் தரும் ஊடகங்களாகவும் திகழ்கின்றன.அத்தகைய நிகழ்கலைகள் குறித்து விரிவாகக் காண்போம்!
நிகழ்கலை வடிவங்கள்:
ஆடல்கள் , பாடல்கள் ,கதைகள் பழமொழிகள் விடுகதைகள் போன்ற பலவடிவில் நிகழ்கலை சிற்றூர்களில் இன்றும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.
நிகழும் இடங்கள்:
சிற்றூர்களில் தெரு,தெருகோடி,முச்சந்தி போன்ற இடங்களில் நிகழ்கலை நிகழும்.
ஒப்பனைகள்:
பல்வேறு நிகழ்கலைகளை நிகழ்த்தும் கலைஞர்கள் ஆடை, அணிகலன்களால் தங்களை ஒப்பனை செய்துக்கொள்வர்.
சிறப்பும் பழமையும்:
அனைவராலும் விரும்பப்படும் கலைகள் வாழ்வில் பிரிக்க முடியாத பண்பாட்டு கூறாகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் பழமை மிக்கதாகவும் கருதப்படுகிறது.
அருகுதல்:
தொழில்நுட்ப வளர்ச்சி , திரைப்படம் , தொலைக்காட்சித் தொடர் முதலிய காரணங்களால் நிகழ்கலைகள் அருகிக்கொண்டு வருகிறது.
மீளவழிகள்:
கலைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், திருவிழாக்காலங்களில் பாட்டுக்கச்சேரிகளுக்கு மாற்றாக நிகழ்கலைகளை நிகழ்த்துதல் முதலிய செயல்பாடுகளால் கலைகளை மீட்டுருவாக்கம் செய்யலாம்.
மக்களின் எண்ண வெளிப்பாடாக, வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடியாக, மக்களின் வழிபாட்டிலும் வாழ்வியல் நிகழ்வுகளிலும் பிரிக்க முடியாத பண்பாட்டுக் கூறுகளாக விளங்கும் நிகழ்கலையைக் காப்பாற்றுவதன் மூலம் நம் பண்பாட்டினையும் காப்போம்!
3. நெகிழிப் பைகளின் தீமையைக் கூறும் பொம்மலாட்டம் ஒன்று உங்கள் பள்ளியின்
ஆண்டுவிழாவில் நிகழ்த்தப்படுகிறது. அதற்குப் பாராட்டுரை ஒன்று எழுதுக.
- நெகிழிப் பைகளின் தீமையைப் பொம்மலாட்டம் நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உங்களின் முயற்சி பாராட்டுவதற்கு உரியது.
- பொம்மலாட்டத்தில் இடம்பெற்ற நடனம், காட்சி அமைவு, கருத்தை வரிசையாக வழங்கிய விதம் முதலியன கண்களுக்கு விருந்து.
- நெகிழி சுற்றுச்சூழலைக் கெடுப்பதுடன் மண்ணுக்கும் மரத்திற்கும் பிரிவினையை உண்டாக்கி மரத்தை அழித்து மழைப்பொழிவைக் குறைப்பதுடன் காற்றையும் கெடுக்கிறது. மேலும் மனித குலத்திற்கு நோயினைக் கம்பளம் போட்டு வரவேற்கிறது.
- எனவே, ”நெகிழி என்னும் அரக்கனே, பூமியை விட்டு அகன்று போ! என்னும் கருத்தினை வலியுறுத்தி நிகழ்த்தப்பட்ட இந்த பொம்மலாட்டம் பல பள்ளிகளிலும் நிகழ்த்தப்பட வேண்டும்.
- ஆண்டின் நிறைவு விழாவினை நிறைவானக் கருத்துடன் நிகழ்த்திக்காட்டிய உங்களின் முயற்சிக்கு மீண்டும் என் மனமார்ந்த பாராட்டுகள்.
4. பாய்ச்சல் என்ற கதையின் கருத்தினைக் கூறுக.
பொருளடக்கம் |
முன்னுரைகதைமாந்தர்கள்அனுமார் வேடம் புனைந்த இளைஞன்மகிழுந்தின்(கார்) நுழைவுடன் ஆட்டம் முடிந்ததுபாய்ந்த கலைமுடிவுரை |
முன்னுரை
ஆர்வமும் தன்னம்பிக்கையும் உழைப்பும் உள்ள ஒருவரால் மட்டுமே எந்த ஒரு கலையையும் கற்றுக்கொள்ள முடியும். அவ்வகையில் அழகு என்ற சிறுவன் அனுமார் வேடம் புனைந்த நிகழ்வினை சா.கந்தசாமி எழுதிய ’பாய்ச்சல்’ என்ற கதையின் வாயிலாகக் காண்போம்!
கதைமாந்தர்கள்
- அழகு என்ற சிறுவன்
- அனுமார் வேடம் புனைந்த இளைஞன்
- மேளக்காரன்
- இராமு
அனுமார் வேடம் புனைந்த இளைஞன்
தெருமுனையில் ஒரே சப்தம். ஊருக்குப் புதிதாக வந்த அழகு என்ற சிறுவன் எட்டிப்பார்த்தான் பெரிய குரங்கு மரத்தில் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. பின்னர், நன்கு உற்றுப்பார்த்தப் பின்புதான் தெரிந்தது அது குரங்கல்ல; அனுமார் வேடம் புனைந்த ஒரு இளைஞன் என்று.
சதங்கையொடு மேளமும் நாதசுரமும் இசைக்க, அனுமார் இருகால்களையும் தரையில் உதைத்து நடப்பதும், கடையில் தொங்கிய வாழைத்தாரில் உள்ள பழங்களை மற்றவர்களுக்குக் கொடுத்து ஆடுவதும், வாலைச் சுழற்றி தரையிலடித்து புழுதி கிளப்பிக்கொண்டே ஆடுவதும், குதிப்பதும் தாவுவதும் சுழலுவதுமாக ஆடுவதும் எனப் பலவாறு ஆடினார்.
மேளமும் நாதசுரமும் துரிதமாக ஒலிக்க வாலில் பெரிய தீப்பந்தம் எரிந்தவாறு ஒரு பந்தலின் காலினைப் பிடித்துக்கொண்டு மேலிருந்து கீழே குதித்த அனுமார் தீப்பந்தத்தினைப் பலவாறு சுழற்றி சுழற்றி ஆடினார். இவை அனைத்தையும் ரசித்துக்கொண்டே அனுமாரின் பின்னே நடந்துசென்றான் அழகு.
மகிழுந்து (கார்) நுழைவுடன் ஆட்டம் முடிந்தது
திடீரென கூட்டத்தின் நடுவே ஒரு கார் அனைவரையும் முந்திக்கொண்டு வந்து நின்றது. அனுமார், அந்த காரை காவலன் தடுக்க முற்பட்டபோது அவனைப் பின்னுக்கு இழுத்த காட்சி அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்தது. காரினுள்ளிருந்து ஒருவன் காசுகொடுத்தான். அதை அனுமாரின் அனுமதியுடன் மேளம் இசைப்பவன் பெற்றுக்கொண்டான். பின்னர், அனுமார் ஆடாமல் நடக்க ஆரம்பித்தார். அதைப்புரிந்துக்கொண்ட மக்கள் கூட்டம் கலைய ஆரம்பித்தது. அழகுமட்டும் பின்தொடர்ந்தான்.
பாய்ந்த கலை
அனுமார், ஆட்டத்தினை முடித்துக்கொண்டு ஆலமரத்தில் சாய்ந்தார். சேர்த்த பணத்தினைப் பங்கு போட்டு பிரித்தப்பின் குளக்கரைக்குச் சென்று வேடத்தினை ஒவ்வொன்றாக களைந்தார். அனுமாரையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான் அழகு. அதை கவனித்த அனுமார் அவனை ஆடிக்காட்டும்படி கூறினார். அவனும் அனுமார் ஆடியதுபோலவே ஆடியதால் தன் வேடத்தினை அவனுக்குக் கொடுத்து மீண்டும் ஆடும்படி கூறினார். அவனும் தொடர்ந்து ஆடிக்கொண்டே இருந்தான். அனுமார் வியந்து பார்த்தார். ஒரு கட்டதில் உடன் ஆடிய அனுமார் கீழே தவறி விழுந்தார். அவர் விழுவதுகூடத் தெரியாதபடி ஆட்டத்தில் மூழ்கிப்போனான் அழகு.
முடிவுரை
கலைஞன் ஒருவன், ஒரு கலையைக் கற்றுக்கொள்ளும்போது அடையும் இன்பத்தைவிட, அதைக் காப்பாற்றுவதற்காக அடுத்த தலைமுறைக்குப் பாய்ச்சும்போது அடையும் இன்பத்தையே பெரிதாகக் கருதுகிறான். இங்கு ஆடற்கலை அழகு என்ற சிறுவனுக்குப் பாய்ச்சப்படுகிறது.
மொழிப்பயிற்சி
1. பிறமொழி சொற்களைத் தமிழ் சொற்களாக மாற்றி எழுதுக. (மொ.ஆ)
பிறமொழிச்சொற்கள் | தமிழ் சொல் |
கோல்டு பிஸ்கட் | தங்கக்கட்டி |
யூஸ் | பயன் |
வெயிட் | எடை |
ஆன்சர் | விடை |
ஈக்வலாக | சமமாக |
எக்ஸ்பெரிமென்ட் | பரிசோதனை |
ரிப்பிட் | திரும்பவும் |
ஆல் தி பெஸ்ட் | வாழ்த்துகள் |
2. கலவைச் சொற்றொடராக மாற்றுக. (மொ.ஆ)
(கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்).
கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கியதால் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.
3. ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன், அறையில் உள்ளவர்கள் பேச்சு
தடைபட்டது. (தனிச்சொற்றொடர்களாக மாற்றுக) (மொ.ஆ)
- ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறி சட்டென நின்றது.
- அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது.
4. தொடர் சொற்றொடராக மாற்றுக) (மொ.ஆ)
இன்னாசியர் புத்தகங்களை வரிசைப்படுத்தினார். அவற்றைப் புத்தக அடுக்கங்களில்
அடுக்கிவைத்தார். புத்தகங்களைக் கேட்பவர்களுக்கு எடுத்துக்கொடுத்தார்.
இன்னாசியார், புத்தகங்களை வாரிசைப்படுத்தினார்; அவற்றைப் புத்தக அடுக்கங்களில்
அடுக்கிவைத்தார்; அவற்றை கேட்டவர்களுக்கு எடுத்துக்கொடுத்தார்.
5. ஒயிலாட்டத்தில் குழுவினர் ஒரே நிறத் துணியை முண்டாசு போலக் கட்டிக்கொண்டு,
காலில் சலங்கை அணிந்துகொண்டு, கையில் ஒரு சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும்
ஆடுவர். (தனித் சொற்றொடர்களாக மாற்றுக)
- ஒயிலாட்டத்தில் குழுவினர் ஒரே நிறத் துணியை முண்டாசு போலக் கட்டிக்கொண்டு
ஆடுவர்.
- காலில் சலங்கை அணிந்துகொண்டு ஆடுவர்.
- கையில் ஒரு சிறுதுணியை இசைக்கேற்ப வீசி ஆடுவர்.
6. மனிதனுக்கும் மலருக்குமான மணம் வீசும் இந்த நயவுரையைத் தொடர்க. மொ.ஆ)
வண்டுகளை ஈர்க்கும் வாசனையில்
பூக்களிடம் வசப்படுவது மனிதர்களே!
பூச்சியைக் கவரும் வண்ணங்களில்
பூக்களிடம் விழுவது மனிதர்களே!
பூக்களின் மென்மை மனங்களிளே!
பூமாலை சூடி மணம் மகிழும் மணமக்களே!
7. மொழிபெயர்க்க. (மொ.ஆ)
Therukoothu is, as its name indicates, a popular form of theatre performed in the streets. It is performed by rural artists. The stories are derived from epics like Raamayana, Mahabhartha and other ancient puranas . There are more songs in the play with dialogues improvised by the aritists on the spot. Fifteen to twenty atcors with a small orchestra forms a koothu troupe. Though the orchestra has singer, the artists sing in their own voices. Artists dress themselves with heavy costumes and bright makeup. Koothu is very popular among rural areas.
தெருக்கூத்து
தெருக்கூத்து என்பது தெருக்களில் நடத்தும் கலை நிகழ்ச்சி கிராமப்புற கலைஞர்கள் நடத்துவர். இராமாயணம் , மகாபாரதம் கதைகள் இடம்பெறும். இருபது முதல் முப்பது நடிகர்கள் குழுவாக இருப்பர். கிராமப்புறத்தில் சொந்தக் குரலில் பாடுவர். இவை பிரபலம்.
8. தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக. (மொ.வி)
- வானம் கருக்கத் தொடங்கியது. மழை வரும் போலிருக்கிறது.
- அனைவரின் பாராட்டுகளால், வெட்கத்தில் பாடகரின் முகம் மலர்ந்தது.
- கருணை மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.
- கண்ணுக்கு முழுமையாக இருக்கும் பசுமை புல்வெளிக்கு கதிரவனின் மஞ்சள் வெயில் பரவிக்கிடக்கிறது.
- வெயிலில் அலையாதே; உடல் கருத்து விடும்.
9. பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக. (மொ.வி)
(தங்கும், மரவீடு, மரம்வீடு, அவிழும், தங்கும், தோற்பவை, விருது, தோற்பாவை, கவிழும், விருந்து)
- விரட்டாதீர்கள் – பறவைக்கு மரம்வீடு.
வெட்டாதீர்கள் கண்ட மனிதருக்கு அவைதரும் மரவீடு.
- காலை ஒளியினில் மலரிதழ் அவிழும்.
சோலைப் பூவினை வண்டினம் கவிழும்.
- மலை முகட்டில் மேகம் தங்கும். அதைப் பார்க்கும் மனங்கள் செல்லத்
தயங்கும்.
- வாழ்க்கையில் தோற்பவை மீண்டும் வெல்லும் – இதைத் தத்துவமாய் தோற்பாவை கூத்துச் சொல்லும்.
- தெருக்கூத்தில் நடிகருக்குக் கைத்தட்டலே விருது அதில் வரும் காசு குறைந்தாலும் அது வேயவர் விருந்து.
10. நாட்டுப்புற பாடலுக்கேற்ற சூழலை எழுதுக. (மொ.ஆ)
பாடல் | பாடல் எழுந்த சூழல் |
பாடறியேன் படிப்பறியேன் – நான்தான் பள்ளிக்கூடம் தானறியேன் ஏடறியேன் எழுத்தறியேன் – நான்தான் எழுத்துவகை தானறியேன் படிக்க நல்லா தெரிஞ்சிருந்தா – நான்தான் பங்காளிய ஏன் தேடுறேன் எழுத நல்லா தெரிஞ்சிருந்தா – நான்தான் எதிராளிய ஏன் தேடுறேன் நாலெழுத்துப் படிச்சிருந்தா – நான்தான் நாலு தேசம் போய்வருவேன் நாலு பக்கம் வரப்புக்குள்ளே – தெனமும் நான் பாடுறேன் தெம்மாங்குதான் | பள்ளிக்குச் சென்று படிக்காததால் வங்கி படிவம் பூர்த்தி செய்தல், பால்கணக்கு எழுதுதல், பேருந்து செல்லும் ஊர்பெயரை அறிதல், காப்பீட்டுத் தொகையின் விவரம் அறிதல் முதலிய சிறுசிறு வேலைகளுக்கும் பங்காளியையும் எதிராளியையும் தேடிச்சென்று அவர்களின் உதவியை எதிர்ப்பார்க்க வேண்டியுள்ளது. எழுத படிக்கத் தெரியாததால் வெளியூர்களுக்கும் செல்ல முடியாமல் கிணற்றுத்தவளைப் போலவே உள்ளூரிலேயே இருக்க வேண்டியுள்ளது. |
11. அகராதியைக் காண்க. (மொ.வி)
- தால் – நா அல்லது நாக்கு.
- உழுவை – புலி, மீன் வகையில் ஒன்று (தும்பிலி)
- அகவுதல் – அழைத்தல், ஆடல், கூத்தாடல், குரலெழுப்புதல், ஒலித்தல், பாடுதல்
- ஏந்தெழில் – மிகு வனப்பு, மிகுந்த அழகு
- அணிமை – நுண்மை, நுட்பம், சமீபம், அருகு, அண்மை, பக்கம்
12. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக. (மொ.வி)

ஒயிலாய் ஆடும் ஒயிலாட்டம்!
நிரலாய் நின்று,
நிழலாய் தொடர்ந்து,
வண்ணத்துணியினைக் கையால் அசைத்து,
எண்ணமெல்லாம் எழில் கொண்டு,
மேளத்தின் இசைக்கு ஏற்றாற்போல
ஒயிலாய் ஆடும் ஒயிலாட்டம்,
ஒருங்கிணைந்து செயல்படுதலின் அடையாளம்!
13. கலைச்சொல் (நி.அ.த)
- Aesthetics – அழகியல்
- Artifacts – கலைப்படைப்புகள்
- Terminology – கலைச்சொல்
- Myth – தொன்மம்
14. தமிழகப் பாரம்பரிய கலைகளைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் மேலும் பரவலாகக் நீங்கள்
செய்ய விரும்பவற்றை வரிசைப்படுத்தி எழுதுக. (நி.அ.த)
பிறந்தநாள் விழாக்களில் மயிலாட்டம் முதலான கலைகளை நிகழ்த்த முனைவேன்
எங்கள் குடும்ப விழாக்களில் பொம்மலாட்டம் நிகழ்த்த ஏற்பாடு செய்வேன்.
- எங்கள் ஊரில் கரகாட்டம் நிகழ்த்த முனைவேன்.
- எங்கள் பள்ளியில் புலியாட்டம் நிகழ்த்த முனைவேன்.
- ஓயிலாட்டதில் இருபாலருக்கும் வாய்ப்பு அளிப்பேன்.
- எங்கள் பள்ளியில் தெருக்கூத்து நடத்துவேன்.
- “தப்பு ஆட்டம்” அறிமுகம் செய்வேன்.