பத்தாம் வகுப்பு – இயல் – 3 வினா – விடைத் தொகுப்பு
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது?
அ) கூவிளம் தேமா மலர் ஆ) கூவிளம் புளிமா நாள்
இ) தேமா புளிமா நாள் ஈ) புளிமா தேமா பிறப்பு
2. ’தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை’ – இப்பாடல் அடி
இடம்பெற்றுள்ள நூல் —
அ) புறநானூறு ஆ) தென்றல் விடு தூது இ) சிலப்பதிகாரம் ஈ) நற்றிணை
3. ’அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்’ – இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் —
அ) புறநானூறு ஆ) தென்றல் விடு தூது இ) சிலப்பதிகாரம் ஈ) நற்றிணை
4. ’பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ’ – இப்பாடல் அடி
இடம்பெற்றுள்ள நூல் —
அ) புறநானூறு ஆ) குறுந்தொகை இ) சிலப்பதிகாரம் ஈ) நற்றிணை
5. ’மருந்தே ஆயினும் விருந்தொடு உண்’ – ஔவையாரின் இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் —
அ) கொன்றை வேந்தன் ஆ) குறுந்தொகை இ) சிலப்பதிகாரம் ஈ) நற்றிணை
6. காசிக்காண்டம் – இந்நூலை எழுதியவர்?
அ) இளங்கோவடிகள் ஆ) நப்பூதனார் இ) அதிவீரராம பாண்டியர் ஈ) பாரதியார்
7. வெற்றிவேற்கை என்று அழைக்கப்படும் நூல் ————–
அ) புறநானூறு ஆ) குறுந்தொகை இ) நறுந்தொகை ஈ) நற்றிணை
8. சீவலமாறன் என்று அழைக்கப்படுபவர்————–
அ) இளங்கோவடிகள் ஆ) நப்பூதனார் இ) அதிவீரராம பாண்டியர் ஈ) பாரதியார்
9. மலைபடுகடாம் – இந்நூலை எழுதியவர்?
அ) பெருங்கெளசிகனார் ஆ) நப்பூதனார் இ) அதிவீரராம பாண்டியர் ஈ) பாரதியார்
10. மலைபடுகடாம் – இந்நூலின் வேறுபெயர்————
அ) முல்லைப்பாட்டு ஆ) மதுரைக்காஞ்சி இ)நெடுநல்வாடை ஈ) கூத்தராற்றுப்படை
11. பின் வருவனவற்றுள் முறையானத் தொடர் எது?
அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.
ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
இ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.
ஈ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.
12. ‘சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி’ என்னும் அடியில் பாக்கம் என்பது ——
அ) புத்தூர் ஆ) மூதூர் இ) பேரூர் ஈ) சிற்றூர்
13. அறிஞருக்கு நூல் , அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை
வேறுபடுத்தக் காரணமாக அமைவது ———-
அ) வேற்றுமை உருபு ஆ) எழுவாய் இ) உவம உருபு ஈ) உரிச்சொல்
14. காசிக்காண்டம் என்பது ———–
அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
இ) காசி நகரத்தின் பெருமையைக் குறிக்கும் நூல்
ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
15. ’விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச்
சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான்’ என்கிறது புறநானூறு .
இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை———.
அ) நிலத்திற்கேற்ற விருந்து ஆ) இன்மையிலும் விருந்து
இ) அல்லிலும் விருந்து ஈ) உற்றாரின் விருந்து.
16. ”இல்லறம் புரிவது விருந்தோம்பல் பொருட்டே” என்றவர் யார்?
அ) இளங்கோவடிகள் ஆ) நப்பூதனார் இ) திருவள்ளுவர் ஈ) பாரதியார்
17. ”விருந்தினரும் வறியவரும் நெருங்கி உண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல”
என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்———.
அ) முல்லைப்பாட்டு ஆ) மதுரைக்காஞ்சி இ)நெடுநல்வாடை ஈ) கலிங்கத்துப்பரணி
18. ”உண்டால் அம்ம இவ்வுலகம், இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் , இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே” என்னும் பாடல் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்———–.
அ) முல்லைப்பாட்டு ஆ) மதுரைக்காஞ்சி இ)நெடுநல்வாடை ஈ) புறநானூறு
19. நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்று கொடுத்த உணவுப்பொருளாகச்
சிறுபாணாற்றுப்டை கூறும் உணவுப்பொருள் எது?
அ) குழல் மீன் கறி ஆ) வஞ்சரம் மீன் கறி இ) தினை மாவு ஈ) நெய்யில் பொரித்த கறி
20. அன்று விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, சமைத்து, சிவனடியாருக்கு
வழங்கியவர் மாறன்நாயனார் என்று குறிப்பிடும் நூல்———–.
அ) நற்றிணை ஆ) கலித்தொகை இ) புறநானூறு ஈ) அகநானூறு
21. ஆண்டுதோறும் மினசோட்டா தமிழ்ச்சங்கம் மூலம் வாழையிலை விருந்து வைக்கும் நாடு–.
அ) ரஷ்யா ஆ) சிங்கப்பூர் இ) அமெரிக்கா ஈ) மலேசியா
22. விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாக காசிக்காண்டம் கூறும் ஒழுக்கங்களின்
எண்ணிக்கை——–.
அ) ஒன்பது ஆ) பத்து இ) பன்னிரண்டு ஈ) பதினெட்டு
23. ஒப்புடன் முகமலர்ந்தே உபசரித்து உண்மைப்பேசி உப்பிலாக் கூழிட்டாலும் உண்பதே
அமிர்தம் என்று கூறும் நூல்———-
அ) முல்லைப்பாட்டு ஆ) மதுரைக்காஞ்சி இ)நெடுநல்வாடை ஈ) விவேகசிந்தாமணி
24. முகம் கடுத்து இடுவாராயின் கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே என்று கூறும்
நூல்——
அ) முல்லைப்பாட்டு ஆ) மதுரைக்காஞ்சி இ)நெடுநல்வாடை ஈ) விவேகசிந்தாமணி
25. முத்துக்குளிக்கும் கொற்கையின் அரசர் ————.
அ) இளங்கோவடிகள் ஆ) நப்பூதனார் இ) அதிவீரராம பாண்டியர் ஈ) பாரதியார்
26. வெற்றிவேற்கை – நூலை எழுதியவர்——-.
அ) இளங்கோவடிகள் ஆ) நப்பூதனார் இ) அதிவீரராம பாண்டியர் ஈ) பாரதியார்
27. கொடுக்கப்பட்டுள்ள நூல்களுள் அதிவீரராம பாண்டியர் எழுதாத நூல் எது?
அ) நைடதம் ஆ) லிங்கபுராணம்
இ) மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் ஈ) திருக்கருவை அந்தாதி
28. மலைபடுகடாம் நூலின் அடிகளின் எண்ணிக்கை ————.
அ) 583 ஆ) 584 இ) 582 ஈ) 585
29. மலைபடுகடாம் – இதன் உருவகம் முறையே——–.
அ) யானை – மலை, பல்வகை ஓசை – மதம் ஆ) யானை – மதம், பல்வகை ஓசை – மலை
இ) யானை – மலை, பல்வகை ஓசை – ஆறு ஈ) யானை – மலை, பல்வகை ஓசை – தந்தம்
30. வேண்டிய என்னும் கூட்டுநிலைப் பெயரெச்சம் எவ்வாறு உருவாகின்றது?
அ) பெயரெச்சங்கள், செய என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சத்துடன் சேரும் போது
ஆ) பெயரெச்சங்கள், செய்து என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சத்துடன் சேரும் போது
இ) பெயரெச்சங்கள், செய்யா என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சத்துடன் சேரும் போது
ஈ) பெயரெச்சங்கள், செய்யூ என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சத்துடன் சேரும் போது
31. தொகாநிலைத் தொடர்கள் ———– வகைப்படும்
அ) ஏழு ஆ) எட்டு இ) ஒன்பது ஈ) பத்து
32. எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது——– தொடர்
ஆகும்.
அ) எழுவாய் ஆ) வினைமுற்றுத்தொடர்
இ) விளித்தொடர் ஈ) வினையெச்சத்தொடர்
33. விளியுடன் ———– தொடர்வது விளித்தொடர்.
அ) வினை ஆ) பெயர் இ) வினா ஈ) அடைமொழி
34.வினைமுற்றுடன் —————– தொடர்வது வினைமுற்றுத்தொடர் ஆகும்.
அ) வினை ஆ) பெயர் இ) வினா ஈ) அடைமொழி
35. ————, பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது பெயரெச்சதொடர் ஆகும்.
அ) முற்றுபெறாத வினை ஆ) முற்றுபெறாத பெயர்
இ) வினைமுற்று ஈ) பெயர்
36. ————, வினைச்சொல்லைக் கொண்டு முடிவது வினையெச்சத்தொடர் ஆகும்.
அ) முற்றுபெறாத வினை ஆ) முற்றுபெறாத பெயர்
இ) வினைமுற்று ஈ) பெயர்
37. கட்டுரையைப் படித்தாள். – இது ———– தொடர் ஆகும்.
அ) பெயரெச்சத்தொடர் ஆ) வினையெச்சத்தொடர்
இ) விளித்தொடர் ஈ) வேற்றுமைத்தொடர்
38. மற்றொன்று – இச்சொல்லில் உள்ள இடைச்சொல் எது?
அ) மற்று ஆ) மற்றொன்று
இ) ஒன்று ஈ) மூன்றும்
39. ஒன்றிற்கும் மேற்பட்ட எச்சங்கள் சேர்ந்து பெயரைக்கொண்டு முடிவது ———-.
அ) பெயரெச்சத்தொடர் ஆ) வினையெச்சத்தொடர்
இ) விளித்தொடர் ஈ) கூட்டுநிலைப் பெயரெச்சத்தொடர்
40. கேட்க வேண்டிய பாடல் – இத்தொடர் எவ்வகைத்தொடர்?
அ) பெயரெச்சத்தொடர் ஆ) வினையெச்சத்தொடர்
இ) விளித்தொடர் ஈ) கூட்டுநிலைப் பெயரெச்சத்தொடர்
41. ‘விருந்தே புதுமை’ என்று கூறியவர் ——-.
அ) இளங்கோவடிகள் ஆ) ஔவையார் இ) தொல்காப்பியர் ஈ) அகத்தியர்
42. “பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால், வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும், விருந்தும் அன்றி விளைவன யாவையே” என்னும் பாடல் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்
அ) முல்லைப்பாட்டு ஆ) மதுரைக்காஞ்சி இ)நெடுநல்வாடை ஈ) கம்பராமாயணம்
43. “குரல் உணங்கு விதைத் தினை உரல்வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டன்றோ இலள்” என்னும் பாடல் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்
அ) முல்லைப்பாட்டு ஆ) மதுரைக்காஞ்சி இ)நெடுநல்வாடை ஈ) புறநானூறு
44. ———–, ———- ஆகியோர் ஆட்சி காலத்தில் வழிசெல்வோர்க்காக சத்திரங்கள் அதிகமாக கட்டப்பட்டன.
அ) சேரர், சோழர் ஆ) சோழர், பாண்டியர்
இ) பல்லவர், சோழர் ஈ)நாயக்கர், மராட்டியர்
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
1. விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருகஎன உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்
போமெனில் பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே.
- இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
அ) காசிக்காண்டம் ஆ) கொய்யாக்கனி இ) சிலப்பதிகாரம் ஈ) கம்பராமாயணம்
- இப்பாடலின் ஆசிரியர் யார்?
அ)கம்பர் ஆ)இளங்கோவடிகள் இ)கண்ணதாசன் ஈ)அதிவீரராம பாண்டியர்
- இப்பாடலில் இடம்பெற்றுள்ள அடியெதுகைகளை எழுதுக.
அ) விருந்தினனாக – திருந்துற ஆ) விருந்தினனாக – வியத்தல்
இ) பொருந்து – அருகுற ஈ) பரிந்துநன் – முகமன்
- உரைத்தல் – இலக்கணக்குறிப்புத் தருக.
அ)எண்ணும்மை ஆ)வினைமுற்று இ)பெயரெச்சம் ஈ)தொழிற்பெயர்
5. நன்மொழி பிரித்து எழுதுக.
அ) நன்மை+மொழி ஆ) நல்+மொழி இ) நன்+மொழி ஈ) நல்ல+மொழி
(வியத்தல், உரைத்தல், நோக்கல், எழுதல், இருத்தல் –தொழிற்பெயர்;
நன்மொழி – பண்புத்தொகை; வந்து – வினையெச்சம்; வருக – வியங்கோள் வினைமுற்று)
குறுவினாக்கள்
1. நச்சப் படாதாவன் செல்வம் – இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.
விரும்பப்படாதவன். (பிறருக்கு உதவி செய்யாததால் யாராலும் விரும்பப்படாதவன்)
2. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
- வாருங்கள்!
- அமருங்கள்!
- நீர் அருந்துங்கள்!
- நலமாக உள்ளீர்களா!
- உணவு உண்ணுங்கள்!
- தங்களின் வருகை எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது!
3. ’இறடிப் பொம்மல் பெறுகுவிர்’ இத்தொடர் உணர்த்தும் பொருள் எழுதுக.
சிற்றூருக்குச் சென்றால் அங்கு வெந்த மாமிசத்தின் பொரியலையும், தினைச்
சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள்.
4. தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை
உரலில் இட்டு குத்தி எடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி என்பது இலக்கிய செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.
- விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்று கிடையாது. மனம்தான் இன்றியமையாதது.
- கொடுக்க வேண்டும் அல்லது விருந்தளிக்க வேண்டும் என்ற மனம் மட்டுமே இருந்தால் போதும்.
- மேற்கூறிய இலக்கிய செய்தியே அதற்குச் சான்றாகும்.
5. பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.
- உயிரைவிட சிறப்பாகப் பேணிக் காக்கப்படும் – உயிரினும் ஓம்பப் படும்
- ஊரின் நடுவில் நச்சுமரம் காய்த்தது போன்றது – நடு ஊருள் நச்சுமரம் காய்த்தற்று
- ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் – ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை
6. பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன்
தொடரும் பயனிலைகள் யாவை?
- பாரதியார் கவிஞர் – எழுவாய், பெயர்ச்சொல் பயனிலை
- நூலகம் சென்றார் – எழுவாய், வினைமுற்று பயனிலை
- அவர் யார் – எழுவாய், வினா பயனிலை
7. ’எழுது என்றாள்’ என்பது விரைவு காரணமாக ’எழுது எழுது என்றாள்’ என அடுக்கு
தொடரானது. ’சிரித்துப் பேசினார்’ என்பது எவ்வாறு அடுக்குத்தொடர் ஆகும்?
- சிரித்து சிரித்துப் பேசினார்.
கூடுதல் வினாக்கள்
- காசிகாண்டம் – குறிப்பு வரைக.
- காசி நகரத்தின் பெருமையை உரைக்கும் நூல்
- இந்நூல் துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிமுறைகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றைப் பாடுவதாக அமைந்துள்ளது.
- இதன் ஆசிரியர் அதிவீரராம பாண்டியர் ஆவார்.
- அதிவீரராம பாண்டியன் – குறிப்பு வரைக.
- பெயர் : அதிவீரராம பாண்டியன்
- சிறப்புபெயர் : சீவலமாறன்
- இயற்றிய நூல்கள் : காசிகாண்டம், நறுந்தொகை(வெற்றிவேற்கை)
நைடதம், லிங்கபுராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்மபுராணம்
- நன்னனின் சிறப்புகளாக மலைபடுகடாம் கூறுவது யாது?
- பகைவரைப் பொறாமல் போர் செய்யும் வலிய முயற்சியும் மானமும் வெற்றியும் உடையவன் நன்னன்
- கூத்தன் எதிர்படும் கூத்தரை ஆற்றுப்படுத்திய நிகழ்வை கூறுக.
- பகலில் இளைப்பாறி செல்லுங்கள்; இரவில் சேர்ந்து தங்குங்கள்;
- எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்துகொள்ளுங்கள்.
- சிவந்த பூக்களை உடைய அசோக மரங்களையும் அசையும் மூங்கில்களையும் உடைய பொருத்தமான பாதையில் சென்று சிற்றூரை அடையுங்கள்.
- அங்கு பகைவரைப் பொறாமல் போர் செய்யும் வலிய முயற்சியும் மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள்.
- அங்கு நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச்சோற்றையும் உணவாகப் பெறுங்கள். என்று கூத்தன் எதிர்படும் கூத்தனை ஆற்றுபடுத்தினான்.
- எழுவாய்த்தொடர் என்றால் என்ன?
- எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த்தொடர் ஆகும்.
- காவிரி பாய்ந்தது.
- விளித்தொடர் என்றால் என்ன?
- விளியுடன் வினைத்தொடர்வது விளித்தொடர் ஆகும்.
- நண்பா எழுது.
- வினைமுற்றுத்தொடர் என்றால் என்ன?
- வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது வினைமுற்றுத்தொடர் எனப்படும்.
- பறந்தது பறவை
- பெயரெச்சத்தொடர் என்றால் என்ன?
- முற்றுப் பெறாத வினை, பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது பெயரெச்சத்தொடர் எனப்படும்.
- பறந்த பறவை
- வினையெச்சத்தொடர் என்றால் என்ன?
- முற்றுப் பெறாத வினை, வினைச்சொல்லைக் கொண்டு முடிவது வினையெச்சத்தொடர் எனப்படும்.
- பறந்து சென்றது.
- வேற்றுமைத்தொடர் என்றால் என்ன?
- வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்கள் எனப்படும்.
- நீரைப் பருகினாள்.
- இடைச்சொல் தொடர் என்றால் என்ன?
- இடைச்சொல்லுடன் பெயரோ வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் எனப்படும்.
- மற்றொன்று – மற்று+ஒன்று
- உரிச்சொல் தொடர் என்றால் என்ன?
- உரிச்சொல்லுடன் பெயரோ வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் எனப்படும்.
- சாலப் பசித்தது.
- அடுக்குத்தொடர் என்றால் என்ன?
- ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கி வருவது அடுக்குத்தொடர் எனப்படும்.
- வருக!வருக!
கூடுதல் வினாக்கள் (திருக்குறள்)
- உயிரினும் ஓம்பப்படுவது எது? (அல்லது)
உயிரைக்காட்டிலும் சிறந்ததாக வள்ளுவர் கூறுவது யாது?
ஒழுக்கம்
- ஒழுக்கமுடையோர் அடைவது யாது?
உயர்வு
- ஒழுக்கமிலார் அடைவது யாது?
பழி
- இழுக்கம் என்பதன் பொருள்.
கீழான செயல் (தனக்கும் பிறருக்கும் துன்பத்தைத் தரும் செயல்)
- பலக்கற்றும் கல்லாதவராகக் கருதப்படுபவர் யார்?
உலகத்தோடு பொருந்திவாழத் தெரியாதவர்
- எவற்றால் துன்பம் (நோய்) உண்டாகும்?
ஆசை, சினம், அறியாமை (காமம், வெகுளி, மயக்கம்)
- அரியவற்றுள் அரிதான செயல் எது?
பெரியோரைப் போற்றி துணையாகக் கொள்ளுதல்
- கெடுப்பார் இலானும் கெடுபவர் யார்?
குற்றம் கண்டபோது அக்குற்றத்தைச் சுட்டிக்காட்டி (இடித்துக்கூறும்) நல்வழிப்படுத்தும் பெரியாரைத் துணையாகக் கொள்ளாத மன்னர் கெடுப்பார் இலானும் கெடுவார்.
- நல்லார் ஒருவரின் தொடர்பை விடல் எத்தன்மையது/
பகைவர் பலரைப் பகைத்துக்கொள்வதைவிட பன்மடங்கு (பத்துமடங்கு) தீமை உடையது.
- வழிப்பறிக்கு நிகரான செயல் எது?
தன் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ள மன்னன், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி வரிவிதிப்பது
- முறைசெய்யா மன்னன் எதனை இழப்பான்?
தன் நாட்டை நாள்தோறும் இழப்பான்.
- இசையால் எப்போது பயன் விளையாது?
பாடலோடு பொருந்தவில்லை என்றால் இசையால் பயன் விளையாது.
- கண்களால் எப்போது பயன் விளையாது?
இரக்கம் இல்லாவிட்டால் கண்களால் பயன் விளையாது.
- யாருக்கு இவ்வுயிர் உரிமை உடையது?
நடுநிலையாக நின்று கடமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு இவ்வுலகம் உரிமை உடையது.
- நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் யார்?
விரும்பத்தக்க இரக்க இயல்பைக் கொண்டவர்.
- நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணக்கூடியவர் யார்?
விரும்பத்தக்க இரக்க இயல்பைக் கொண்டவர், பிறர் நன்மை கருதி தமக்கு நஞ்சைக் கொடுத்தாலும் விரும்பி உண்பர்.
- அசாவாமை என்பதன் பொருள்?
சோர்வு அடையாமை.
- செயலை எப்போது முடித்தால் பெருமை தரும்?
சோர்வு அடையாமல் முயற்சியுடன் முடித்தால் .
- தாளாண்மை, வேளாண்மை – இவற்றின் பொருள் என்ன?
விடாமுயற்சி, உதவி
- பிறருக்கு உதவுதல் என்ற உயர்நிலையை அடையக்கூடியவர் யார்? (அல்லது)
பிறருக்கு உதவுதல் என்ற உயர்நிலையை யாரால் அடையமுடியும்?
விடாமுயற்சி என்ற உயர்பண்பைக் கொண்டவர்.
விடாமுயற்சி என்ற உயர்பண்பைக் கொண்டவரால்.
- முயற்சி, முயற்சியின்மை இவற்றின் பயன் என்ன?
முயற்சி செல்வத்தை உண்டாக்கும், முயற்சியின்மை வறுமையை உண்டாக்கும்.
- ‘அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி’ – இத்தொடரின் பொருள் என்ன?
அறிய வேண்டியதை அறிந்து முயற்சி செய்யாதது இழிவாகும்.
- பொறியின்மை ஒருவருக்கு பழியைத் (இழிவை) தருமா? (அல்லது)
ஒருவருக்கு எது பழியைத் தரும்?
ஐம்புலன்களில் ஒன்று குறைந்திருப்பது ஒருவருக்கு பழியைத் தராது. அறிய வேண்டியதை அறிந்து முயற்சி செய்யாததே ஒருவருக்கு பழியைத் தரும்.
- ’ஊழையும் உப்பக்கம் காண்பர்’ – இத்தொடரின் பொருள் என்ன? (அல்லது)
முன்வினையையும் தோற்கடிக்ககூடியவர் யார்?
முயற்சி உடையோர் முன்வினையையும் தோற்கடிப்பர்.
- ’அடுக்கிய கோடி உண்டாயினும் இல்’ – யாருக்கு?
பிறருக்குக் கொடுக்காமலும் தானும் அனுபவிக்காமலும் இருப்பவருக்கு.
- கோடி பொருளைப் பெற்றிருந்தாலும் அதனால் பயன் பெறாதவர் யார்?
பிறருக்குக் கொடுக்காமலும் தானும் அனுபவிக்காமலும் இருப்பவர், பலகோடி பொருளைப் பெற்றிருந்தாலும் அதனால் பயன் இல்லை.
- ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்ததைப் போன்றது எது?
பிறருக்கு உதவி செய்யாததால் ஒருவராலும் விரும்பப்படாதவர் பெற்ற செல்வம்.
- ஒருவராலும் விரும்பப்படாதவர் பெற்ற செல்வம் எதனை போன்றது?
ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்ததைப் போன்றது.
சிறுவினாக்கள்
1. முல்லை நிலத்தில் இருந்தும் மருத நிலத்தில் இருந்தும் கிடைக்கும் உணவு
பொருள்கள் யாவை?
முல்லை நிலத்துக்குரிய உணவுப் பொருள்கள்
- வரகரிசி சோறும், சாமையும், (சிறுதானியம்) காட்டில் கிடைக்கும் உணவுப் பொருட்களான பழங்கள்
- ஆநிரைகளை மேய்க்கும் தொழில் செய்வதால் அவைகளிடமிருந்து கிடைக்கின்ற பால் தொடர்பான உணவுப் பொருள்கள்.
மருதநிலத்து உணவுப் பொருள்கள்
- செந்நெல் சோறும், வெண்ணெல் சோறும், மருத நிலத்தில் பயிரிடும் காய்கறிகள், கீரைகள், பழங்கள் முதலியனவும்.
2. புதிதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை
வைக்க திண்டும் அமைத்தனர்.திருவிழாக்காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும்
அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காணமுடிகிறது. இப்படி
காலமாற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகளை
எழுதுக.
- திருவிழாக்காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பது சில இடங்களில் மட்டுமே காணமுடிகிறது.
- அவர்களும் ஒருவழியில் உறவினர்களாக இருந்தால் மட்டுமே அந்த விருந்துதும்கூட.
- காலமாற்றம், பொருளாதார சூழல், விலைவாசி உயர்வு, கொள்ளை, கொலை முதலிய காரணங்கள் இன்று விருந்தோம்பல் பண்பு மாறுவதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது. ஆனால், அதற்கு மாற்று வழியாகப் பொது இடங்களிலும் திருத்தலங்களிலும் திருவிழாக்களின்போது விருந்தோம்பல் பண்பு இன்றும் தொடர்கிறது.
- வீடுகளில் நல்ல நிகழ்வுகள் நடைபெறும்போது மண்டபங்களில் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் விருந்தோம்பல் செய்கின்றனர்.
3. கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துதலைக் கூத்தராற்றுப்படை எவ்வாறு
காட்டுகிறது?
- நீங்கள் செல்லும் இப்பாதையில் சென்று மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையுங்கள். அங்குள்ளவர்களிடம் பகைவரைத் தண்டிக்காமல் போர் செய்யும் வலிய முயற்சியும் மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள்.
- அதன் பிறகு நீங்கள் உங்கள் வீட்டிற்குப் போவது போலவே அவர்களுடைய வீட்டுக்குள் உரிமையுடன் செல்லலாம்.
- அவர்களும் உறவினர் போலவே உங்களுடன் பழகுவர். நீண்ட வழியைக் கடந்து வந்த உங்களின் துன்பம் தீர இனிய சொற்களைக் கூறுவார்கள்.
- அங்கே நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச் சோற்றையும் உண்ணுவீர்கள் என்று பரிசில் பெற்ற கூத்தன், பரிசில் பெறச் செல்லும் கூத்தனை ஆற்று படுத்தினான்.
4. ’கண்ணே கண்ணுறங்கு
காலையில் நீ எழும்பு
மாமழை பெய்கையிலே
பாடினேன் தாலாட்டு
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு’ –இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை
எழுதுக.
கண்ணே கண்ணுறங்கு – விளித்தொடர்
காலையில் நீ எழும்பு – வேற்றுமைத் தொடர்
மாமழை பெய்கையிலே – உரிச்சொற்றொடர்
மாம்பூவே கண்ணுறங்கு – விளித் தொடர்
பாடினேன் தாலாட்டு – வினைமுற்று த் தொடர்
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு – அடுக்குத்தொடர்
உரைப்பத்தி வினா-விடை
- தம் வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல். விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தில் கருதுகின்றனர். உறவினர் வேறு, விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். அதனால்தான் ‘விருந்தே புதுமை’ என்று தொல்காப்பியர் அன்றே கூறியுள்ளார்.
அ. விருந்தினர் என்போர் யாவர்?
முன்பின் அறியாத புதியவர்கள்
ஆ. விருந்து குறித்து தொல்காப்பியர் கூறியது யாது?
விருந்தே புதுமை
இ. இவ்வுரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.
விருந்து
நெடுவினாக்கள்
- ஆற்றுப்படுத்தல் என்பது அன்றைக்குப் புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை
நோக்கி நெறிபடுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.
விருந்தோம்பல்
தமிழரின் தொன்மை, வீரம் , கொடை முதலிய பண்புகளில் ஒன்று விருந்தோம்பல். அது நமது பண்பாட்டின் அடையாளமாகவும் கணவரும் மனைவியும் ஆற்ற வேண்டிய கடமையாகவும் பண்டைய காலத்தில் கருதப்பட்டது.
இலக்கியத்தில் விருந்தோம்பல்
விருந்தோம்பல் என்பது விருந்தினரை உபசரித்து பாதுகாத்தல் ஆகும். போக்குவரத்து குறைந்திருந்த அக்காலத்தில் வணிகமுறையாக வருபவர்களுக்குப் பசியை நீக்க உணவு கொடுத்து உபசரிப்பதுதான் விருந்து. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் இந்நான்கு நிலத்திற்கும் உரிய உணவு முறைகளும் உபசரிப்பு முறைகளும் இக்காலத்தில் மாற்றம் பெற்றுள்ளன. முன்னோர், புதியவர்களுக்கு உணவு வழங்குவதைக் கொள்கையாக கொண்டிருந்தனர். வள்ளுவரும் இன்முகத்தோடு பரிமாற வேண்டும் என்பார். மணிமேகலையும் அறத்திற்கு எல்லாம் அறமாவது விருந்தோம்பல் என்கிறது. பத்துப்பாட்டில் 81 இடங்களில் விருந்து பற்றி பேசப்படுகிறது.
விருந்தோம்பும் முறைகள்
விருந்தினரை முக மலர்ச்சியுடன் வரவேற்றல், உபசரித்தல், வாயில்வரை சென்று வழியனுப்புதல் போன்ற பல்வேறு நெறிமுறைகளைக் கடைப்பிடித்துள்ளனர் நம் முன்னோர்கள். வள்ளல்கள், தம்மை நாடி வருபவரைத் தெய்வமாகக் கருதி கடமைகளைச் செய்திருக்கிறார்கள். முரசுக் கட்டிலில் தூங்கிய மோசிக்கீரனாரைத் தகடூர் எறிந்த இரும்பொறை கவரி வீசிப் பணிவிடை செய்துள்ளான். அதியமான், ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்து நெடுநாள் பாதுகாத்துள்ளான். அரசர்கள், வள்ளல்கள் மட்டுமல்லாமல் மக்களும் விருந்தினரைப் போற்றி பாராட்டியுள்ளனர்.
இன்றைய நிலையில் விருந்தோம்பல்
தற்போது வணிகம் கருதியோ பல்வேறு பணிகள் கருதியோ வெளியிடங்களுக்கும் வெளிநாட்டிற்கும் செல்பவருக்கு உணவகங்கள், தங்குமிடங்கள், சுற்றுலா விடுதிகள் போன்றவை இருப்பதால் விருந்து உபசரிக்க வேண்டிய தேவையில்லாமல் போய்விட்டது. மேலும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் விழாக்களின்போது செய்யும் விருந்தோம்பலே இன்றைய விருந்தோம்பலாக மாறிவிட்டது.
- அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக்
கோபல்லபுரத்து மக்கள் கதையின் வாயிலாக விளக்குக.
கோபல்லபுரத்து மக்கள் – கி.இராஜ நாராயணன்.
பொருளடக்கம் |
முன்னுரைகதைமாந்தர்கள்குடித்தண்ணீர் கிடைக்குமா?வரட்டும்! வரட்டும்!வயிறு நிறைந்த குழந்தையைப் போல பெயர்ப்பொருத்தம்முடிவுரை |
முன்னுரை
கி. இராஜநாராயணன் எழுதிய, கரிசல் பூமி மக்களின் விருந்தோம்பல் பண்பை விளக்கும் கதையாகிய ’கோபல்லபுரத்து மக்கள்’ என்னும் கதையில் வரும், அன்னமய்யா என்பவரின் பண்புநலன் பற்றியும் பெயர்ப் பொருத்தப்பாட்டினைப் பற்றியும் விரிவாகக் காண்போம்!
கதைமாந்தர்கள்
- அன்னமய்யா
- சுப்பையா
- இளைஞன்
குடித்தண்ணீர் கிடைக்குமா?
சுப்பையாவின் புஞ்சை நிலத்தில் மக்கள் களையெடுத்துவிட்டு, காலைக் கஞ்சியைக் குடிக்க உட்கார்ந்தார்கள். சுப்பையாவின் நிலத்திற்கு அருகில் உள்ள அன்னமய்யாவும் சாலையோரமுள்ள தன் வயலில் அருகம்புல் களையினை எடுத்துக்கொண்டிருந்தான். அப்போது பசியால் வாடி, நடக்கமுடியாமல் தள்ளாடியபடி வாலிபன் ஒருவன் வந்து மரத்தடியில் மயங்கிய நிலையில் அமர்ந்தான். அதனைப் பார்த்த அன்னமையா அவன் அருகில் சென்றான். அவன் அன்னமய்யாவை பார்த்து, “தம்பி, கொஞ்சம் குடிக்க தண்ணீர் கிடைக்குமா?” எனக் கேட்டான். அதற்கு அன்னமய்யா, ”நீச்சுத் தண்ணீர் வாங்கி வரவா?” எனக் கேட்டான். அந்த வாலிபன் நாமே அங்குப் போய்விடலாம் என்பதுபோல் பார்த்தான். இருவரும் நடந்து சென்றனர்.
வரட்டும்! வரட்டும்!
தொலைவில் அன்னமய்யாவுடன் ஒருவன் வருவதைப் பார்த்து, ”அன்னமய்யா யாரோ ஒரு சாமியாரை இழுத்துகிட்டு வரான்” என்று சுப்பையா கூறினான். இதைக் கேட்ட களையெடுப்போர்களில் ஒருவர், ”வரட்டும் வரட்டும் ஒரு வயித்துக்குக் கஞ்சி ஊத்தி நாமும் குடிப்போம்” என்று கூறினார்.
வயிறு நிறைந்த குழந்தையைப் போல
அன்னமய்யா கலசத்திலிருந்த கஞ்சியின் நீத்துபாகத்தைச் சிரட்டையில் ஊற்றிக் கொடுத்தான். கஞ்சியைக் குடித்த வாலிபன், வேப்பமர நிழலைச் சொர்கமாய் நினைத்து அப்படியே படுத்துத் தூங்கிவிட்டான். இதைக் கண்ட அன்னமய்யாவுக்கு மனநிறைவு ஏற்பட்டது. மார்பில் பால்குடித்துக்கொண்டே இருக்கும்போதே வயிறு நிறைந்து அப்படியே தூங்கிவிடும் குழந்தையைப் போலவே தூங்கும் அவ்வாலிபனைப் பார்த்துக்கொண்டே இருந்தான் அன்னமய்யா.
பெயர்ப்பொருத்தம்
தூக்கம் தெளிந்து எழுந்த வாலிபன், ”உன் பெயர் என்ன?” என்று அன்னமய்யாவிடம் கேட்டான். அதற்கு அவன் ”அன்னமய்யா” என்றான். ”எனக்கு இன்று நீ இடும் அன்னம்தான் என் வாழ்வுக்கு மீண்டும் உயிர்கொடுத்தது” என்று மனதுக்குள் கூறினான் அந்த வாலிபன்.
முடிவுரை
வந்தவரை விருந்தினராய் எண்ணி, அருகிலிருந்து உணவளித்து மகிழ்ந்த அன்னமய்யாவின் குணம் நம்மிடம் உருவாக வேண்டும்.
3. உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற
விவரித்து எழுதுக.
- தமிழரின் பண்பாடுகளுள் முதன்மையானது விருந்தோம்பல். நானும் தமிழனாதலால் தம் இல்லம் நாடி வந்தோருக்கு விருந்தோம்பும் நம் பண்பாட்டைப் பின்பற்றும் விதமாக, எங்கள் வீட்டிற்கு வருகைத்தந்த உறவினருக்கு நாங்கள் செய்த விருந்தோம்பல் பற்றி கூறுகிறேன்.
- மதுரையைச் சேர்ந்த என் மாமா குடும்பத்தினர் என் வீட்டிற்கு வந்தனர். அளவில்லா மகிழ்ச்சியுடன் அவர்களை நாங்கள் வருக! வருக! என வரவேற்றோம்.
- அறுசுவை உணவினை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சமைத்து , தலைவாழை இலையில் உணவினை வைத்து இன்முகத்துடன் விருந்தளித்தோம்.
- விருந்துக்குப் பின் அவர்களின் விருப்பப்படி வெற்றிலை கொடுத்தோம்.
- பின்பு அனைவரும் அருகிலுள்ள வீடூர் அணைக்குச் சென்று நீரோட்டத்தினைக் கண்டுகளித்தோம். மாலையில் வீடு திரும்பி பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தோம். இரவு சுவையான புதினா துவையலுடன் சிற்றுண்டியை முடித்தோம்.
- இவ்வாறு எங்கள் சொந்த பணிகளையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு எங்கள் இல்லம் நாடிவந்த விருந்தினருக்கு இன்முகத்துடன் விருந்தோம்பி மகிழ்ந்தோம்.
மொழிப்பயிற்சி
1. பழமொழிகளை நிறைவு செய்க. (மொ.ஆ)
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
விருந்தும் மருந்தும் மூன்று நாள்களுக்கு மட்டும்
அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு
2. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக. (மொ.வி)
சிலை, சீலை – சிலையைத் திரைச்சீலையால் மறைத்திருக்கிறார்கள்
தொடு, தோடு – காதில் உள்ள தோடை கையால் தொடு
மடு, மாடு – மலை மடுவில் ஆடு மேய்ந்தது
மலை, மாலை – மாலை நேரத்தில் அதிகமான மேகம் மலையில் தவழும்
வளி, வாளி – வளியை வாளியில் அடக்க முடியாது.
விடு, வீடு – கீழான பண்பை விடு; உன் வீடு நல்லறம் பூணும்.
3. மொழிபெயர்க்க. (மொ.ஆ)
Respected ladies and gentlemen, I am Ilangovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture . Sangam literature shows that Tamils were best in vulture and civilization about two thousand years ago. Tamils who have defined grammar for language have also defined grammar for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, England and worldwide. Though our vulture is very old, it has been updated consistently. We should feel proud about our culture. Thank you one and all.
தமிழர் பண்பாடு
மதிப்பிற்குரிய சகோதர சகோதரிகளே, என் பெயர் இளங்கோவன். நான் பத்தாம் வகுப்பு படித்துவருகிறேன். நான் நமது தமிழ்ப்பண்பாடு குறித்து ஒரு சில சொற்கள் சொல்ல வருகின்றேன். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்தவர்கள் என்று , சங்க இலக்கியம் தெரிவிக்கின்றன. மொழிக்கு இலக்கணத்தை வரையறுத்த தமிழர்கள், வாழ்க்கையின் இலக்கணத்தையும் வரையறுத்துள்ளனர். தமிழ்ப்பண்பாடு இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து என உலகலாவிய நிலையில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை முறையிலும் வேரூன்றி இருக்கிறது. நமது பண்பாடு மிகவும் பழமையானது. எனினும், ஒவ்வொரு நாளும் புதிப்பிக்கப்பட்டு வருகிறது. நமது பண்பாடு பற்றி நாம் பெருமைப்படுவோம் . அனைவருக்கும் நன்றி.
4. பத்தியைப் படித்துக் கருத்தைச் சுருக்கி எழுதுக. (மொ.ஆ)
பழையசோறு
பச்சை நெல் வயலைக் கண்கள் முழுதும் சுமந்து, இளநெல்லை நுகர்ந்து, அதன் பாலை ருசித்து, நீராவியில் அந்த நெல் அவியும் கதகதப்பான புழுங்கல் மணம்வரை சுவைத்தவள் நான். அவித்து, காய்ந்து, குத்திய அந்தப் புழுங்கள் அரிசியை, அதன் வழவழப்பை, கடுப்பு மணத்தை, சோறாகு முன் கைநிறைய அள்ளி வாயில் போட்டு நெரித்து மென்றவள் சொல்கிறேன். பகலெல்லாம் உச்சி வெயிலுக்கு அது சுடச்சுடப் புழுங்கலரிசிச் சோறு. இரவு முழுவதும் அந்த சோறு நிரில் ஊறும். விடிந்த இந்த காலையில் அதன் பெயர் பழையசோறு அல்லது பழையது. காத்திருந்து, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் கடித்து நீராகாரம்போல் குடிப்பது ஒரு வகை. வாழை இலையில் அந்த பழையச் சோற்றைப் பிழிந்து போட்டால், வடுமாங்காய் அல்லது உப்பு நாரத்தங்காய் அதனுடன் சேர்ந்துகொள்ளத் துடிப்பது இன்னொரு வகை. சுண்டவைத்த முதல்நாள் குழம்பு இன்னும் உச்சம்! நல்ல பழையது மாம்பழ வாசம் வீசுமாம். பழைய சோறு – அது கிராமத்து உன்னதம்.
”மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து” ….; முக்கூடற்பள்ளு.
பழையசோறு
வயலில் நெல் நாற்றை நட்டதிலிருந்து அது அறுவடை ஆனவரையிலும், அதன் ஒவொவொரு நிலையிலும் இருந்து பெற்ற புழுங்கல் அரிசியை உண்டவள் நான். அது சோறாகும் முன்பே அதில் சிறிது அரிசியை உண்ணும் பழக்கமுடையவள் . கிராமத்து உணவாகிய பழங்கஞ்சியை வெங்காயம் மிளகாயுடன் உண்டவள் நான். மாம்பழம் சுவை வீசும் பழைய கஞ்சியை முதல்நாள் சுண்டிய குழம்புடன் உண்பது உன்னதம். பழைய சோறே உழைப்பவருக்கு அமுதம்.
5. உங்கள் உதவியால் மனம் மகிழ்ந்த நிகழ்வினைக் கதையாக்குக. (மொ.ஆ)
உதவி
தினந்தோறும் பள்ளிக்குச் செல்லும் வழி அது. அன்றொருநாள் ஒரு பேருந்து நிறுத்தம் அருகில் சென்றுகொண்டிருந்த போது தொலைபேசியில் அழைப்பு வந்தது. என் அப்பா, வண்டியை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டிருந்தார். நான் அந்த இடத்தை உற்றுப் பார்த்தேன். தூரத்தில் ஒரு கை எங்களை அழைத்தது. சிறிது நேரத்தில் அப்பா வண்டியை இயக்க ஆரம்பித்தார். “அப்பா, நில்லுங்கள் தூரத்திலிருந்து யாரோ நம்மை நிற்கும்படி கைக்காட்டுகிறார்கள் “ என்றேன். அவரும் திரும்பிப்பார்த்தார். அதற்குள்” நானும் உங்களோடு வரலாமா” என்ற குரல் அருகில் கேட்டது. நின்று பார்த்தால் கல்லூரியில் படிக்கும் ஒரு அக்கா. நாங்கள் மூவரும் புறப்பட்டோம். ” நுழைவுச்சீட்டை எடுக்காமல் வந்துவிட்டேன். அதனால்தான் திரும்பப் போய் எடுத்துக்கிட்டு வருகிறேன்” என்று அந்த அக்கா சொன்னாங்க.
”இந்த ஊருக்கு பஸ் இல்லையா” என்று அப்பா கேட்டார். ”இப்பதான் போச்சி”என்றாள் அந்த அக்கா. மூவரும் பேசிக்கொண்டே சென்றதில் நேரம் போனது தெரியாமல் அந்த அக்கா படிக்கும் கல்லுரி இருக்கும் இடம் வந்தது. அப்பா வண்டியை நிறுத்தினார். கல்லூரியினுள் மணியடிக்கும் ஒலி கேட்டது. அந்த அக்கா எங்களைப் பார்த்து நன்றி கூறிவிட்டு அவசர அவசரமாகப் போனாங்க.
6. கலைச்சொல் அறிக. (மொ.வி)
- Classical literature – செவ்விலக்கியம்
- Epic literature – காப்பிய இலக்கியம்
- Devotional literature – பக்தி இலக்கியம்
- Ancient literature – பண்டைய இலக்கியம்
- Regional literature – வட்டார இலக்கியம்
- Folk literature – நாட்டுபுற இலக்கியம்
- Modern literature – நவீன இலக்கியம்
7. அகராதியைக் காண்க.(மொ.வி)
ஊண் – உணவு திணை – ஒழுக்கம், நிலப்பிரிவு
ஊன் – இறைச்சி, உடம்பு தினை – சிறுதானியம்
அண்ணம் – மேல்வாய் வெல்லம் – இனிப்புப் பொருள்
அன்னம் – சோறு, ஒருவகை பறவை வெள்ளம் – நீர்ப்பெருக்கு
8. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக. (மொ.வி)

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புக!
நன்றியுள்ள விலங்கு நாய்!
கொடுப்பவரை உள்ளவரை மறக்காது!
ஏழைகளிடம்தான் இருக்கிறது உயிரினங்களுக்கு உதவகின்ற எண்ணம்
இருப்பவர்கள் மனிதருக்கே கொடுப்பதில்லை.
விலங்குகளுக்கா கொடுப்பார்கள்?
இந்த பொருளில்லாத சிறுமிதான்
உண்மையான பணக்காரி!
கொடுப்பதற்குப் பணம் அவசியமில்லை;
குணம்தான் தேவை!
9. கவிதையைத் தொடர்க. (மொ.வி)

மூழ்குகிறது மனித நேயம்
தண்ணீர் நிறைந்த குளம்
தவித்தபடி வெளிநீட்டும் கை
கரையில் கைபேசி படமெடுத்தபடி
அழிக்கத்துடிக்கும் காலன் கையில்,
சுயநலக் கலாச்சாரம் பையில்
நீருக்குள் மனித உயிரும்
வெளியில் மனித நேயமும்
ஒட்டுமொத்தமாய் மூழ்குகிறது.
10.விடுபட்ட எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு
நூலின் பெயரைக் கண்டுபிடிக்க. (மொ.வி)
இறகு (பறவையிடம் இருப்பது)
குருதி (சிவப்பு நிறத்தில் இருக்கும்)
வாள் (மன்னரிடம் இருப்பது)
அக்கா( தங்கைக்கு மூத்தவள்)
மதி (அறிவின் மறுபெயர்)
படகு ( நீரில் செல்வது)
11. கதைக்குப் பொருத்தமான குறளைத் தேர்வு செய்து காரணத்தை எழுதுக. (க.க.பி)
”சின்னச்சாமி… யாரோ மரத்தோரமா நிற்கிறாங்க… யாராய் இருக்கும்…” மாட்டு வண்டிய ஓட்டிக்கிட்டே அப்பா கேட்டார்.
“தெரியலப்பா…”
வாட்டசாட்டமாய், கண்ணாடியும் அலைபேசியும் கையுமாய் சாலையோரத்தில் வண்டியுடன் ஒருவர் நின்றிருந்தார்.
“ஐயா.. நீங்க..”
”வெளியூருப்பா.. வண்டி நின்னு போச்சு..!”
”அப்படியா… வண்டியத் தூக்கி மாட்டு வண்டியில வச்சுட்டு வாங்க. மழை வர்ற மாதிரியிருக்கு… ஊரு ரொம்ப தூரம்.. வேற வண்டியும் வராது…”
அவர் உடையையும் உழைத்துக் களைத்த வியர்வை பொங்கிய உடலையும் பார்த்து வரலைன்னுட்டார். மூன்று நான்குபேர்தான் வண்டியில இருந்தோம்.. சிறிது தூரம் போறத்துக்குள்ள மழை கொட்டுக்கொட்டுன்னு கொட்டிருச்சு.. நாங்க வீட்டுக்குப் போயிட்டோம். இரவுல தூங்க போறப்ப.. அப்பா சொன்னார். தம்பி… அந்த சூட்டுக்காரர் மழைத் தாங்காம நடந்திருக்காரு. தேங்கா விழுந்து மண்ட உடைஞ்சு…வேற யாரோ தூக்கிட்டு வந்திருக்காங்க. நம்ம ஊரு ஆசுபத்திரியில… கட்டுப்போட்டுக்கிட்டு இருந்தாங்க.. பாவம் படிச்சவரா இருக்காரு… சூழ்நிலை புரியாம … வரமாட்டேனு சொன்னாரு, இப்ப வேதனைப்பட்டாரே…
அ) உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
ஆ) பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
இ) ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
கதைக்குப் பொருத்தமான குறள்
”உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.”
காரணம்
பார்பதற்குப் படித்ஸ்தவன் போன்றும் வசதியானவன் போன்றும் இருந்த அந்த இளைஞன், கிராமப்புறத்தவரின் தோற்றத்தை மட்டுமே பார்த்தானே தவிர, அங்கு நிலவிய சூழலைப் புரிந்துகொண்டு அவர்களுடன் பயணிக்கவில்லை. எனவே, அவன் விபத்துக்கு உள்ளானான். நாம் எவ்வளவுதான் கற்றிருந்தாலும் உலகத்தோடு பொருந்தி வாழத்தெரியாதவர்களாக இருந்தால் கல்லாதவர்களாகவே கருதப்படுவோம். அந்த இளைஞனும் அவ்வாறே…
கற்பவை கற்றபின்
- கீழ்க்காணும் பத்தியில் உள்ள தொடர்களை எடுத்து எழுதுக.
மாடியிலிருந்து இறங்கினார் முகமது. அவர் பாடகர். பாடல்களைப் பாடுவதும் கேட்பதும் அவருக்குப் பொழுதுபோக்கு. அவரது அறையில் கேட்ட பாடல்களையும் கேட்காத பாடல்களையும் கொண்ட குறுந்தகடுகளை அடுக்கு அடுக்காக வைத்திருப்பார்.
விடை:
இறங்கினார் முகமது – வினைமுற்றுத்தொடர்
அவர் பாடகர் – எழுவாய்த்தொடர்
பாடுவதும் கேட்பதும் – எண்ணும்மை
கேட்ட பாடல்களையும் கேட்காத பாடல்களையும் – எண்ணும்மை
அடுக்கு அடுக்காக – அடுக்குத்தொடர்
- வண்ணச் சொற்களின் தொடர்வகைகளை எழுதுக.
பழகப் பழகப் பாலும் புளிக்கும் – அடுக்குத்தொடர்
வந்தார் அண்ணன் – வினைமுற்றுத்தொடர்
வடித்த கஞ்சியில் சேலையை அலசினேன். – பெயரெச்சத்தொடர்
அரிய கவிதைகளின் தொகுப்பு இது – வேற்றுமைத்தொடர்
மேடையில் நன்றாகப் பேசினார் – இடைச்சொல் தொடர்