தமிழர்களின் பண்பாட்டு விழாவான பொங்கல் திருவிழா, தமிழரின் வாழ்வியலோடு, குறிப்பாக உழவுத் தொழில் செய்து வரும் சமூகத்தோடு இணைந்த நன்றி தெரிவிக்கும் விழாவாகும்.
உழவர்கள் தமது உழைப்பிற்கும் தங்களுக்கு உதவிய இயற்கை மற்றும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழாவை கொண்டாடி வருகின்றனர்.
பயிர்த்தொழில் செய்பவர்களின் வாழ்வின் உற்பத்தி சார்ந்த இந்த விழா மத உணர்வும், இன உணர்வும் கடந்து பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பாட்டின் வெளிப்பாடாகவே கொண்டாடப்பட்டு வருகின்றது.
பல ஆண்டுகளாக உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வரும் இந்த பொங்கல் விழா எப்போது துவங்கியது?
முதலில் எப்படிக் கொண்டாடப்பட்டது?
பொங்கலுக்கு இருந்த மற்றொரு பெயர்
தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினை பற்றி கல்வெட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் பிபிசி தமிழிடம் தொலைபேசியில் விவரித்தார்.
பொங்கல் என்ற வார்த்தையின் வரலாறு குறித்து அவர் பேசுகையில், “கடந்த காலங்களில் பொங்கல் என்ற வார்த்தை நேரடியாக பயன்படுத்தப்படவில்லை என்ற போதிலும் அதற்கான மாற்று வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அக்காலத்தில் இது ‘அறுவடை திருவிழா’ என்று அழைக்கப்பட்டது. அதே நேரத்தில் தற்போது இந்த விழாவை ‘மகர சங்கராந்தி’ என்று பிற மொழி பேசுபவர்கள் கொண்டாடி வருகின்றனர்,” எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “ஏனென்றால், அக்கால அரசர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளின் எல்லை பரந்து விரிந்திருந்தது ஒரு காரணம். எனவே அந்தந்த பகுதி மக்களின் சொல் வழக்கிற்கு ஏற்ப பேசிய மொழி அடிப்படையில் பொங்கல் பண்டிகையை குறிக்க வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன,” என தெரிவித்தார்.
சோழர் காலத்தில் பொங்கல் எப்படி கொண்டாடப்பட்டது?
சோழர் காலத்தில் பொங்கல் எவ்வாறு கொண்டாடப்பட்டது எனக் கூறிய குடவாயில் பாலசுப்ரமணியன், “பொங்கலைப் பற்றிய வரலாற்று ஆதாரம் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் கிடைக்கிறது. முதலாம் ராஜேந்திரன் காலத்து திருவொற்றியூர் கல்வெட்டு `புதியீடு விழா’ எனப் பொங்கலைக் குறிக்கிறது. புதியீடு என்பது முதல் அறுவடை எனப்படும்.
“அதேபோல் கங்கைகொண்ட இராஜேந்திர சோழன் கால கல்வெட்டில் ‘மகர சங்கரமணப் பெரும் பொங்கல்’ என்ற குறிப்பு உள்ளது.
“ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தைப்பொங்கல் தினத்தில் ராஜேந்திரசோழன் தனது பரிவாரங்களோடு காவிரியில் புனித நீராடியதற்கான கல்வெட்டு ஆதாரமுள்ளது,” என்று கூறினார்.
மேலும் கூறுகையில், “புறநானூற்றுப் பாடலிலும், பரிபாடலிலும் பொங்கல் விழா குறிப்பிடப்படுகிறது. அறுவடை திருநாளான பொங்கல் விழாவினை,
‘நெற்பல பொலிக! பொன் பெரிது சிறக்க…’
எனப் பழந்தமிழ் இலக்கியமான ஐங்குறுநூறு கூறுகிறது.
தமிழர்களின் தனித்துவமான விழாவான பொங்கல் பற்றி சீவகசிந்தாமணியில் ‘மங்கையர் வளர்த்த செந்தீப்புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்’ எனும் வரிகள் மூலம் அறிய முடியும்,” என்று கூறினார்.
‘சங்க இலக்கியத்தில் பொங்கல் பற்றி நேரடி தரவு இல்லை‘
பொங்கல் அன்று இறை வழிபாடு எவ்வாறு இருந்தது என்று விளக்கிய குடவாயில் பாலசுப்ரமணியன், “சங்க இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் பொங்கல் பற்றிய நேரடிதரவுகள் இல்லாவிடினும் சில உவமைகளை எடுத்துரைக்கப்பட்டுள்ளன. உத்தராயணசங்கராந்தி நாளை தை முதல் நாளாக அறிஞர்கள் கூறுகிறார்கள்,” எனத் தெரிவித்தார்.
மேலும், “அந்த நன்நாளிலே முதலாம் பராந்தகனின் வெள்ளூர் போரிற்கு பழுவேட்டரையர் சார்பாக படையை தலைமை தாங்கிய பரதூரை சேர்ந்த படைப்பேரரையன் நக்கன்சாத்தன் என்பவர், இன்றைய கீழப்பழூவூர் ஆலந்துறையார் இறைவனுக்கு ஆண்டு தோறும் தைத்திருநாள் அன்று ஐந்துநாழி நெய்யால் அபிஷேகம் செய்ய பத்து ஆடுகளை தானம் செய்வார்.
“அதுமட்டுமன்றி, பழுவேட்டரையர் கண்டன் அமுதனின் பிறந்த நட்சத்திரம் புனர்பூசத்தில் மாதந்தோறும் இரண்டு நாழி நெய்யால் அபிஷேகம் செய்ய இருபத்து நான்கு ஆடுகளும்.
“தீபத்திருநாளாம் கார்த்திகை தோறும் நெய் அபிஷேகத்திற்கு ஒருநாழி நெய்க்கு ஆறு ஆடுகளும் கார்த்திகை விளக்கு எரிப்பதற்கு ஐந்து ஆடுகளும் தானம் தந்து தைத்திருநாளையும் தீபத்திருநாள் விழாவையும் சிறப்பித்துள்ளார்,” என்று விரிவாக கூறினார் எழுத்தாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன்.
கி.பி 10-ஆம் நூற்றாண்டில் கொண்டாடப்பட்ட பொங்கல்
விழுப்புரத்தைச் சேர்ந்த அறிஞர், அண்ணா கலை அறிவியல் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ் பிபிசி தமிழிடம் பொங்கலின் வரலாறு குறித்து பேசினார்.
அவர் கூறுகையில், “பேரரசன் இராஜராஜசோழனுடைய பாட்டன் அரிஞ்சய சோழன் (கி.பி. 956-7) ஆவான். அவனுடைய மனைவி வீமன் குந்தவை என்று அழைக்கப்படும் அரசி கல்யாணி ஆவார்.
“அரசி கல்யாணி பற்றி மூன்று கல்வெட்டுகள் உள்ளன. மூன்றும் அரசி கல்யாணி வழங்கிய அறக்கொடைகளைத் தெரிவிக்கின்றன.
கி.பி. 968-இல் சுந்தரசோழனின் ஆட்சிக் காலத்தில் அவள் உடையார்குடியில் உள்ள சிவன் கோயிலுக்கு அறக்கொடை வழங்கியுள்ளார்,” என தெரிவித்தார்.
மேலும், “சங்கராந்தி அன்று, அந்த உடையார்க்குடி சிவன் கோயிலில் உள்ள ‘திரு நந்தீசு வரத்துப் பரம சுவாமி’க்குத் திருமுழுக்கு ஆட்டுவதற்காக ஆயிரம் குடம் நீரினைக் கொண்டு வந்து கோயிலில் சேர்ப்பவருக்கு ஊதியம் அளிப்பதற்கு ஒன்றரை ‘மா’ நிலத்தை மானியமாக அக்கோயிலுக்கு அளித்துள்ளார்.
இதிலிருந்து கி.பி. பத்தாம் நூற்றாண்டு அளவில் சங்கராந்தித் திருநாள் தமிழகத்தின் கோயில்களில் கொண்டாடப்பட்ட செய்தியை நாம் தெரிந்து கொள்ள முடியும்,” என பேராசிரியர் ரமேஷ் தெரிவித்தார்.
மேலும், “கண்டராதித்த சோழரின் மனைவியான செம்பியன் மாதேவியார், தம் மகன் உத்தம சோழனுடைய ஆட்சிக் காலத்தில் செம்பியன் மகாதேவி சதுர்வேத மங்கலத்தில் (நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள ஊர்) ‘கைலாசமுடைய மகாதேவருக்கு’ ஒரு கற்கோயிலைச் செம்பியன் மாதேவியாரே கட்டினர்.
அந்தக் கோயிலில் சங்கராந்தி நன்னாளில், கைலாசமுடைய மகாதேவருக்குத் திருமுழுக்கு ஆட்டுவதற்கும், நந்தாவிளக்கு எரிப்பதற்கும், நூறு பிராமணர்களுக்குப் பொங்கல் சோறு அளிப்பதற்கும் தேவையான வருவாயை அளிக்கத் தக்க வகையில், நன்செய் நிலத்தை அக்கோயிலுக்கு அரசி தானமாகக் கொடுத்து இருக்கிறார் என்று உள்ளது,” என பேராசிரியர் ரமேஷ் தெரிவித்தார்.
மேலும், இக்கல்வெட்டின் வாசகத்தில் `உத்தராயண சங்கராந்தி’ எனும் வரியும், `பொங்கல் சோறு’ எனும் வரியும் வருகின்றன.`பொங்கல் விழா’ கோயில்களிலும் கொண்டாடப்பட்டதை இக்கல்வெட்டு உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
சோழர்கள் ஆட்சி வரை சங்கராந்தி விழா என்று கொண்டாடப்பட்டு வந்த பொங்கல் விழா விஜயநகர பேரரசின் காலத்தில், பெரிய விழாவாக மாறியிருக்கலாம் என அவர் தெரிவித்தார்.
தஞ்சை மராட்டியர் காலத்தில், மகர சங்கராந்தி அன்று, வாழை கட்டி, பொங்கல் செய்து கொண்டாடியதாக, ஆவணங்கள் குறிப்பிடுவதையும் பேராசிரியர் ரமேஷ் தெரிவித்தார்.
போர்ச்சுக்கீசியரின் நூல் ஆதாரம்
மேலும் பேசிய ரமேஷ், “கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் அப்பே ஜே.ஏ.துப்வா (J A Dubois) எனும் போர்ச்சுக்கீசியர் இந்தியாவிற்கு வந்துள்ளார். அவர் தென்னிந்தியா முழுவதையும் சுற்றி, இந்து மக்களிடையே அவர் கண்டவற்றையும் கேட்டவற்றையும் ‘இந்துக்களின் பழக்க வழக்கங்களும் வாழ்க்கை முறையும்’ (Hindu Manners, Customs, and Ceremonies) எனும் நூலினை எழுதியுள்ளார்.
“அதில், தென்னகத்தில் கொண்டாடப்படும் `பொங்கல் விழாவினை’ . உழவர்களுடைய அறுவடைத் திருநாளாகவும், சங்கராந்திப் பண்டிகையாகவும் ஊர்கள் தோறும் எவ்வாறு அது கொண்டாடப்பட்டது என்பதை அவர் விரிவாக எழுதியுள்ளார்,” என்று கூறினார்.
“தமிழ்நாடு என்பது அந்த காலத்தில் பல்வேறு பகுதிகளை குறிப்பாக ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. எனவே, பலவகை மொழி பேசுபவர்களும் இங்கு இருந்தனர். எனவே, அந்த பகுதி மக்கள் பேசும் மொழிகளுக்கு ஏற்ப அறுவடை திருநாள், சங்கராந்தி என கொண்டாடி மகிழ்ந்தனர்,” என பேராசிரியர் ரமேஷ் கூறினார்.